Ad

வியாழன், 12 நவம்பர், 2020

பீகார் தேர்தல் முடிவுகள்; தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சீட்டுக்கு வைக்குமா வேட்டு? #TNElection2021

கொரோனா காலக்கட்டத்திலும், மூன்று கட்டமாக பீகாரின் 17- வது சட்டமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க பங்குகொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அமைத்த மகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அசாதுதீன் ஓவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி (AIMIM) ஐந்து இடங்களையும், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி ஒரு இடத்தையும் மற்ற கட்சிகள் 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பீகார் தேர்தல் களம்

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, பா.ஜ.க 74 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது கடந்த முறை பெற்ற இடங்களைவிட 16 இடங்கள் அதிகம். அதேபோல, கடந்த முறை 71 இடங்களைப் பிடித்திருந்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இந்தமுறை 43 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றிபெற, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து தனியாகக் களமிறங்கியதே காரணமாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல, சி.பி.ஐ, சி.பி.எம், சி.பி.எம் (எல்) ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் 29 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கம்யூனிஸ்ட்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. அதேநேரம், காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதுவே மகா கூட்டணியின் பின்னடைவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அசாதுதீன் ஓவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி (AIMIM) தனியாக நின்று வாக்குகளைப் பிரித்தததே, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் தோல்வியுறக் காரணம் என்றும் விவாதிக்கப்படுகிறது.

குலாம் நபி ஆசாத் - கருணாநிதி

பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்வி குறித்து அங்கு சூடாக விவாதங்கள் நடந்துவருவது எதார்த்தமானதுதான். ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட 2,000 கி.மீட்டருக்கு இந்தப்பக்கம் தமிழகத்தில் ஒரு அனலைக் கிளப்பியிருப்பது யாரும் எதிர்பாராதது. ஆம், பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, தமிழகத்தில் அந்தக் கட்சிக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்டும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே, தமிழகத்தில் 2016 தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதுதான் தி.மு.க ஆட்சிக் கட்டிலுக்கு வரமுடியாமல் போனதற்குக் காரணம் என விவாதிக்கப்பட்டு வந்தநிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் அந்த விவாதத்தை இன்னும் சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

2011 எதார்த்தம்:

தமிழகத்தில், கடந்த 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே 63 இடங்களில் போட்டியிட்டு வெறும் எட்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.கவும் 119 இடங்களில் போட்ட்யிட்டு வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாகக் கூட அமர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி தி.மு.க-வினரின் கண்ணைப் பெரியளவில் உறுத்தவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்த தே.மு.தி.க-வே தி.மு.க-வின் கண்ணை உறுத்தியது. அதனால்தான், 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தே.மு.திக-வை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துவிடவேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி அதிக முயற்சி எடுத்தார்.ஆனால், கடைசிவரை அது நிறைவேறவே இல்லை. அவர் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கினார்.

மக்கள் நலக் கூட்டணி

2016 தி.மு.கவுக்குப் பாடம்:

2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ம.கவும் தனியாகப் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட்டன. அந்தநேரத்தில், தி.மு.க கூட்டணியில் இருந்த ஒரே பெரிய கட்சி காங்கிரஸ்தான். அதன் காரணமாகவே தி.மு.க தலைவர் கருணாநிதி அதிக இடங்களை ஒதுக்கினார். அதைவிட மிக முக்கியமான காரணம் ஒன்றும் இருந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸும் தி.மு.கவும் தனித்தனியாகப் போட்டியிட்டு இரண்டு கட்சிகளாலும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதைக் கருத்தில்கொண்டுதான், கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியிருந்தார். ஆனால், அந்தக் கட்சி வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கருணாநிதி அவ்வளவு இடங்களை ஒதுக்கியது தவறு என்று சொல்வது தேர்தலுக்கு முன்பாக அப்போதிருந்த சூழலை வைத்துப் பார்த்தால் கண்டிப்பாக சரியல்ல. அதேவேளை, அதேபோன்ற ஒரு முடிவை தி.மு.க தற்போது எடுக்குமா என்றால் நிச்சயமாகக் கேள்விக்குறிதான். காரணம், 2016 தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு ஒரு பாடம்.

Also Read: எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

காங்கிரஸின் வாக்கு வங்கி :

தவிர அப்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் தற்போது தி.மு.க கூட்டணியில்தான் அங்கம் வகிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட அந்தக் கூட்டணி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. பத்து இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி, ஒன்பது இடங்களில் வெற்றிபெற்று, 12.76 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால், இதற்காகவே தி.மு.க அந்தக் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்குமா என்பது கேள்விக்குறிதான்... காரணம் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பது உண்மைதான். ஆனாலும், கூட்டணியில் போட்டியிடும்போது வாக்குவங்கி அதிகமாகவும் கூட்டணி இல்லாமல் தனியாகப் போட்டியிடும்போது குறைவாகவும் இருப்பது கண்கூடு. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், 30 இடங்களில் தனியாகப் போட்டயிட்ட அந்தக் கட்சி பெற்றது, 17 லட்சத்து 51 வாக்குகள் மட்டுமே, வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 4.3 மட்டுமே. அதேபோல, 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அந்தக்கட்சி தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்கு சதவிகிதம் 5.71 மட்டுமே.

டி.ஆர்.பாலு - ஸ்டாலின் - துரைமுருகன்

ஏற்கெனவே வெடித்த யுத்தம் :

2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 132 ஒன்றியக் கவுன்சிலர்களையும், 15 மாவட்டக் கவுன்சிலர்களையும் பெற்ற காங்கிரஸ் கட்சி ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன் பதவிகளை தி.மு.க-விடம் எதிர்பார்த்தது. ஆனால், தி.மு.கவினர் அதற்கு மறுப்புத் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியினர் அ.தி.மு.கவினருடன் ஒருசில இடங்களில் கரம்கோர்த்தனர். அதன் காரணமாக, தி.மு.கவினர் எளிதாக வெல்லவிருந்த ஒன்றியச் சேர்மன் மாவட்டச் சேர்மன் பதவிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. இதனால் தி.மு.க தொண்டர்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். போதாக்குறைக்கு, `` கூட்டணி தர்மத்தை மீறி நடந்துகொண்டது தி.மு.க'' எனக் காட்டமான அறிக்கை ஒன்றை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட, தி.மு.க தலைவர் ஸ்டாலினை அது கோபமுறச் செய்தது. அதன் காரணமாக, குடியுரிமை திருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டிய கூட்டத்தைப் புறக்கணித்தது தி.மு.க.

துரைமுருகனின்பதிலடி

``எங்களுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் நாங்கள் எப்படிக் கலந்துகொள்ள முடியும்'' என மிகக் காட்டமாக பத்திரிகையாளர்களிடம் கேட்டார் தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு. உடனே ``எங்களை இழந்தால் தி.மு.க-வுக்குத்தான் நஷ்டம். எங்களிடம் 5 சதவிகித வாக்கு வங்கி இருக்கிறது. எங்கள் அளவுக்கு பலமுள்ள வேறொரு கட்சி தி.மு.க கூட்டணியில் இல்லை'' என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுக்க, ``காங்கிரஸ் விலகிச் சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை'' என வேலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்தார் தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன். பிறகு, காங்கிரஸ் தலைமை, உடனடியாக கே.எஸ்.அழகிரியை அழைத்துப் பேசியதன் விளைவாக தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சமாதான நடவடிக்கையில் இறங்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

கார்த்திக் சிதம்பரம் டிவிட்

கார்த்தி சிதம்பரத்தின் உடனடி ரியாக்‌ஷன் :

அப்போது துரைமுருகனின் பேச்சுக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தது சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்தான், தற்போதும், தமிழகத்தில், 'காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களுக்கு மேல் தேவையில்லை' என்கிற தொனியில் ட்விட்டரில் ஒருவர் கருத்துப் பதிவிட, உடனடியாக அதற்குப் பதில் தந்துள்ளார் அவர். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்களுக்கு மேல் ஒதுக்கக்கூடாது என தி.மு.க-வின் இளைய தலைவர்களும், தி.மு.க-வுக்காக தேர்தல் வேலை செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் அந்தக் கோரிக்கைக்கு இன்னும் வலு சேர்த்துள்ளது என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bihar-election-results-will-the-dmk-hunt-for-the-congress-seat-in-the-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக