Ad

சனி, 7 நவம்பர், 2020

ராமநாதபுரம்: `2 வாரம்தான்; சிறுமழைக்கே தாங்காத ஊரணி வடிகால் பாலம்!’ - தொங்குபாலமான அதிர்ச்சி

ராமநாதபுரம் அருகே சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊரணி நீர் வடிகால் பாலம், மழை நீருக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் 2 வாரங்களுக்கு உள்ளாகவே இடிந்து விழுந்திருப்பது கிராம மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ராமநாதபுரம்: 2 வாரத்தில் இடிந்த வடிகால் பாலம்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்டது வண்ணாங்குண்டு கிராமம். இந்த கிராமப் பஞ்சாயத்தில் உள்ள நாகநாத சமுத்திரம் பகுதியில் மான்குண்டு தாவு ஊரணி ஒன்று உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இந்த ஊரணியில் மழை நீரைத் தேக்கும் வகையில் சீர்படுத்தி படித்துறை மற்றும் வடிகாலுடன் கூடிய 'பைப் கல்வெட்டு' அமைக்கத் திட்டமிடப்பட்டது.

வடிகால் பணிக்கான கல்வெட்டு

இதன்படி மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 58 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளின் போது ஊரணியின் மேற்குக் கரையில் ரூ. 1.86 லட்சம் மதிப்பீட்டில் 'பைப் கல்வெட்டு' வகையிலான வடிகால் பாலமும், படித்துறையும் அமைக்கப்பட்டது.

Also Read: கூடலூர் : பாலம் கேட்டு மனு கொடுத்தால், வீடு கட்டித்தரப்படும்னு பதில் வருது!’ - அதிகாரிகள் அலட்சியம்

ஊரணிக்கான படித்துறை மற்றும் பைப் கல்வெட்டு வடிகால் பாலப் பணிகள் முடிவடைந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், இரு நாள்களுக்கு முன் அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அந்த சிறு மழையின் காரணமாக ஊரணிக்கு பெருக்கெடுத்து வந்த நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட பைப் கல்வெட்டு வடிகால் பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. பாலத்தின் அடிப்பகுதியில் காண்கிரீட் கற்கள் இல்லாமல் வெறும் மணலை கொண்டே வடிகாலினைக் கட்டியுள்ளனர். இதனால் மண் பகுதி மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தொங்கு பாலமாக மாறிபோனது.

ஊரணியின் மேற்கு கரை வடிகால் பாலம்

புதிதாக கட்டப்பட்ட வடிகால் பாலம் இரு வாரங்களுக்குள்ளாகவே இடிந்து விழுந்து சேதமடைந்திருப்பது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், `இதுபோன்ற தரமற்ற முறையில் பாலம் அமைத்து, அரசு நிதியினை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/newly-constructed-bridge-damaged-in-rain-near-ramnad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக