தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்குள் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் டாஸ்மாக் மதுக்கடையும், பாரும் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிம்றம. இது தஞ்சை மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நிகழப்போகும் அசவுகர்யங்களையும், சீரழிவுகளையும் ஆபத்துகளையும் நினைத்தால், நெஞ்சுப் பதறுவதாக, பொதுமக்கள் மிரட்சி அடைகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்துக்குள் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன் இதுகுறித்து பேசும்போது, ``’எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தமிழ்நாட்டில் வேற எந்த ஒரு பேருந்து நிலையத்துக்குள்ளேயும் மாதுப்பானக் கடை இருக்குற மாதிரி தெரியல. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகப் போகுது. இது மிகப்பெரிய அநியாயம்.
மதுபானம் அருந்தும் பழக்கமுள்ளவங்களுக்கு மதுக்கடையை பார்த்தாலே சபலம் தட்டி, மதுவாங்கி குடிக்கணுங்கற எண்ணம் வந்துடும். இது பேருந்து நிலையம். இங்க மதுக்கடை இருந்தால் என்னாகும்னு நினைச்சிப்பாருங்க.
இந்த பழக்கமுள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மது வாங்கி குடிச்சிட்டுட்டு, பேருந்துகளை ஓட்டக்கூடிய ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. இந்த பழக்கமுள்ள பயணிகளும் கூட சும்மா இருக்க மாட்டாங்க.
பஸ் ஏறக்கூடிய இடத்துல, கண்ணுக்கு எதிர்ல மதுபானக்கடை இருந்தா, சும்மாவா இருப்பாங்க. மது குடிச்சிட்டு, பஸ்ல ஏறுவாங்க. மது வாடையினால, சக பயணிகள் கஷ்டத்தை அனுபவிச்சாகணும். மது அருந்திய பயணி, வாந்தி எடுத்து அசிங்கம் பண்ணக்கூடிய அவலமும் நிகழும். மதுபோதையில், பயணிகள் தங்களோட நிதானத்தை இழந்து, தாங்கள் கொண்டு வந்த உடமைகளை பறிகொடுக்கக் கூடிய பரிதாபங்களும் ஏற்படும்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா, மதுக்கடைக்கு வரக்கூடிய குடிமகன்களால், பொதுமக்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். குடிப்போதையில தவறான செயல்கள்ல ஈடுபடுவாங்க. பயணிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். இடமும் அசுத்தமாகும். பேருந்து நிலையத்துக்குள் மதுபான கடைக்கு அனுமதி கிடையாதுனு மாநகராட்சி விதிமுறைகள்லயே சொல்லப்பட்டிருக்கு.
இந்த பிரச்னையில தஞ்சை மாவட்டம் ஆட்சியர் கோவிந்தராவ், மக்கள் நலன் கருதி, ஒரு நல்ல முடிவெடுப்பாருனு நம்புறோம். அவரை சந்திச்சி இது தொடர்பா மனு கொடுத்திருக்கோம்” என தெரிவித்தார். டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டால், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், மதுபான பஜாராக மாறும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/tasmac-shop-inside-thanjavur-bus-stand-stirs-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக