Ad

புதன், 11 நவம்பர், 2020

தேனி : 5 சென்ட் நிலம்; 150 செடிகள்! - மீண்டும் தலைதூக்குகிறதா கஞ்சா சாகுபடி?

தேனி மாவட்டம் கம்பம் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் கஞ்சா பயிர் செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து கடந்த சில நாட்களாக, கம்பம் மலைப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னக்கண்ணு தலைமையில், ஆய்வாளர் சிலைமணி, உதவி ஆய்வாளர் திவான்மைதீன் மற்றும் தனிப்படை போலீஸார், கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் ஆகியோர் மலைப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். போதை தடுப்புப் பிரிவு மோப்பநாய் வெற்றி இவர்களுக்கு உதவியாக வரவழைக்கப்பட்டிருந்தது.

Also Read: புதுக்கோட்டை: கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள்! - மீட்டு வந்து ஒப்படைத்த மீனவர்கள்

மோப்ப நாய் வெற்றி

இந்நிலையில், கம்பம் மணிகட்டி ஆலமரம் மேற்கு மலையடிவாரப் பகுதியில் முள்செடிகள் இருக்கும் புதர்பகுதிக்கு நடுவே சுமார் 5 செண்ட் இடத்தில் 150 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 அடி முதல் 8 அடி வரை நன்கு வளர்ந்த செடியாக அவை காட்சியளித்தது. கஞ்சா செடிகள் அனைத்தும் வெட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும் போது, ``அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் எடை சுமார் 500 கிலோ இருக்கலாம். அதன் மதிப்பு பல லட்சம் ரூபாய். இந்த வனப்பகுதியில் யார் கஞ்சா பயிர் செய்தது என விசாரித்து வருகிறோம். தமிழக கேரள எல்லையிலும் சோதனையை அதிகப்படுத்தியிருக்கிறோம்.” என்றனர்.

Also Read: காரைக்கால்: கஞ்சா வியாபாரியைப் பிடித்த காவலருக்குப் பணியிடமாற்றமா?! - ஆளுநருக்குப் பறந்த புகார்

வெட்டி அழிக்கப்பட்ட கஞ்சா செடிகள்

இது குறித்து தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “15 வருடங்களுக்கு முன்னர், தேனி மாவட்டத்தின் வருசநாடு, கம்பம் மலைப்பகுதியில் கஞ்சா பயிர் செய்யப்பட்டுவந்தது. காவல்துறையின் முயற்சியால் தற்போது கஞ்சா பயிர் செய்வது கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கஞ்சா பயிர் செய்யும் வழக்கம் ஆரம்பித்திருக்கிறது. இதனை காவல்துறை கடும் நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/theni-resurfaces-cannabis-cultivation-police-in-action

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக