`விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் தி.மு.க சார்பில் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம், மாநாடு போல் பிரமாண்டமாக இன்று நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, திருச்சியில் 11-வது மாநில மாநாடு நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கான தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாநாட்டைச் சிறப்பு பொதுக்கூட்டமாக நடத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, திருச்சி-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையான சிறுகனூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 350 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்துக்காக 90 அடி உயரக் கொடிக்கம்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read: ‘பெரியண்ணன்‘ மனோபாவத்தில் தி.மு.க... குமுறும் கூட்டணிக் கட்சிகள்!
சிறப்பு பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 250 அடி பிரமாண்டமான எல்.ஈ.டி டிஸ்ப்லே அமைக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. `தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தவும், கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களை முதல்வராகப் பதவி ஏற்பதற்கான முன்னோட்டமாகவும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது' என முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார்.
இன்று நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை வெளியிடவிருக்கிறார் . தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களை வெளியிடவிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் முதல் இடம்பெறக்கூடிய வகையில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பதற்கான தலைவரின் மாபெரும் கனவு அறிவிக்கப்படவிருக்கிறது.
சிறப்பு பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக செய்து தனக்கு கொடுத்த டாஸ்க்கை நிறைவேற்றியிருக்கிறார் நேரு. தொண்டர்கள் அமர மட்டும் சுமார் ஐந்து லட்சம் சேர்கள் வரவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை 11 மணியளவில் விமானம் மூலமாகத் திருச்சி வருகிறார். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மதியம் 1 மணி அளவில் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். பின்பு மாலை 4 மணியளவில் மேடை ஏறுகிறார். `கட்சியின் அடுத்த எதிர்காலமே...’ என்கிற போஸ்டர்களும், உதயநிதியைப் புகழ்ந்துவைத்த பாதாதைகளும் பல இடங்களில் தென்படுகின்றன.
source https://www.vikatan.com/news/politics/trichy-dmk-conference-ready-with-huge-arrangements
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக