ஒவ்வொரு தேர்தல் நெருக்கத்திலும் இரு திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என பல சமுதாய இயக்கங்களும், சிறிய அமைப்புகளும், லெட்டர் பேட் கட்சிகளும் வாண்டடாக வந்து வண்டியில் ஏறிக்கொள்வார்கள்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அ.தி.மு.க-வுக்கே ஆதரவு அளித்து வந்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். தற்போது ஜெ. இல்லாத காரணத்தாலும், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் காரணத்தாலும் இந்த முறை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
வேறு யாருக்கு ஆதரவு கொடுக்கலாம், என்பது குறித்து விவாதிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் மார்ச் 7-ம் தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், "தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, மய்யம் என எல்லாக் கட்சிகள் குறித்தும் விவாதித்தோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் பாசிசத்தை எதிர்க்கும் வகையில் வரலாற்றில் முதன் முறையாக தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்து இருக்கிறோம். மேலும், முஸ்லிம்கள் வாக்கு சிதறாமல் இருக்க, எஸ்.டி.பி.ஐ, ம.ஜ.கவை அழைத்துப் பேசி அவர்களையும் இணைக்க வேண்டும். தனியரசு, கருணாஸ் போன்றோரையும் அழைத்து இணைக்க வேண்டும். ஓரு ஓட்டுகூட சிதறக்கூடாது.
அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதால் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வாழும் வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தி.மு.க கூட்டணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாங்கள் ஓட்டுமொத்தமாக எங்கள் ஆதரவைத் தி.மு.க கூட்டணிக்கு அறிவித்துவிட்டோம். இதற்காக தி.மு.க தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். எங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டோம். நாங்கள் போய் இதற்காகச் சந்திக்கப் போவதில்லை. ஒருவேளை சந்திக்க அழைத்தால் மரியாதை நிமித்தமாக அந்தச் சந்திப்பு இருக்கும்.
மேலும், இவிஎம் மிஷின் விஷயத்தில் தேர்தலில் மிக கவனமாக இருக்க வேண்டும். மதியம் 3 மணிக்கு மேல் ஏஜெண்டுகளை வசப்படுத்தி வாக்குகளைக் குத்துவார்கள். ஆகவே, ஒரு மாதம் வாக்கு எண்ணிக்கைக்கு இடையில் இருக்கிறது. வாக்குச் சாவடிகள் விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும்.
பா.ஜ.க இங்கு பெரிய அளவில் வெல்ல முடியாது. அ.தி.மு.க-வுடன் சேர்வதால் நோட்டாவுக்கு மேலே ஓட்டு வாங்குவார்கள் அவ்வளவுதான். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?'' என்றார்.
ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கிறிஸ்தவ நல்லென்ன இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவரால் அடக்குமுறைக்கு ஆளானவர்களில் பாக்கரும் ஒருவர். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் பழைய விவகாரத்தை மறந்துவிட்டு தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/stories-behind-how-india-thowheed-jamath-supports-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக