தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சியில் நேற்று தி.மு.க சார்பில் மிகப்பெரிய தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. “தி.மு.க வரலாற்றில் இந்த அளவு மக்கள் கூட்டத்தை எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் நான் பார்த்ததில்லை” என்று துரைமுருகன் கண்ணீர்விடும் அளவிக்கு அந்தக் கூட்டம் மிகப்பெரிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் தமிழகத்திற்கான தொலை நோக்குத்திட்டம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
இந்த 7 தலைப்புகளுள் ‘சமூக நீதி’ என்பதன் கீழ் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட “மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காகப் பயன்படுத்தப்படும்” என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல, “தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூபாய் 1,000 வழங்க இருக்கிறோம். ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்” என்ற அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
இதற்கும் வரவேற்பு இருந்தாலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியான இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 ஊதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பைத்தான் தி.மு.க வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த விமர்சனம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே. குமரவேலிடம் பேசினோம்...
Also Read: பிரமாண்ட ஏற்பாடு; தொண்டர்கள் திரள் - திருச்சி தி.மு.க பொதுக் கூட்டம் #PhotoAlbum
“தேர்தல் அறிக்கையில் மட்டுமல்ல. மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்த கிராம சபை கூட்டம், ராம்ப் அமைத்து மக்களை சந்திப்பது உள்ளிட்ட பல திட்டங்களை தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பி அடித்து வருகிறார். இவ்வளவு காலமாக அரசியலில் இருக்கும் வளர்ந்து வரும், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப மக்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இன்னும் பழைய மாதிரியே மக்கள் இருப்பார்கள் என்று தவறாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மக்கள் நீதி மய்யம் மக்களை நேரடியாக சந்திக்கிறது. அதனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து எங்களால் திட்டமிட முடிகிறது.
ஆனால், 70 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளால் மக்களுக்கு என்ன தேவை என்பதை இன்னும் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் அ.தி.மு.க - தி.மு.க ஆகிய கட்சிகள், தங்கள் மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்களை வளர்ப்பது குறித்தும், தங்களுக்கு பணம் சேர்க்கும் திட்டங்களை தீட்டுவதைப் பற்றியே இதுவரை யோசித்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மக்களின் தேவை என்ன என்று தெரியவில்லை. அப்படி யோசித்து இருந்தால் இந்த மாதிரியான மக்கள் நலத் திட்டங்களை எப்போதோ செயல்படுத்தியிருப்பார்கள். மக்கள் நீதி மய்யம் தமிழக இளைஞர்கள், பெண்கள், மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் என்ன தேவை என்பதை மக்கள் நீதி மய்யம் புரிந்து வைத்திருக்கிறது என்பதை தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் தெரிந்து வைத்திருப்பதாலேயே எங்களின் எல்லாத் திட்டங்களை அவர்கள் காப்பி அடிக்கிறார்கள்.
வளர்ச்சி அடைந்த ஒருவரைப் பார்த்துதான் நாம் காப்பி அடிப்போம். அப்படிப் பார்க்கும் போது தி.மு.க எங்களைக் காப்பி அடிப்பது மகிழ்ச்சியே. மீன் தேவைப்படும் ஒருவனுக்கு அதைப் பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவனால் சுயமாக வாழ முடியும். மக்கள் நீதி மய்யம் செய்ய நினைப்பதும் அதுதான். ஆனால், இந்த அறிவிப்பிலும் பொங்கல் பரிசு போல இலவசமாகக் கொடுக்கப்போகின்றோம் என்ற கவர்ச்சிகரமான வார்த்தை விளையாடுத்தான் உள்ளது. மக்கள் சுயமாக தன் சொந்தக் காலில் வாழ வைப்பதற்கான எந்த அறிகுறியும் இந்த அறிவிப்பில் இல்லை. தி.மு.க-வுக்கு இது பழக்கமான ஒன்றுதான்” என்றார்.
மக்கள் நீதி மய்யத்தின் விமர்சனம் குறித்து தி.மு.க-வின் சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமனிடம் பேசினோம். “தமிழகத்திற்கு சமூகநீதியை கற்றுக்கொடுத்ததே கமல்ஹாசன்தான் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள் போல. திராவிடக் கட்சியின் நீட்சிதான் தி.மு.க. பெண்களுக்கு இட ஒதுக்கீடு, படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு, எல்லாவற்றிலும் சம உரிமை உள்ளிட்ட சமூக நீதிகளில் தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தி.மு.க-தான். இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தலைவர் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை எப்படித் தரப்போகிறோம், எங்கிருந்து தரப்போகிறோம் என்ற தெளிவில்ல. ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிகத் தெளிவாக அதை எப்படி செயல்படுத்தப்போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். எப்போதும் தி.மு.க சொன்னதை செய்யும் கட்சி.
அளித்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றும் என்று மக்களுக்குத் தெரியும். ஆட்சி அதிகாரம் வந்தால் அதை உடனடியாக செயல்படுத்துவோம் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், தேர்தல் களத்திலேயே இல்லாத, ஆட்சிக்கே வர முடியாத மக்கள் நீதி மய்யத் தலைவர் எப்படித்தான் இப்படியான வாக்குறுதிகளைத் தருகிறோ தெரியவில்லை. தேர்தலில் இதை செய்கிறோம். அதை செய்கிறோம் என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கலாம். அதை யாராலும் விமர்சிக்க முடியாது. ஆனால், அதை செயல்படுத்தும் சக்தி வேண்டும் இல்லையா? அதற்கு ஆட்சி, அதிகாரம் வேண்டும் இல்லையா? அது தி.மு.க-வுக்கு இருக்கிறது. வயதானதால் சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆன கமல்ஹாசன் அரசியல் பக்கம் ஒதுங்கியிருக்கிறார். தேர்தலுக்கு இவர்கள் புதியவர்கள். ஆனால், தி.மு.க தலைவருக்கு 45 கால அரசியல் அனுபவம் இருக்கிறது. 5 முறை ஆட்சியில் இருந்திருக்கிறது தி.மு.க. தி.மு.க-வைப் பார்த்துதான் கமல் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அப்படியிருக்கும் போது நாங்கள் மக்கள் நீதி மய்யத்திடம் அரசியல் கற்றுக்கொள்கிறோம். அவர்களிடம் காப்பி அடித்தோம் என்று சொல்வது எல்லாம் நகைச்சுவையாக இருக்கிறது.
கமல் புதிதாக தேர்தலை சந்திக்கிறார் இல்லையா, அதனால் உற்சாகத்தில் எதையாவது சொல்லாம் எனச் சொல்லி வருகிறார். ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியப்பட வேண்டும் இல்லையா. வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தி.மு.க என்பது மக்களுக்குத் தெரியும். செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதேபோல சினிமாவில் வசனம் பேசுவதைப் போலத்தான் கமல் பேசுகிறார் என்பதையும் மக்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள்” என்றார்.
இது ஒருபுறம் இருக்க, சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டொன்றுக்கு, ஆறு விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியளித்துள்ளனர். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். தி.மு.க, குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் என அறிவித்திருந்த நிலையில் அ.தி.மு.க 1,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து உங்கள் கருத்தை கட்டுரையாக அனுப்ப....
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ
தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmks-manifesto-is-copy-from-kamals-makkal-needhi-maiyam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக