Ad

சனி, 7 நவம்பர், 2020

`எல்லோருக்குமான அதிபராகப் பணியாற்றுவேன்!’- வெற்றி உரையில் ஜோ பைடன் உறுதி

கொரோனா தாக்குதலுக்கு மத்தியிலும் அமெரிக்கா அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தலானது பல்வேறு காரசாரமான விவாதங்களுக்கு பிறகு விறுவிறுப்பாகக் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்தது. இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் தேர்தலுக்கு முன்னரே தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவுசெய்து வந்தனர்.

தேர்தல் முடிவுகள் குறித்து அறிவிப்பதில் கடந்த நான்கு நாள்களாக நடந்து வந்த இழுப்பரியால் ட்ரம்ப் Vs பைடன் ஆட்டம் உலகநாடுகளிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

ஜோ பைடன்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று இரவு வெளியான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் நாட்டின் முதல் பெண் துணை அதிபராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜோ பைடன் ஆதரவாளர்கள்

தேர்தல் வெற்றிக்குப் பிறகு சொந்த ஊரான டெலாவரின் வில்மிங்க்டன் பகுதியில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் வெற்றி உரையாற்றிய ஜோ பைடன், ``ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது.

Also Read: US Election 2020: `அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன்!’ - முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடியதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. இன்று அமெரிக்காவுக்கு புதியதோர் விடியல் பிறந்துள்ளது. நாட்டு மக்கள் இந்த வெற்றியின் மூலம், தங்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளனர். எந்த பேதமுமின்றி மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து, உங்கள் அனைவருக்கான அதிபராக செயல்படுவேன். என்னை ஆதரித்தமைக்கு நன்றி. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் நான் காப்பாற்றுவேன். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம். கொரோனா காலத்திலும் நமது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.

ஜோ பைடன்

தொடர்ந்து பேசிய பைடன், பதவியேற்ற பிறகு தான் மேற்கொள்ளப்போகும் பணிகள் குறித்து உரையாற்றினார். அப்பொழுது, ``நான் தேர்தல் விவாதங்களில் வாக்குறுதியளித்தது போலவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்பே எனது முதல் இலக்கு. நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமாகவே செயல்படுத்தப்படும்.

இனி, எந்தப் பிரிவினையுமின்றி வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து ஒன்றிணைந்து செயல்பட்டு, எல்லோருக்குமான அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமனுக்குமான அதிபராகப் பணியாற்றுவேன்” என்று உறுதியளித்தார்.

ஜோ பைடன்

ஜோ பைடனுக்கு முன்னதாக அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பேசுகையில், ``இளைய தலைமுறையினர், தங்கள் வாழ்க்கையில் சாதிக்கத் தூண்டுவதற்கு எனது வெற்றியே உதாரணமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் இல்லத்துக்கு மேல் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/international/joe-biden-victory-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக