Ad

செவ்வாய், 24 நவம்பர், 2020

கன்னட மொழி... ஜெயலலிதா பாணி - சிறைக்குள் சசிகலாவின் சீக்ரெட் மாற்றங்கள்!

“சிறைக்குள் சசிகலா என்ன செய்கிறார்” என்று புதிய தகவல்கள் இப்போது வெளியாகிவருகிறது. ''கடந்த நான்கு ஆண்டுகால சிறை வாழ்க்கை அவரது கடந்த கால வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு பாருங்கள், அந்த மாற்றங்கள் தெரியும்'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவருக்கு உச்சநீதிமன்றம் உறுதி செய்த நான்கு ஆண்டு தண்டனைக் காலம் வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதியோடு நிறைவடைகிறது. ஆனால், ஏற்கனவே அவர் சிறையிலிருந்து காலத்தையும், தண்டனை காலத்தில் அவர் இரண்டு முறை பரோலில் வந்த நாள்களையும் கணக்கிட்டால், அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதியோடு அவரது தண்டனைக் காலம் நிறைவடைகிறது. அதைத் தாண்டி அவரை சிறைக்குள் வைத்திருக்க முடியாது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் தொகையையும் அவர் சார்பில் கடந்த வாரம் கட்டப்பட்டுவிட்டது.

இந்தநிலையில், சசிகலாவின் சிறை வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. சிறைக்குள் சசிகலா செடிகள் வளர்ப்பது, சேலைகளுக்கு டிசைனிங் வேலை, பூக்கள் வளர்ப்பது போன்ற பல பணிகளில் ஈடுபட்டுள்ளார்.மேலும். கன்னட மொழியை முழுமையாக் கற்றுள்ளார் என்று சிறைத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் சிறை வாழ்க்கை குறித்து சசிகலாவைச் சிறைக்குள் சந்திக்கும் அவருக்கு நெருக்கமான உறவினர்களிடம் பேசியபோது சசிகலாவின் சிறை வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

``நான்கு ஆண்டு சிறை வாழ்க்கை சசிகலாவை முழுமையாகவே மாற்றியுள்ளது. அதோடு இந்த சிறைக்காலத்தில் பல்வேறு இழப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார். குறிப்பாக, அவருடைய கணவர், அண்ணன், அண்ணி ஆகிய பலரது மரணம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் சிறைக்குள் அவர் பல சிக்கலைச் சந்தித்தார். ஆனால், போகப்போகச் சிறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். போயஸ்கார்டனில் அவர் வசிக்கும் போதே, செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். போயஸ்கார்டனில் புதிய வகைச் செடிகளை நட்டுவைத்து வளர்த்துவந்தார். சிறைக்குள் ஆரம்பத்தில் அவர் ஆரம்பித்த வேலையே கன்னட மொழியைக் கற்றுக்கொள்வதுதான். அந்தமொழியைப் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். கன்னட மொழிப் பயிற்சி முடித்தற்கான சான்றிதழையும் அவர் பெற்று ஓர் ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. அவருடைய உடல்நிலை ஆரம்பத்தில் அவருக்கு சிக்கலாக இருந்தாலும், இப்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. யோகா செய்யும் வழக்கத்தையும் சிறைக்குள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவருடைய உடலின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதையும் தன்னைச் சந்திக்கவருபவர்களிடம் பல முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தினால் அவருடைய கண்களிலிருந்து அடிக்கடி தண்ணீர் வந்துக்கொண்டே இருக்கும். அது இப்போதும் உள்ளதாம்.

சசிகலா, இளவரசி

சிறைக்குள் செல்லும் போதே சில சாமிப் படங்களையும் அவர் எடுத்துச்சென்றிருக்கிறார். சசிகலா சிவ வழிபாட்டில் அதிக நாட்டம் உடையவர். அதே போல் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்ட, அடிக்கடி பார்த்தசாரதியையும் கும்பிடுவார். சிறைக்குள் உள்ள தனது அறையில் சிறிய அளவில் இந்த சாமிப்படங்களை வைத்து தினமும் கும்பிட்டு வருகிறார். நான்கு மணிநேரம் பூஜைக்காகச் செலவு செய்கிறார். ஜெயலலிதாவைப் போல் இப்போது ஆஞ்சநேயரையும் வழிபட ஆரம்பித்துள்ளார் சசிகலா. இதனால், இப்போது முழுமையாகச் சைவ உணவையே உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிட்டார். சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில்தான் இருப்பதால் சசிகலாவுக்குத் தனிமை சூழ்நிலையில்லை. தினமும் தியானம் செய்ய ஆரம்பித்துள்ளார். காலையில் எழுந்து பூஜைகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஒரு ஆண்டுக்குச் சிறையில் அவர்களைச் சந்திக்கச் சென்றவர்களிடம் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வாங்கிவரச்சொல்லியிருந்தார். சென்னையிலிருந்து காய்கறி விதைகள் வாங்கி அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த விதைகளைப் போட்டு வளர்த்துவந்து, அதில் கிடைக்கும் காய்கறிகளைப் பெண் சிறை கைதிகளின் உணவுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

Also Read: சிறைக்குள் விவசாயம் செய்தாரா சசிகலா... கைதிகள் விவசாயம் செய்ய வாய்ப்புண்டா?

பெண்கள் சிறை வளாகத்தில் அவர் வளர்ததுவரும் செடிகளிலிருந்து பூக்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறார். தொலைக்காட்சியில் தினமும் தமிழ் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பதால் தமிழகத்தில் அனைத்து அரசியல் நிலவரங்களையும் துல்லியமாக்க அறிந்துவைத்திருக்கிறார். கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக அவரை யாரும் சந்திக்க முடியவில்லை. கொரோனா தொற்றின் தாக்கத்தினால் சிறை நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

சிறையிலிருந்து கொண்டே தனக்கு நெருக்கமான பலருக்கும் கடிதங்களை அவர் எழுதியிருக்கிறார். தன்னை யார் சந்திக்கவேண்டும் என்பதை அவரே முடிவுசெய்வதால், அவர் ஒப்புதல் இன்றி அவரை யாரும் சந்திக்கமுடியாத நிலை உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை இளவரசி, சசிகலா இருவருமே சுதாகரனைச் சந்திக்கிறார்கள்” என்கிறார்கள்.

ஜெயலலிதா - சசிகலா

சசிகலாவுக்கான அபராதத் தொகை சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட நிலையில், கடந்த திங்கள் அன்று இளவரசிக்கான அபராதத் தொகையை வழக்கறிஞர் அசோகன் தரப்பினர் நீதிமன்றத்தில் கட்டியுள்ளனர். சுதாகரனுக்கான அபராதத் தொகை மட்டுமே இதுவரை நீதிமன்றத்தில் செலுத்தப்ப வில்லை. சுதாகரனின் அபராதத் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டால் மூவர் விடுதலையிலும் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் மூவரில் சுதாகரனே முதலில் விடுதலையாவார் என்கிறார்கள். காரணம், சுதாகரன் ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நாள்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரே முதலில் வெளியே வரும் நபராக இருப்பார் என்கிறார்கள். அதன்பிறகு இளவரசியும், கடைசியாக சசிகலாவும் விடுதலையாக வாய்ப்புண்டு என்கிறார்கள். சிறை வாழ்க்கை சசிகலாவுக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அந்த படிப்பினைகளை வெளியே வந்து அவர் வெளிப்படுத்தும்போது தெரியும் என்று 'ட்விஸ்ட்' வைக்கிறார்கள் அவரின் அனுதாபிகள்.



source https://www.vikatan.com/news/politics/jayalalithas-style-sasikalas-secret-changes-inside-the-prison

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக