Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

கடல் கொந்தளிப்பு... கட்டுப்பாடு இழக்கும் மிதவைகள் - சேதமடையும் பாம்பன் ரயில் பாலம்!

வடகிழக்கு பருவ மழை தொடங்கியநிலையில் தற்போதுள்ள பாம்பன் ரயில் பாலத்தைப் பாதுகாக்கும் வகையில், பாம்பன் கடலில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பாம்பன் பாலம்

நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. பாம்பன் கடலின் மீது கட்டப்பட்ட இந்திராகாந்தி சாலை பாலம், வாகன போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் வரையில் ரயில் பாலம் மட்டுமே தீவுக்குள் செல்வதற்கான ஒரே வாய்ப்பாக இருந்து வந்தது. சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு உதவி வரும் பாம்பன் பாலத்தில் இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை. இந்நிலையில், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள ஹெர்சர் தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து உள்ளது. இதனால் அவ்வப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாம்பன் கடலின் மீது இரு வழி பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பணிகள் நடக்கவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ரயில் பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் வகையில் `வெர்டிக்கல் டைப்’ தூக்கு பாலமும் அமைய உள்ளது. இதற்கென தற்போதைய தூக்கு பாலத்தின் அருகில் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் கருவிகள் கொண்ட மிதவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாலத்தில் மோதிய மிதவை

பாம்பன் வடகடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மிதவைகள் காற்றின் வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து, தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. நேற்று அதிகாலை பாலப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மிதவை ஒன்று, பாம்பன் பாலத்தின் மீது மோதியது.

பாலத்தில் மோதாமல் இருக்க மூழ்கடிக்கப்படும் மிதவை.

இதனால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தினமும் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற காரணங்களால் அந்த ரயிலும் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லாத நிலை ஏற்படுகிறது.

Also Read: 100 ஆண்டுகளை கடந்து, ஆச்சர்யப்பட வைக்கும் பாம்பன் ரயில் பாலம்... படங்கள்: உ.பாண்டி

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பாம்பன் வடகடல் பகுதியில் தற்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த கொந்தளிப்பில் புதிய பாலத்துக்கான மிதவைப் படகு இன்று காலை சிக்கியது. கிரேனுடன் உள்ள அந்த மிதவை கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதில் இருந்த வேலையாட்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதையடுத்து பழைய ரயில் பாலத்தில் மோதாமல் இருக்க அந்த கிரேன் மிதவையில் துழையிடப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கடிக்கப்பட்டாலும் காற்றின் வேகத்தினால் அந்த மிதவை பழைய பாலத்தின் மீது மோதும் வாய்ப்பு உள்ளதாகவே மீனவர்கள் கூறுகின்றனர்.

விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள கிரேன் மிதவை

இதனால் தற்போதைய ரயில் பாலம் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கவும், தற்போது நடைபெற்று வரும் ரயில் சேவை பாதிக்காமல் இருக்கவும், பாம்பன் கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ரயில் பால பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பின்னர் பணிகளைத் தொடர வேண்டும் எனவும் மீனவர்கள், பொதுமக்கள் கோரியுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pamban-railway-bridge-damaged-over-new-bridge-construction-work-equipment-alleges-fishermen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக