Ad

செவ்வாய், 9 மார்ச், 2021

நெல்லை: கதிர்களால் வடிவமைக்கப்பட்ட `100% வாக்குப் பதிவு’ - ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி சைக்கிள் பேரணி, புதிய வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்ற பேரணி, கோலப்போட்டி என பல்வேறு நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.

நூதன பிரசாரம்

அந்த வகையில், நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ள நெல்லை மாவட்டத்தில் வயல்வெளிகள் அதிகம் இருக்கும் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் புதுமையான வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வழக்கமான பாணியில் பேரணி, ஊர்வலம் போன்றவை நடத்தப்படாமல், விவசாயிகள் அறுவடைப் பணியை மேற்கொண்டிருக்கும் வயல்வெளிக்கு நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடத்தப்பட்டன.

வயல்வெளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதன்படி, நெல் அறுவடை நடக்கும் வயலில் நெற் கதிர்களின் மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ’100 சதவிகிதம் வாக்குப் பதிவு’ என கதிர்களால் வடிவமைக்கப்பட்டது.

பின்னர் வயல்வெளியில் பணியில் இருந்த விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, ‘100 சதவிகிதம் வாக்களிப்போம்’ ’விற்காதே.. உரிமைகளை விற்காதே’ ’வாக்களிப்போம்.. வாழ்வுரிமை காப்போம்’ ‘’எனது வாக்கு.. எனது உரிமை’ ’ஓட்டுரிமை நமது உரிமை’ என்பது போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகளும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Also Read: நெல்லை:`என்ன தகுதி இருக்கிறது உதயநிதிக்கு... எனது அனுபவம்தான் அவர் வயது!’-முதல்வர் பழனிசாமி காட்டம்

வயல்வெளியில் நடந்த இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ட்ரோன் கேமரா மூலம் கழுகுப் பார்வையில் படம் பிடிக்கப்பட்டு பொது வெளியில் பகிரப்பட்டது.வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ பதிவுகள்.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேரன்மகாதேவி கோட்டாட்சியர் பிரக்திக் தயாள் தலைமையில் நடந்த இந்த புதுமையான நிகழ்வில், துணை ஆட்சியர் மகாலட்சுமி, விவசாயத்துறை இணை ஆணையர் ராஜேந்திர பாண்டியன், உதவி ஆணையர் உமா மகாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள்

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/video-of-voting-awareness-camp-held-for-farmers-goes-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக