"தேச தந்தை காந்தி சிலையை ஏற்கெனவே இருந்த இடத்தில் மீண்டும் வைக்காமல், எந்தவித கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாலும், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சிலை மற்றும் கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்த சிலையை மாற்றி புதிதாக வேறு காந்தி சிலை வைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாகத் தகவல் பரவியது. இதன் காரணமாக, இரவோடு இரவாக கிரேன் மூலம் காந்தி சிலையை எடுத்துச் சென்று நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி மற்றும் தி.மு.க தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். `காந்தி சிலை மற்றும் கல்வெட்டை அகற்றியது யார், யாரைக் கேட்டு நகராட்சி நிர்வாகம் அகற்றியது, புதிய காந்தி சிலை அமைத்தால், அதில் யாருடைய பெயர்கள் தாங்கிய கல்வெட்டை வைப்பார்கள்' என, நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த சேலம் கோட்ட நகராட்சி மண்டல இயக்குனர் அசோக்குமாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அவர்களின் கேள்விக்கு அசோக்குமார் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதிகாரிகளும் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
Also Read: நெய்வேலி நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு! - கொதிக்கும் ஜோதிமணி
ஆனால், காங்கிரஸார் விடாமல் போராட்டம் செய்ய, 'காந்தி சிலை அகற்றியதற்கும், நகராட்சிக்கும் எந்தவித சம்பந்முதம் இல்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்' என்று கூறி, நகராட்சி அதிகாரிகள் நழுவிக் கொண்டனர். இதையடுத்து, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் கூடிய காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர், அங்கு நடக்கும் சிலை அகற்றும் பணிகளைத் தடுத்து, மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 'சட்டப்படி வழக்கு தொடர இருக்கிறோம். லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் அகற்றப்பட்ட காந்தி சிலை மற்றும் கல்வெட்டை அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்' என்று போராட்டம் நடத்தியவர்கள் சமாதானமடைய மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காந்தி சிலை அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர், ``நாட்டுக்கே சுதந்திரம் வாங்கி தந்த தேச தந்தை காந்தியடிகள். அவரது சிலை ஒன்று கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. அந்த சிலையைத்தான், காங்கிரஸ் கட்சியினரிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. இதுகுறித்து, கரூர் நகராட்சி ஆணையரிடம் கேட்டால் `காந்தி சிலை நகராட்சி அலுவலகத்துக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதற்கும், நகராட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' எனக் கூறுகிறார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால், `சிலை அகற்றப்பட்டது குறித்து எங்களுக்கும் எதுவும் தெரியாது' என்று பதில் அளிக்கின்றனர். அப்படியென்றால், காந்தி சிலை லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து, கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு எப்படி நடந்தா சென்றது?. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு, அவரின் எம்.ஆர்.வி டிரஸ்டுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பொது இடத்தை தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.
இதனை சட்டத்துக்குப் புறம்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருடிக் கொண்டார். அமைச்சராக இருந்துகொண்டு, தனியார் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது போதாது என்று, அவர் தற்போது பொது சொத்தையும் சுருட்டும் மோசமான பணியில் ஈடுபட்டுள்ளார்.
காந்தி சிலை அகற்றபட்ட லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில், அந்த சிலை இருந்த இடத்தில் வேறு சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
வரும் 21 - ஆம் தேதி கரூர் வரும் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்டு, நியாயம் கேட்க உள்ளோம். காந்தி சிலையை இருந்த இடத்தில் மீண்டும் வைக்காமல், அந்தப் பகுதியில் எந்தவித கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாலும், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``மராமத்துப் பணிக்காக லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் இருந்த காந்தி சிலையை அகற்றியிருக்கிறார்கள். அதற்கும், அமைச்சருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜோதிமணி தேவையில்லாமல் அமைச்சரின் பெயரை இதில் இழுக்கிறார்" என்றார்கள்.
நகராட்சி தரப்பில் கேட்டால்,``காந்தி சிலை அகற்றப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், காந்தி சிலை நகராட்சி அலுவலகத்தில் இருப்பதால், எங்களை இதில் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்" என்று மட்டும் சொன்னார்கள்.
இந்நிலையில் இரவோடு இரவாக புதிய காந்தி சிலை அங்கு நிறுவப்பட்டது. இதை எதிர்த்து எம்.பி ஜோதிமணி காலையில் லைட்வுஸ் ரவுண்டானா பகுதியில் போராட்டம் நடத்த முற்பட்டார். முதலமைச்சர் நாளை சிலையை திறக்க வேண்டும் என்பதற்காக, அவசர அவசரமாக தரமற்ற முறையில் சிலை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் அவரைக் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/gandhi-statue-removed-from-karur-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக