Ad

சனி, 7 நவம்பர், 2020

சென்னை: தங்க நகைகளுக்குத் துணிக் கவசம்; சீருடையில் கேமரா- இது தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு!

தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தி.நகரில் பொருள்களை வாங்க வழக்கத்தை விட ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்பதால் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தி.நகர் காவல் மாவட்டம் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவைக் கொண்டு கண்காணிப்பதோடு கூடுதல் பாதுகாப்பிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விடும் கமிஷனர்

Also Read: வேலூர்:`தீபாவளி வசூல் வேட்டை!’ - விஜிலென்ஸ் அதிரடி ரெய்டில் சிக்கிய அதிகாரி

இந்த பாதுகாப்பு சேவை திட்டத்தை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கமிஷனர் தினகரன், தெற்கு மண்டல இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பொதுமக்களுக்கு உதவிட மாம்பலம், பாண்டிபஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்ட நெரிசலை டிரோன் மூலம் கண்காணிக்கத் திட்டமிட்டுளோம்.

அடுத்து, கூட்ட நெரிசலில் பெண்களின் அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பாதுகாக்க கழுத்துத் துணி கவசங்கள் வழங்கப்படும். பெண்களின் கழுத்தில் இந்தக் கவசங்களை அணிவித்திட தனியாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றத் தடுப்பு குறித்து விழிப்புணர்வினை பெண்களுக்கு அளிப்பார்கள். மேலும் தற்காலிகக் கட்டுப்பாட்டு அறைகள், உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அதோடு உயர்கோபுரங்களில் பணியிலிருக்கும் காவலர்கள், பைனாகுலர் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடவுள்ளோர்களைக் கண்காணிப்பார்கள்.

பாதுகாப்பு சேவை திட்டங்களை தொடங்கி வைக்கும் கமிஷனர்

குற்றத்தடுப்பு பணியோடு இந்த ஆண்டு கொரோனா விழிப்புணர்வு பணிகளிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சீருடையில் காவல் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல்கள் என அனைவரும் சுழற்சி முறையில் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்" என்றனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள், தி.நகர் உஸ்மான்சாலை, பாண்டிபஜார் பகுதிகளில் நடந்து சென்று கொரோனா விழிப்புணர்வுக்காக மாஸ்க் அணிதல், சமூகஇடைவெளி கடைப்பிடித்தல் கைகளை அடிக்கடி கழுவுதல் குறித்து துண்டு பிரசுங்களை விநியோகித்தனர். அதோடு பாதுகாப்பாக தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் என போலீஸ் கமிஷனர் கேட்டுக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/chennai-police-beefed-up-security-ahead-of-diwali-in-t-nagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக