Ad

புதன், 11 நவம்பர், 2020

ராணிப்பேட்டை: நெல் கொள்முதலுக்கு கமிஷன்; அதிரடி காட்டிய விஜிலென்ஸ்! -ஓட்டம் பிடித்த இடைத்தரகர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்துள்ள மகேந்திரவாடியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்திருக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்யும் நெல்லை இந்த கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். தினந்தோறும் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. மூட்டைகளை இறக்கிவைக்கவும், எடை போடவும் விவசாயிகள் ஒரு பைசாகூட கொடுக்கத் தேவையில்லை.

நெல் மூட்டைகள்

இப்படியிருக்க, கொள்முதல் நிலையத்தில் அரசியல் செல்வாக்குடைய இடைத்தரகர்கள் ஆக்கிரமித்திருப்பதால், விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை அடாவடித்தனமாக கமிஷன் பெறப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இப்படி, நாளொன்றுக்கு வரும் ஆயிரம் மூட்டைகளுக்கும் மனசாட்சியே இல்லாமல் பணத்தை வசூல் செய்துள்ளனர். அதே நேரம், காலை முதல் இரவு 10 மணிக்குள்ளாக நெல் மூட்டைகளை எடைப்போட்டு விவசாயிகளை அனுப்பிவிட வேண்டும்.

ஆனால், அரசின் உத்தரவுகளைமீறி நள்ளிரவுக்கு மேல் விடிய விடிய விவசாயிகளை காத்திருக்க வைத்து நெல் மூட்டைகளை எடை போட்டுள்ளனர். விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த பெருங்குற்றத்துக்கு நெல் கொள்முதல் நிலைய அரசுப் பணியாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, நேற்று முந்தினம் இரவு 10 மணியளவில், நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

சிக்கிய இடைத்தரகர்கள்

போலீஸாரை கண்டதும் இடைத்தரகர்கள் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில், சிலரை மடக்கிப்பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இடைத்தரகர்களாக வலம்வந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சுமைப் பணியாளர்கள் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த சோதனையில், கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர் சந்திரசேகரிடமிருந்து 37,000 ரூபாயும், தற்காலிக ஊழியரிடமிருந்து 12,300 ரூபாயும் என மொத்தம் 49,300 ரூபாய்க்கான ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக, கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர் சந்திரசேகர்மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/anti-corruption-action-in-ranipet-against-brokers-against-corruption

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக