Ad

திங்கள், 23 நவம்பர், 2020

`ஊழல் - வாரிசு அரசியல்'... யாரைச் சொன்னார் அமித் ஷா? - அரசியல் விமர்சகர்கள் அலசல்!

``தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். ஊழல் பற்றிப் பேசுவதற்கு காங்கிரஸ் - தி.மு.க கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்று அரசு விழாவில், அரசியல் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!இதைத் தொடர்ந்து, `கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை என்னவென்று கேட்ட காமெடிபோல் இருக்கிறது அமித் ஷாவின் பேச்சு' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வழியே பதிலடி கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனோ, ``ஜெயலலிதா - சசிகலா இருவரும் ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள். அடுத்து, எந்த ஊரில்தான் வாரிசு அரசியல் இல்லை?... இந்த மாதிரியான பேச்சுகளை அமித் ஷா, பீகாரில் வேண்டுமானால் பேசிக்கொள்ளட்டும். அங்கே அதிகம் படித்தவர்களும் அறிவாளிகளும் கிடையாது. ஆனால், தமிழ்நாடு அப்படியல்ல'' என்று திருப்பி அடித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தபோது, ``மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது தமிழ்நாடு'' என்று பேசியிருந்தார் அமித் ஷா. அவரது இந்தப் பேச்சு, மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க அரசின் ஊழலை சுட்டிக்காட்டுவதாக அப்போது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், தற்போது அதே அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி அறிவித்திருக்கும் மேடையிலேயே, 'ஊழல்-வாரிசு அரசியல்' என பொதுப்படையான குற்றச்சாட்டுகளை அமித் ஷா முன்வைத்திருப்பதும் சர்ச்சையாகிவருகிறது.

அமித் ஷா

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், 'ஊழல் - வாரிசு அரசியல்' குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசியபோது,``ஜனநாயக நாட்டில், 'வாரிசு அரசியல்' என்ற குற்றச்சாட்டு, மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்தது. ஏனெனில், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்தியா முழுக்கப் புறக்கணிக்கப்பட்ட ராகுல் காந்தியை, தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுவிட்டது.

2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதும்கூட, இதே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக் கட்சி 'வாரிசு அரசியலை'த்தான் முதன்மையாக எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்தது. அதாவது மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது படங்களை போஸ்டர்களாக அச்சடித்து பிரசாரம் செய்தது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி. ஆனால், தி.மு.க கூட்டணிதான் அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இங்கே வாரிசு அரசியல் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுவது இல்லை.

ஸ்டாலின் - தயாநிதி - வாசன் - அன்புமணி

உதாரணமாக, தி.மு.க-வில் இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார் என்றால், அதை அந்தக் கட்சியில் உள்ள மற்ற திறமையான தலைவர்களே ஏற்றுக்கொள்ளும்போது வேறு யாருக்கு இதில் பிரச்னை இருக்கப்போகிறது? எனவே, வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்தெல்லாம் மக்கள் மத்தியில் முடிவு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த உண்மைகள் எல்லாம் அமித் ஷா-வுக்கும் தெரியும். எனவே, ஓர் அரசியல் பிரசாரத்துக்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Also Read: கேரளா: `வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை!’ - எதிர்ப்பால் பின்வாங்கிய பினராயி விஜயன்

1996-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, தி.மு.க வெற்றி பெற்றது. அது அந்த ஒரு தேர்தலுக்குத்தான் பொருந்தும். மறுபடியும் அதே கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் திரும்பவும் அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியபோதும்கூட, ஜெயலலிதா வெற்றி பெற்றுக்கொண்டேதான் இருந்தார். இது தி.மு.க-வுக்கும் பொருந்தும். எனவே, இனியும் 2ஜி ஊழலை முன்வைத்து தி.மு.க மீது குற்றம் சுமத்தமுடியாது'' என்றார்.

ரவீந்திரன் துரைசாமி - ப்ரியன்

இந்த நிலையில், அமித் ஷாவின் 'ஊழல் - வாரிசு அரசியல்' குற்றச்சாட்டு குறித்து அரசியல் விமர்சகர் ப்ரியன் நம்மிடம் பேசியபோது, ''முதலமைச்சரில் ஆரம்பித்து அமைச்சர்கள் பலர் மீதும்கூட ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்துக்கொண்டு, அ.தி.மு.க தலைவர்கள் இருக்கின்ற மேடையில் நின்றுகொண்டு 'ஊழல் குற்றச்சாட்டு' குறித்து அமித் ஷா பேசுகிறார் என்றால், அது நிச்சயம் அ.தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றியது அல்ல. தி.மு.க மீதான 2ஜி குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியினரின் நிலக்கரி பேர குற்றச்சாட்டுகளை மனதில் வைத்துக்கொண்டு பேசியதாகத்தான் இருக்கும்.

Also Read: பி.ஜே.பி கூட்டணி முடிவைத் தன்னிச்சையாக அறிவித்தாரா ஓ.பி.எஸ்? - அ.தி.மு.க-வில் அடுத்த சர்ச்சை

அடுத்து வாரிசு அரசியல் பற்றி, அமித் ஷா எழுப்பியுள்ள கேள்விக்கு தி.மு.க-விலிருந்து பதிலடியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். 'ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி' என கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய வாரிசுகள் பற்றித்தான் அமித் ஷா பேசியிருக்கிறாரே தவிர, கட்சியிலுள்ள நிர்வாகிகளின் வாரிசுகளைப் பற்றி அல்ல. ஏனெனில், நிர்வாகிகளின் வாரிசுகள் பலரும் பொறுப்புகளில் இருப்பார்கள்தான். அவர்கள் எல்லோரும் நாளை தலைவர்களாக வருவார்கள் என்று சொல்லிவிட முடியாது.

பிரியங்கா - ராகுல்

அதேசமயம் வாரிசு அரசியல் என்பது அந்தந்த கட்சிகளைப் பொறுத்த விஷயம். ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொள்வதென்பது காங்கிரஸ் தொண்டர்களைப் பொறுத்தது. அதில், பா.ஜ.க-வினர் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை. அதேபோல், உதயநிதி ஸ்டாலினை தி.மு.க-வினர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர,மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. மற்றபடி இந்த வாரிசுகளைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் தேர்தலின்போதுதான் தெரியவரும். அதுவரையில் வாரிசு அரசியல் விவகாரம் பற்றி நாம் எந்தவித கருத்தும் சொல்லமுடியாது'' என்றார் தெளிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/amit-shah-speech-about-corruption-and-succession-politics-will-boost-admk-bjp-alliance-in-tn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக