Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா தொடக்கம்... என்னென்ன கட்டுப்பாடுகள்?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. சூரபத்மன் என்ற ’ஆணவம்’, சிங்கமுகன் எனும் ’கண்மம்’, தாரகாசூரன் என்ற ’மாயை’ ஆகிய மும்மலங்களால் ஏற்படும் தீமையை ஒழிக்கவே ‘ஞானம்’ என்ற முருகப் பெருமான் தோன்றி, மும்மலங்களுடன் போரிட்டு வெல்கிறார்.
யாகசாலை பூஜை

இந்த வெற்றி வீர நிகழ்ச்சியையே கந்தசஷ்டித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல முருகன் தலங்களில் சஷ்டியின்போது சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமான திருச்செந்தூரில் நடைபெறுவதுதான் சிறப்பாகும்.

”சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என ஒரு பழமொழி உண்டு. ”சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் (கருப்பையில்) குழந்தை பிறக்கும்” என்பதுதான் இதன் விளக்கம். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகளுக்கு உகந்த விரதமாகச் சஷ்டி விரதம் சொல்லப்படுகிறது. அத்துடன், வியாபார முடக்கம், தீராத நோய்ப் பிரச்னை, கடன் தொல்லை ஆகியவற்றில் இருந்தும் விடுபட இவ்விரதத்தை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டிவிழா, கடந்த இன்று (15-ம் தேதி) யாகசாலை பூஜையையுடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

யாகசாலைக்கு எழுந்தருளிய ஜெயந்திநாதர்

1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி – தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு, தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட உள்பிராகாரத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குடும்பத்துடன் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். யாகசாலை பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக யாகசாலை பூஜை தொடங்கியதும் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் சஷ்டி விரதத்தைத் தொடங்குவார்கள். இந்தாண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.

பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ

விழாவின் 6-ம் நாளான வரும் 20-ம் தேதி மாலை 4.05 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி இந்தாண்டு கோயில் முன் பிராகாரத்தில் நடைபெற உள்ளது. 21-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Also Read: அக்னிச் சேவல், பிரணவ மயில்... சேயோன் பெருமைகளைப் பேசும் கொடியும் வாகனமும்... கந்தசஷ்டி ஸ்பெஷல்!

இந்த இரண்டு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் உள்ளூர் தொலைக்காட்சிகள், யூ-டியூப் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களைத் தவிர மற்ற நாள்களில் தினமும் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் ஆன்லைன் முன்பதிவு, 50 சதவிகிதம் நேரில் வரும் பக்தர்களுக்கும் என முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது.

பக்தர்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பிரகாரம்

கடலில் நீராடவும், கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோயில் பிரகாரம், கடற்கரை ஆகியவை பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. சஷ்டி விரத நாள்களில் கட்டண அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் திருக்கோயில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் வீதியுலா இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பஜனை பாடவும் அனுமதி இல்லை என்பதால் கோயில் பிரகாரங்களில் ’அரோகரா’ கோஷமும் எதிரொலிக்கவில்லை.



source https://www.vikatan.com/spiritual/temples/tiruchendur-subramaniya-swamy-temple-kandha-sashti-festival-starts-with-yagasaalai-pooja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக