Ad

புதன், 11 நவம்பர், 2020

`இதெல்லாம் சரியா பண்ணா, சளி பிடிக்காமலே மருதாணி வைக்கலாம்!' - வழிகாட்டும் நிபுணர்

பட்டாசு, மத்தாப்பு, பலகாரங்கள் தவிர தீபாவளி என்றாலே மருதாணிக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆனால், இந்த அடைமழைக்காலத்தில் மருதாணி வைத்துக்கொண்டால் பலருக்கு சளி பிடிக்கக்கூடும். மருதாணி வைத்துக்கொண்டாலே தும்மல், தலைவலி வந்துவிடுகிறது என்று அந்த ஆசையையே தள்ளி வைத்து விடுகிறவர்களும் உண்டு. இதோ சளி பிடிக்காமல் மருதாணி வைத்துக்கொள்வது எப்படி என்ற சூட்சுமங்களை உங்களுக்காகத் தருகிறார் மெஹந்தி ஸ்பெஷலிஸ்ட் பிரேமா வடுகநாதன்.

``ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கும் கோனை வாங்கிப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். அதில் கலக்கப்படும் கடுமையான வேதிப்பொருள்கள் உடல்நலனை பாதிக்கும். அதற்குப் பதிலாக வீட்டிலேயே மெஹந்தி கோனை தயாரித்துவிடுங்கள். வீட்டிலேயே மெஹந்தி தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை கிடையாது. எளிமையான முறையில் இதைத் தயாரிக்கலாம்.

வீட்டிலேயே மெஹந்தி எப்படித் தயாரிப்பது?

முதலில் எந்தவிதமான கலப்படமும் இல்லாத உயர்தர மெஹந்தி பவுடரைக் கடையிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கைக்கு மெஹந்தி போடுவதற்குத் தேவைப்படும் பொருள்களின் அளவையும் தயாரிப்பு முறையையும் இப்போது பார்க்கலாம்.

இரண்டு டேபிள்ஸ்பூன் ஹென்னா பவுடரை எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு மஸ்லின் துணி அல்லது பயன்படுத்தாத சிந்தெடிக் துப்பட்டா போன்றவற்றில் நன்கு சலித்து அகலமான எவர்சில்வர் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். (டீ வடிகட்டி அல்லது மாவு சலிக்கும் சல்லடை போன்றவற்றில் ஹென்னாவை சலிக்கக் கூடாது. மஸ்லின் துணியே சிறந்தது) ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் டீத்தூளுடன், ஐந்து கிராம்பு மற்றும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் இதை, அடுப்பில் சிம்மில் வைத்துக் கொதிக்கவிட்டு கலவையானது இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் அளவுக்கு வற்றியதும் இறக்கவும். பின்னர் இதை ஆறவைத்து வடிகட்டி ஹென்னா பவுடருடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, இதனுடன் அரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலவையை நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஸ்பூனில் எடுத்துக் கீழே விட்டுப் பார்த்தால் கலவை கீழே விழ வேண்டும். அதாவது, இது இட்லி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும். பின்னர், இதில் பத்துப் பதினைந்து சொட்டுகள் யூகலிப்டஸ் தைலத்தைச் சேர்க்க வேண்டும். இந்த யூகலிப்டஸ் தைலம் மெஹந்தி வைப்பதால் உண்டாகும் தலைவலி, சளி, இருமல் போன்றவற்றைத் தடுக்கும்.

பின்னர் இந்தக் கலவையை ஒரு கண்ணாடி பவுலில் போட்டு கண்ணாடி மூடியால் நன்கு மூடி மின்விசிறிக் காற்று, ஏ.சி காற்று மற்றும் விளக்கு வெளிச்சம் படாதவாறு சோஃபாவுக்குக் கீழோ, மேசைக்குக் கீழே வைக்க வேண்டும். பிறகு, செலபன் ஷீட்டை கோன் வடிவத்தில் செய்து அதில் இந்த மெஹந்தி பேஸ்ட்டை நிரப்பினால் ஹோம்மேடு மெஹந்தி கோன் தயார்.

இப்படித் தயாரித்த மெஹந்தி பேஸ்ட்டை அறைவெப்பநிலையில் 24 மணிநேரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். என்னால் உடனே பயன்படுத்த இயலாது என்பவர்கள் மேற்சொன்ன அடிப்படை அளவுகளை வைத்து உங்களுக்கு வேண்டிய அளவுக்கு மெஹந்தி பேஸ்ட்டை தயாரிக்கலாம். பின்னர் அதை ஒரு ஸிப் லாக் கவரில் வைத்து மூடி பிறகு, அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மறுபடியும் இதை ஒரு ஸிப் லாக் கவரில் போட்டு ஃப்ரீஸரில் வைத்து மூன்று மாதங்கள் வரைக்கும்கூடப் பயன்படுத்தலாம்.

மெஹந்தி - கதை சொல்லும் கரங்கள்

மெஹந்தி பேஸ்ட்டில் யூகலிப்டஸ் தைலம் சேர்க்கப்பட்டுள்ளதால் இதை ஒரேயொரு ஸிப் லாக் கவரில் போட்டு அப்படியே ஃப்ரீஸரில் வைத்தால் அதன் வாசம் ஃப்ரீஸரில் உள்ள மற்ற உணவுப் பொருள்களுக்கும் போய்விடும் என்பதால் மேற்சொன்னதுபோல இரண்டு மூன்று கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் டப்பா ஆகியவை புடைசூழ மெஹந்தி பேஸ்ட்டை வைக்க வேண்டும்.

நீங்கள் எப்போது மெஹந்தி போடப்போகிறீர்களோ அதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு ஃப்ரீஸரிலிருந்து மெஹந்தியை வெளியே எடுங்கள். பின்னர் மெஹந்தி இருக்கின்ற ஸிப் லாக் கவரை சரிசமமாக அழுத்திவிட்டால் மெஹந்தி பேஸ்ட் நெகிழ்ந்துவிடும். பின்னர் இந்த ஸிப் லாக் கவரில் ஒரு சிறிய துளை ஒன்றைப் போட்டு அதிலிருந்து மெஹந்தி பேஸ்ட்டை அப்படியே அழுத்தி அழுத்தி கோனிற்கு மாற்றுங்கள். பின்னர் ஸிப் லாக் கவரில் துளையிட்ட இடத்தை சுத்தம் செய்து அந்தப் பகுதியை செலோடேப் கொண்டு மூடி மறுபடியும் மேற்சொன்னதுபோல மூன்றடுக்குப் பாதுகாப்புடன் ஃப்ரீஸரில் வைத்துவிடுங்கள். மீண்டும் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்துங்கள்.

ரெடிமேட் கோன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை:

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ரெடிமேட் கோனைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் உடனே அதை வாங்கி கடகடவெனப் பயன்படுத்திவிடாதீர்கள். ரெடிமேட் கோன் மூலம் உள்ளங்கை மற்றும் கை விரல்களின் மேலேயுள்ள மென்மையான பகுதி போன்றவற்றில் சாம்பிளுக்கு சில சிறிய புள்ளிகளை வைத்து 15 நிமிடங்கள் கழித்து கையைத் தண்ணீரில் கழுவுங்கள். கை சிவந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் 15 நிமிடங்கள் பொறுத்திருங்கள். அதன் பின்னரும் உங்கள் கைகளில் எரிச்சல் அல்லது அலர்ஜி பாதிப்பு எதுவும் இல்லை என்றால் மட்டுமே ரெடிமேட் கோனைப் பயன்படுத்துங்கள்.

Henna plant

மருதாணி இலையை எப்படிப் பயன்படுத்தலாம்?

இவை எல்லாவற்றையும் தாண்டி மருதாணி இலையை அரைத்து கைகளில் வைத்துக்கொள்ள விரும்புகிறவர்களும் உண்டு. ஆனால், இயல்பாகவே மருதாணி இலைகள் மிகவும் குளுமை என்பதால் இந்த மழைக்காலத்தில் அரைத்த மருதாணி விழுதுடன் எலுமிச்சைச் சாறு சேர்ப்பதைத் தவிர்த்து மருதாணி விழுதை ஒரு பவுல் அல்லது கொட்டாங்குச்சியில் எடுத்து அதனுடன் யூகலிப்டஸ் ஆயிலில் சில சொட்டுகளைச் சேர்த்துக் கலந்து பயன்படுத்தலாம்.

கல்யாண நேரத்தில் சளிபிடிக்காமல் இருக்க...

எனக்கு சைனஸ் பிரச்னை இருக்கிறது. ஆனால் நவம்பர், டிசம்பரில் கல்யாணம் எனும் சூழ்நிலையில் சில பெண்கள் இருப்பர். திருமணத்துக்கு முதல்நாள் மெஹந்தி கலைஞர் இவர்களின் கைகளுக்கு மெஹந்தி போட ஆரம்பிக்கும்போதே சூடாகத் தண்ணீர் அல்லது காபி, அல்லது தேநீர் அல்லது பால் போன்றவற்றை இவர்கள் பருகலாம். அதேபோல கால்களுக்கு மெஹந்தி போடுவதற்கு முன்பு காலை இவர்கள் பொறுக்கும் சூட்டில் தண்ணீரில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து பின்னர் மெஹந்தி போட்டுக்கொண்டால் உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு மெஹந்தியால் உண்டாகுக் குளிர்ச்சி தலையில் ஏறாமல் தவிர்க்க முடியும்.

Mehandi

சைனஸ் போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நார்மலாக இருப்பவர்கள் ஐந்து முதல் ஆறு மணிநேரம் கழித்தே கைகால்களில் போட்டிருக்கும் மெஹந்தியைக் கலைக்க வேண்டும். அப்போதுதான் சிவப்பு நன்கு பிடிக்கும். ஆனால், சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் சற்று சீக்கிரமே எடுத்துவிடலாம். சிலர் மெஹந்தி காய்ந்ததும் கைகளைத் தண்ணீர் விட்டுக் கழுவுவர். அதுபோன்று செய்யக்கூடாது. butter knife கொண்டே காய்ந்த மெஹந்தியை எடுக்க வேண்டும்.

அதீத கவலையைப் போக்கும் சூப்பர் வழி இது!

மெஹந்தி போட்டாலே சளி பிடித்துவிடுமே என்கிற அதீத கவலையில் இருப்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். நான்கைந்து கிராம்பை உரலில் இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதை நன்கு சூடேற்றி அதில் இடித்த இந்தக் கிராம்பைப் போட்டு கரண்டியால் கிளறினால் புகை கிளம்பும். இந்தப் புகையில் உங்கள் மெஹந்தி போட்ட கையைக் காட்டி எடுங்கள்.

பின்னர் இதே கையில் கடுகு எண்ணெயைத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் டிஷ்யூ பேப்பரால் கையைத் துடைத்துவிடுங்கள். இப்படிச் செய்வதால் மெஹந்தி போடுவதால் உண்டாகும் சளி, தலைவலி போன்றவற்றிலிருந்து நீங்கள் தப்ப முடியும்.

மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன்

Also Read: `சந்தோஷத்துல திக்குமுக்காடிப் போயிட்டேன்!’ - செளந்தர்யாவுக்கு மெஹந்தி போட்ட நஃப்லா குஷி

மெஹந்தி போட்ட கை பிசுபிசுப்பாக இருக்கிறது என்று சிலர் கையைக் கழுவுவதுண்டு. ஆனால், மெஹந்தி போட்டுக்கொண்ட அன்று முடிந்தவரைக் கைகளைக் கழுவாதீர்கள். அவசியமெனில் வெட் டிஷ்யூவால் கைகளைத் துடைத்துவிடுங்கள். அதேபோல மெஹந்தி வைத்துக்கொண்ட மறுநாள் கைகளில் சோப்புத் தண்ணீர் அல்லது பிளீச்சிங் செய்யப் பயன்படும் பொருள்கள், எண்ணெய் போன்றவை படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். கல் உப்புகூட கைகளில் போட்டிருக்கும் மெஹந்தியின் பளபளப்பைக் குறைத்துவிடும் என்பதால் சில நாள்களுக்கு கவனமுடன் கைகால்களைப் பராமரியுங்கள்” என்கிறார் பிரேமா.



source https://www.vikatan.com/fashion/fashion/a-complete-guidance-for-mehandi-preparation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக