Ad

திங்கள், 23 நவம்பர், 2020

காரைக்கால்: கரை திரும்பாத 120 மீனவர்கள் - கடற்படை மூலம் மீட்க நடவடிக்கை!

நிவர் புயலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

காரைக்கால்

இது பற்றி அவர் பேசுகையில், ``சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில்  நிவர் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுடன் ஆலோசனை நடத்தினோம். ஒவ்வொரு துறையிலும் ஒரு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்

சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளை அகற்ற உத்தரவு,  மின்கம்பங்கள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வு செய்யவும், மரங்களிலுள்ள கிளைகளைக் கழிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைப்பட்டால் 12 மணி நேரத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

காரைக்கால்

புதுச்சேரியில் ஒரு படகில் மட்டும் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் இரவு கரை திரும்புவார்கள். காரைக்காலில் 90 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 120-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. அவர்களைக் கடற்படை மூலம் கரைக்குத் திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் பத்திரமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தேவையான மருந்துகளை இருப்புவைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும், சமுதாய நலக்கூடங்களிலும் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குப் போதுமான உணவு வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் இன்ஜின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று மாலையிலிருந்து 25-ம் தேதி வரை தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தப்பட்டிருக்கிறது.10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களைச் சிறப்பு வகுப்புக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளையும் 24 மணி  நேரமும் தயார்நிலையில் இருக்க உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/navy-deployed-to-rescue-120-karaikal-fishermen-who-did-not-returned-to-shore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக