ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அந்த வகையில், நேற்று (12.03.2021) போடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். முன்னதாக, பெரியகுளம் வீட்டில் இருந்து புறப்பட்ட ஓ.பி.எஸ்., கைலாசநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, போடி எல்லையில் அமைந்துள்ள சாலைக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரது மகனும், தேனி எம்.பி’யுமான ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Also Read: `தேனியில் இருந்தாலும், நான் எடப்பாடியின் ஆள்..!’ - ஜக்கையனைப் பழிவாங்கினாரா ஓ.பி.எஸ்?
சாலைக்காளியம்மான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பி.எஸ்., தன்னுடைய பிரசார வாகனத்தில் ஏறிக்கொண்டு, வழி நெடுங்கிலும் இருந்த கட்சித் தொண்டர்களுக்கு கையசைத்தவாறு போடி தாலுகா அலுவலகம் சென்றார். அவரது பிரசார வாகனத்தை, சுமார் 15ற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளில் கார்கள் பின் தொடர்ந்தனர். மதியம் இரண்டு மணியளவில் போடி தாலுகா அலுவலகம் வந்தடைந்தார் ஓ.பி.எஸ். உடன், கட்சி நிர்வாகிகள் சிலர் இருந்தனர். ஓ.பி.எஸ் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார் என்பதாலே, போடி தாலுகா அலுவகத்தின் முன்புறம் புதிதாக சாலை போடப்பட்டிருந்தது.
போடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம், தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ். தொடர்ந்து., தனது மகனை அழைக்க, ரவீந்திரநாத்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்தார். அவரைப் பின் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவினரும் என சுமார் 20ற்கும் மேற்பட்டோர் அறைக்குள் வந்து சேர்ந்தனர்.
ஒரு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன், இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, கட்சி நிர்வாகிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர், உடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Also Read: மதுரை : விதிமுறைகளை மீறி ஓ.பி.எஸ்-ன் இளைய மகனுக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு மரியாதை!
இது தொடர்பாக, போடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நாம் கேட்ட போது, “மூன்று பேர் மட்டுமே அனுமதி என முன்னரே அறிவுறுத்தியிருந்தோம்…” என்றார். ‘இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க உள்ளீர்களா?’ என நாம் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டார்.
”1+2 என்பது தான் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், ஓ.பி.எஸ், 1+20 என்ற கணக்கில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆரம்பத்திலேயே இப்படியென்றால், இனி தேர்தல் நடக்கும் வரை என்னவெல்லாம் செய்வார்கள். இவர்களுக்கு அதிகாரிகளும் துணைபோவது கடும் கண்டனத்திற்குரியது. ஓ.பி.எஸ் மீதும்., அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டும். நேர்மையான அதிகாரியை போடி தொகுதிக்கு நியமிக்க வேண்டும்.” என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.
ஓ.பி.எஸ் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா?
Also Read: தேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்!’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்
source https://www.vikatan.com/news/politics/o-panneerselvams-nomination-has-caused-controversy-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக