Ad

திங்கள், 15 மார்ச், 2021

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு இதுதான்!

மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தன் வேட்புமனுவில் 4,94,84,792 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இவர் பெயரிலோ, இவர் மனைவியின் பெயரிலோ வாகனங்கள் எதுவும் இல்லை! இவரின் அசையாத சொத்துக்களின் மதிப்பு 2,24,91,410 ரூபாய். 2018-19 நிதி ஆண்டில் சுமார் 18 லட்ச ரூபாயாக இருந்த அவரது வருமானம், அடுத்த ஆண்டு சுமார் 10 லட்ச ரூபாய் கூடியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 28,78,120 ரூபாய் வருமானம் என்று வருமான வரிக் கணக்கில் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.86 ஏக்கர் வேளான் நிலம் இவர் பெயரில் இருக்கிறது. அந்த நிலத்தின் நடப்பு மதிப்பு தோராயமாக 2,17,490 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேளச்சேரி சீதாபதி நகரில் இருக்கும் அவர் வீட்டின் நடப்பு சந்தை மதிப்பு 92,42,296 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோக, திருவாரூர் மாவட்டத்தில், சுமார் பதினேழரை லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றும் இருக்கிறது. ரொக்கமாக தன்னிடம் 50,000 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் 25,000 ரூபாய் ரொக்கம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க முன்னாள் தலைவர் மு.கருணாநிதி மூன்று முறை போட்டியிட்டு வென்ற சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். முதல் முறையாகச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அவர் பெயரில் 21,13,09,650 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருக்கின்றன. அதில் குறிப்பிடப்படவேண்டியது அவரின் 1,77,63,736 ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார்.

உதயநிதி ஸ்டாலின்

இவர் பெயரில் 6,54,39,552 ரூபாய் மதிப்பில் அசையாத சொத்துகள் இருப்பதாக தன் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி. கையில் ரொக்கமாக 75,000 ரூபாய் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். கடந்த 2 நிதி ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கில் இவர் காட்டியிருக்கும் மொத்த வருமானம் (சுமார் 8.89 லட்சம் ரூபாய்), அவர் மனைவி கிருத்திகாவைவிட 3 மடங்கு குறைவானது. அவர்கள் மகன் இன்பன் உதயநிதி பெயரில் சுமார் 23 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருக்கின்றன. இவர் பெயரில் 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் கே.பழனிசாமி, ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை நான்கு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அவர், தனக்கு 47,64,542 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ரொக்கமாக 6 லட்சம் ரூபாய் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் மனைவி ராதாவின் பெயரில் சுமார் 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி

தன்னை விவசாயி என்று சொல்லும் முதல்வரின் பெயரில் வேளாண் நிலம் எதுவும் இல்லை. அவர் மனைவியின் பெயரில் 6 ஏக்கர் விவசாய நிலமும், அவர்கள் குடும்பத்துக்கு 15.65 ஏக்கர் நிலமும் இருக்கிறது. விவசாய நிலம் மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் பெயரில் எந்தவொரு அசையாத சொத்துக்களும் இல்லை. மாறாக 15 லட்ச ரூபாய்க் கடன் மட்டும் இருக்கிறது. அவர் மனைவி பெயரில் 1.78 கோடி ரூபாய் மதிப்பிலும், அவர்கள் குடும்பத்துக்கு 2.9 கோடி ரூபாய் மதிப்பிலும் அசையாத சொத்துக்கள் இருக்கின்றன. வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்டிருக்கும் அவரது ஆண்டு வருமானம், கடந்த 2 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. 2015-16, 2016-17, 2017-18 நிதி ஆண்டுகளில் 4 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருந்த அவரது ஆண்டு வருமானம், அடுத்த வருடம் 10 லட்ச ரூபாயைத் தொட்டது. 2019-20 நிதி ஆண்டிலும் சுமார் 8 லட்ச ரூபாய் வருமானமாகக் காட்டப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/udhayanidhi-stalin-mk-stalin-edappadi-k-palanisamy-property-value

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக