Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

''பெண்கள் என்பதாலேயே சம்பள உயர்வு, பணி உயர்வு கிடையாது'' - அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்!

பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவம் சார்ந்த உரையாடல்கள் இன்றைக்குச் சமூகத்தில் அதிகரித்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இந்த விஷயங்கள் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது ஆய்வுக்குரியது!

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 85% பேர், தாங்கள் பெண்கள் என்பதாலேயே சம்பள உயர்வு, பணி உயர்வு, பணி சார்ந்த வாய்ப்புகள் ஆகியவற்றைத் தவறவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலைச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

Also Read: பெண்கள் மீதான ஜட்ஜ்மென்ட்கள்... நீங்கள் என்ன செய்வீர்கள் தோழிகளே? #StopJudgingWomen #AvalVikatanPoll

லிங்க்ட்இன் நிறுவனம், ஜிஎஃப்கே என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக் கணிப்பின் மூலம் இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

‘லிங்க்ட்இன் ஆப்பர்சூனிட்டி இன்டெக்ஸ் 2021’ என்ற இந்தக் கருத்துக் கணிப்பு, இந்த ஆண்டு ஜனவரி 16 தொடங்கி ஜனவரி 31 வரை இணையம் வழியாக நடைபெற்றது. 18 முதல் 65 வரை உள்ள சுமார் 10,000 பேர் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்திருந்தனர். இந்தியாவில் மட்டும் 2,285 பேர் பங்கெடுத்தனர்.

பணிக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் காலையில் தங்கள் குடும்ப மற்றும் வீட்டு வேலைகளை முடித்தபிறகே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு பணிக்குச் செல்கின்றனர். இத்தகைய குடும்பப் பொறுப்புகளை நிர்வகிப்பதனால் பணி சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாக 10-ல் 7 பெண்கள் கூறுகின்றனர்.

குடும்பப் பொறுப்புகள் | Family

இந்தியாவில் பாலின சமத்துவம் தங்கள் பெற்றோர் காலத்தைவிட இப்போது மேம்பட்டிருப்பதாக 66% பேர் கருதுகின்றனர். ஆனால், உங்கள் பணி வாய்ப்பு குறித்து ஏன் அவநம்பிக்கையோடு இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தங்கள் நிறுவனம் ஆண்களுக்கே சாதகமாக இருக்கிறது என இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் ஐந்தில் ஒருவர் கூறுகின்றனர். மேலும், ஆண்களைவிட தங்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாக 37% பெண்கள் கருதுகின்றனர்.

Also Read: `#MeToo இருக்கட்டும்.. உலகப் பாலினப் பாகுபாடு அறிக்கையில் பெண்களுக்கான இடம் என்ன தெரியுமா..?!'

பாலினப் பாகுபாடு, குடும்பப் பொறுப்புகளுடன் கொரோனா பெருந்தொற்று பெண்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை குடும்பத்திலும், பணி சார்ந்து ஏற்படுத்தியிருக்கிறது. எனவே பணியிடங்களில் பன்மைத்துவம், நெகிழ்வுத்தன்மை, ஆகியவற்றோடு பெண்களின் பங்கெடுப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று லிங்க்ட்இன் ஆப்பர்சூனிட்டி இன்டெக்ஸ் பரிந்துரைக்கிறது!



source https://www.vikatan.com/social-affairs/women/indian-women-miss-work-benefits

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக