Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

`நான் அனைவருக்குமான அதிபர்' ; ஜோ பைடனின் வெற்றி! - ஒரு வாசகரின் பார்வை #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வரலாறு காணாத பரபரப்புகளுடன் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டி, உலகின் மிகப்பெரும் வல்லரசின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். சிலரது உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேரும். உழைப்பும் திறமையும் இருந்தாலும் உச்சகட்ட பொறுப்பையும் பதவியையும் எட்ட முடியாமல்போனவர்களும் உண்டு. சிலருக்கோ வாழ்வின் இறுதிக்கட்டத்திலாவது அவர்களது திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற வெகுமதியைக் காலம் கொடுத்து அழகுபார்க்கும். இதில் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர் ஜோ பைடன்!

`மிகவும் மூத்த அதிபர்’ என்ற சாதனையுடன், 77 வயதில் அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் ஜோ பைடன், தன் நாற்பது ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை முழுவதும் அமெரிக்க அரசியல் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றியவர். இன்றைய நவீன அமெரிக்காவைக் கட்டமைப்பதற்காக எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகளில் ஜோ பைடனின் பங்கு உண்டு!

1968-ல் சட்டப் படிப்பை முடித்தவுடன் அரசியலில் நுழைந்த ஜோ பைடனின் சென்ட் உறுப்பினர் பதவி சாதனையைக் கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற உறுப்பினர் சாதனையுடன் ஒப்பிடலாம்! 1972-ம் ஆண்டு, அமெரிக்காவின் டெலவெர் மாகாண செனட் உறுப்பினராக ஜோ பைடன் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு முப்பது வயது. அன்றைய நிலவரப்படி, அமெரிக்காவின் ஐந்தாவது இளம் சென்ட் உறுப்பினர் இவரே! அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர், 2008-ம் ஆண்டு பாரக் ஒபாமாவுடன் துணை அதிபராக வென்ற தேர்தலிலும் டெலவெர் மாகாண செனட் பதவியை வென்றிருக்கிறார். இது அமெரிக்காவின் வேறெந்த மாகாணத்திலும் நிகழாத சாதனை!

முப்பதாண்டுக்கால செனட்டர் பணியில் பல சட்ட சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஜோ பைடன். `சிறைத்தண்டனைகளைவிட சீர்திருத்தப் பயிற்சிகளே குற்றங்களைத் தடுக்கும்’ எனும் நிலைப்பாட்டுக்கு இன்று வந்திருக்கும் பைடன்தான் 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட வன்முறைத் தடுப்பு சீர்திருத்தச் சட்டத்துக்குக் காரணமாக இருந்தவர். `பைடன் கிரைம் லா' என ஜோ பைடனின் பெயரிலேயே அறியப்படும் இந்தச் சட்டம், பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளை மிகவும் கடுமையாக்கியதுடன், அவரது கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகளையும் உண்டாக்கியது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தின் மூலம் என் இனத்தின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது என அமெரிக்கக் கறுப்பின செனட்டரான கோரி புக்கர், பைடன் க்ரைம் லா மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அதே 1994-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டது. தன் வாழ்நாள் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்றாக ஜோ பைடன் பெருமைப்படும் இந்தச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் அதிகாரங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நஷ்ட ஈட்டு வழிமுறைகளையும் அரசுக்கு வழங்கியது.

அமெரிக்க செனட்டின் வெளியுறவுத்துறைக் குழு உறுப்பினராகவும் ஜோ பைடன் பல சிக்கலான அமெரிக்க வெளியுறவு பிரச்னைகளில் பங்காற்றியுள்ளார். 2001-ம் ஆண்டின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமலுக்குவந்த பேட்ரியோட் ஆக்ட் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த பைடன், 2003-ம் ஆண்டில் அமெரிக்கா, ஈராக்கைத் தாக்குவதற்கு ஒப்புதல் அளித்தவர்களில் ஒருவர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தத் தாக்குதலைக் கண்டித்தும் அறிக்கைகள்விட்டுள்ளார் பைடன்!

1998-ம் ஆண்டு, தனது 46-வது வயதிலேயே அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முயன்றவர் பைடன். அப்போது அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கிலாந்தின் லேபர் கட்சித் தலைவராக இருந்த நெய்ல் கின்னாக் என்பவரின் உரையைப் போன்றே இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாதியிலேயே பின்வாங்கினார். அதே ஆண்டில் மூளையின் ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் உடல்நலம் குன்றிய பைடன் பல மாதங்களுக்குப் பின்னர் குணமானார்.

மீண்டும் 2004-ம் ஆண்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலிருந்த பைடன், சென்ட் பதவியின் மீதிருந்த பற்றின் காரணமாக முயலவில்லை! 2008-ம் ஆண்டின் தேர்தலின்போதும் உட்கட்சித் தேர்தலின்போது பாரக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராகக் களத்தில் குதித்துவிட்டு, உடனடியாகப் பின்வாங்கிவிட்டார்.

2015-ம் ஆண்டு ஜோ பைடனின் மகன் இறந்ததால் ஏற்பட்ட பாதிப்பால், பாரக் ஒபாமாவுக்குப் பிறகான 2016-ம் ஆண்டின் அதிபர் தேர்தலையும் விட்டுக்கொடுத்தார் ஜோ பைடன். 2008-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை அதிபராகப் பணியாற்றிய ஜோ பைடன், பாரக் ஒபாமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்ததோடு, வெளியுறவுக் கொள்கை, நிதிநிலைத் தாக்கல், ஆயுதத் தடுப்புச் சட்டம் போன்ற அமெரிக்காவின் பல முக்கியச் செயல்திட்டங்களில் பங்களித்துள்ளார்.

மனைவியுடன்

தனது ஆட்சிக் காலத்தின் முடிவில், அமெரிக்காவின் மிக உயரிய விருதான Presidential Medal of Freedom விருதை ஜோ பைடனுக்கு வழங்கிப் பேசிய பாரக் ஒபாமா, `ஜோ பைடனைத் துணை அதிபராக தேர்ந்தெடுத்ததின் மூலம் நான் ஒரு சகோதரனைப் பெற்றேன்' எனக் குறிப்பிடும் அளவுக்கு இருவருக்குமான நெருக்கமும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது. அதைக் கேட்டு ஜோ பைடன் கண்கலங்கும் காட்சியை இன்றும் இணையத்தில் காணலாம்!

கோடீஸ்வர ட்ரம்ப்புக்கு நேர் மாறாக எளிமையாக வாழும் ஜோ பைடன், சொந்த வாழ்வில் பல இழப்புகளைச் சந்தித்தவர். பைடனின் 30 வயதில் அவரது மனைவியும், ஒரு பெண் குழந்தையும் கார் விபத்து ஒன்றில் பலியானார்கள். அந்த விபத்திலிருந்து மீண்ட அவரது மகன்களில் ஒருவர், 46 வயதில் புற்றுநோயால் மாண்டார்.

தடாலடி டொனால்டு ட்ரம்ப்பை எதிர்க்க ஜோ பைடன் சரியான தேர்வு அல்ல என அமெரிக்க அரசியல் வட்டாரங்களுடன் சர்வதேச அரங்கமும் சந்தேகித்த சூழலில் ஜோ பைடனை மக்களிடம் சேர்த்தது அவரது மனித நேய அணுகுமுறைதாம். ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகக் கூறப்படும் கதைக்கு நிகராக, கொரோனா பரவலால் அமெரிக்கா முழுவதும் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழக்கும் சூழலில், `மக்களின் உயிரைவிடப் பொருளாதாரமே முக்கியம்’ என ட்ரம்ப் கூற, `மக்களின் உயிரைக் காப்பதுதான் என் முதல் கடமை’ எனக் கூறி வென்றுள்ளார் பைடன்!

ஜோ பைடன்

கமலா ஹாரிஸைத் துணை அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இனவெறிக்கு எதிராகவும், பெண்களுக்கான சம உரிமைக்கு ஆதரவாகவும் சமிக்ஞைகளை அனுப்பியுள்ளார். யார் ஆட்சிக்கு வந்தாலும், அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசின் இரும்புக்கரங்களில் நிரந்தரமான பூங்கொத்தை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், இனவெறிக்கு ஆதரவான கருத்துகளையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் தொடர்ந்து மக்கள் மனத்தில் விதைக்க முயன்ற ட்ரம்ப்பை, `நான் அனைவருக்குமான அதிபர்' என்கிற வார்த்தைகளின் மூலம் ஜோ பைடன் வென்றது இன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் முக்கியமான நிகழ்வுதான்!

- காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/government-and-politics/international/reader-point-of-view-on-joe-bidens-victory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக