Ad

திங்கள், 15 மார்ச், 2021

கோவிட்-19: தடுப்பூசி போட்டபின் ரத்த தானத்துக்கு 56 நாள்கள் இடைவெளி... எதற்காக?

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் போடப்படத் தொடங்கிய பிறகு, அதுபற்றிய பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன. சந்தேகங்களுக்கான பதில்களை அவ்வப்போது அரசும், அரசு சார்ந்த அமைப்புகளும் ஊடகங்களும் தெளிவுபடுத்தி வருகின்றன.

Blood donation

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சிலின் இயக்குநர் மருத்துவர் சுனில் குப்தா, சமீபத்தில் ஓர் அறிவிக்கையை வெளியிட்டிருந்தார்.

`கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, ரத்ததானத்தை ஒத்தி வைப்பது தொடர்பான அறிவுறுத்தல்' என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிவிக்கையில், ``தடுப்பூசியின் இரண்டாம் தவணை போட்டுக்கொண்ட பின் 28 நாள்களுக்கு ரத்ததானம் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும்;

கோவிட் தொற்றுக்கு இந்தியாவில் போடப்படும் இரண்டு வகையான தடுப்பூசிகளுக்கும் இது பொருந்தும்; அவசியம் ஏற்படும் பட்சத்தில் ரத்ததானம் செய்வதை ஒத்தி வைக்கும் காலத்தை மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

COVID-19 vaccine delivery system in New Delhi

இந்த அறிவிக்கைக்குப் பிறகு, கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஏன் ரத்ததானம் செய்யக் கூடாது என்ற கேள்வி நமக்கு இயல்பாக எழும். இதற்கு விடையளிக்கிறார், ரத்த மாற்று சிகிச்சை மருத்துவர் செல்வராஜன்.

``எந்த நோய்த் தடுப்புக்கான தடுப்பூசியைச் செலுத்தினாலும் ஒருவரின் உடலில் அந்த நோய்க்கு எதிரான ஆன்டிபாடி உருவாகும். அவை உருவாவதற்கு குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாவதற்கும் குறிப்பிட்ட காலம் ஆகும்.

ஏன் ரத்ததானம் கூடாது?

பொதுவாகத் தடுப்பு மருந்து, ஊசி வழியாகச் செல்லும்போது அது ரத்தத்தில் கலந்துதான் செயலாற்றத் தொடங்கும். இதுபோன்ற சூழலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட உடன் அல்லது சில நாள்களில் ரத்ததானம் செய்யும்போது, தடுப்பூசியின் சாரம் ரத்தத்தின் மூலம் வெளியேறிவிடலாம்.

A health worker confirms registration for COVID-19 vaccine

Also Read: `இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் ஏன்?' - விளக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன்

இதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். அதன் காரணமாகவே இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரத்ததானம் செய்பவர்களுக்கு தடுப்பூசியின் முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதாலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரத்ததானம் பெறுபவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படாது.

மொத்தம் 56 நாள்கள்!

இந்தியாவில் தற்போது வழங்கப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு தவணையாகப் போடப்படுகின்றன. முதல் தவணை போடப்பட்ட 28 நாள்களுக்குப் பிறகு, இரண்டாம் தவணை (பூஸ்டர்) ஊசி போடப்படுகிறது. முதல் தவணைக்குப் பிறகு 28 நாள்கள் இடைவெளிவிட்டு இரண்டாம் தவணை ஊசி போட வேண்டும். பின் இரண்டாம் தவணை ஊசி போட்ட பிறகு 28 நாள்கள் இடைவெளி என, மொத்தம் 56 நாள்களுக்குப் பிறகே ஒருவர் ரத்ததானம் செய்ய வேண்டும்.

Blood Transfusion expert Dr. Selvarajan

இத்தனை நாள்கள் இடைவெளி எடுக்கும்போது தடுப்பூசியால் ஏற்படும் காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகளும் குணமாகிவிடும்.

14 நாள்கள் அல்லது 28 நாள்கள்... குழப்பமும் விளக்கமும்!

இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் தவணையைப் போட்ட 14 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு ரத்தானம் செய்யலாம். கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டவர்கள் 28 நாள்களுக்குப் பிறகு செய்யலாம்.

எந்தத் தடுப்பூசியைப் போட்டோம், எந்த ஊசிக்கு எத்தனை நாள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குழப்பம் பொதுமக்கள், ரத்ததானம் செய்பவர்களுக்கு ஏற்படும் என்பதால்தான், இரண்டு வகையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பொதுவாக 28 நாள்கள் இடைவெளியை தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் நிர்ணயித்துள்ளது. இதற்கென்று மருத்துவ நிபுணர்களுடன் தனி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

Blood

Also Read: CoWIN-ல் பதிவு செய்யாதவர்களும் தடுப்பூசி பெறுவது எப்படி? - ஒரு வழிகாட்டல்

வழக்கமான நடைமுறை!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குறிப்பிட்ட காலம் கழித்துதான் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான்.

- உதாரணத்துக்கு டைபாய்டு, காலரா, டெட்டெனஸ், கக்குவான் இருமல், பிளேக் போன்ற நோய்களுக்கான தடுப்பூசியைப் போடுபவர்கள் 14 நாள்கள்,

- போலியோ, ரூபெல்லா, மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசியைப் போடுபவர்கள் 28 நாள்கள்,

- மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஓராண்டுக் கால இடைவெளிக்குப் பிறகே ரத்ததானம் வழங்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

இந்தப் பட்டியலில் தற்போது கோவிட்-19 தடுப்பூசியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/health/healthy/expert-explains-why-people-who-got-covid-19-vaccine-should-not-donate-blood-for-56-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக