Ad

திங்கள், 23 நவம்பர், 2020

தனி ஒதுக்கீடு போராட்டம்; களமிறங்கும் பா.ம.க - ராமதாஸ் மீது பாயும் வன்னியர் சமூக அமைப்பு!

வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ம.க முன்னெடுத்திருப்பது, அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ` தேர்தல் நேரத்தில் தனி இடஒதுக்கீடு என்பது சாத்தியமில்லை. சமூக மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேட முயல்கிறார் ராமதாஸ்' எனக் கொந்தளிக்கின்றன வன்னிய சமூக அமைப்புகள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், கடந்த 22-ம் தேதி நடந்த இணையவழிக் கலந்தாய்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாயத்துக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில், வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும், போராட்ட நாள், வடிவம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மருத்துவர் அய்யாவுக்கு வழங்குவது என்றும் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழு தீர்மானித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ராமதாஸ் - அன்புமணி

முன்னதாக இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் அறிவித்திருந்தார். அந்தக் கூட்டத்தில், `தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் 19 சதவிகிதம் தவிர, மீதமுள்ள 81 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கிடைக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு டிசம்பர் மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், 20 சதவிகித தனி இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தனி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்துப் பணி நாள்களிலும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கின்றன. இது தொடர்பாகப் பேசியிருக்கும் மருத்துவர் ராமதாஸ், ``வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் போராடிவருகின்றன. ஆனால், `சமூகநீதியின் தொட்டில்’ என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் இந்த நியாயமான கோரிக்கைகூட நிறைவேற்றப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது. வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக இப்போது நடத்தப்படும் போராட்டம்தான் கடைசிப் போராட்டமாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின்போதே, அரசு அழைத்து 20 சதவிகித இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவிக்கும் அளவுக்குப் போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும்'’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தலைமைச் செயலகம்

இதற்காக, மாநில அளவிலான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக ஏழு பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழுவில், ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன், பேராசிரியர் கோ.தன்ராஜ், ஏ.கே.மூர்த்தி, அருள்.ஜி. செல்லப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸின் இந்தப் போராட்ட அறிவிப்பு, வட மாவட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பேரத்தை அதிகப்படுத்தும் யுக்தியாகவும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்திருக்கும் ராமதாஸ், `` `தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பேர வலிமையை அதிகரித்துக்கொள்வதற்காக ராமதாஸ் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார். மற்ற சமூகத்தினரை இது பாதிக்காதா...’ என்பது போன்ற அர்த்தமற்ற அனத்தல்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு அறிவிப்பு குறித்து, வன்னிய சத்திரியர் சாம்ராஜ்யம் அமைப்பின் தலைவர் சி.ஆர்.ராஜனிடம் பேசினோம். `` 69 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி தமிழக அரசு தனி ஒதுக்கீடு வழங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு கொடுத்ததுபோல, எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம். இதை வலியுறுத்தி நாங்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலமாக முதல்வரைப் பார்த்து மனு கொடுத்தோம். அதைக் கெடுக்கும் வகையில் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் ராமதாஸ். எம்.பி.சி-க்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு மட்டும் ஒதுக்குவதற்குத் தமிழக அரசு தயாராக இருக்கிறது. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தை அரசு அமைத்ததை பா.ம.க விரும்பவில்லை. 32 வருடங்களாக தனி இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசாமல், அரசியல்ரீதியாக வீழச்சியடைந்ததும், சாதியைக் கையில் எடுக்கிறார் ராமதாஸ்.

சி.ஆர்.ராஜன்

நாங்கள் முதல்வரிடம் வைத்த கோரிக்கையின்படி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அ.தி.மு.க-வின் செல்வாக்கு உயர்ந்துவிடும். வட பகுதிகளில் பா.ம.க துணையே இல்லாமல் அ.தி.மு.க எளிதாக வென்றுவிடும். ராமதாஸின் நாடகத்தையும் தோற்கடிக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைவிட்டால் வன்னிய சமூகத்துக்கு வேறு வாய்ப்பில்லை. வட தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியதற்கும் உள் ஒதுக்கீடு இல்லாமல் போனதுதான் காரணம். கடலூரில் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபப் பணிகள் நடந்தபோது, `வன்னிய சமூகத்தின் முக்கியக் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும்' என்றார் முதல்வர். அவர் உள் ஒதுக்கீட்டைத்தான் சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொண்டோம்" என்றவர்,

Also Read: `32 வருஷம்; 80 சீட்டுகள்; 2021-ல் ஆட்சி!' -பா.ம.க கூட்டத்தில் கணக்குப் போட்ட ராமதாஸ்

`` சாதிவாரிக் கணக்கெடுப்பை ராமதாஸ் எடுக்கச் சொல்கிறார். தேர்தல் நேரத்தில் எப்படிக் கணக்கெடுப்பு நடத்த முடியும்... சமூக மக்களைத் தொடர்ந்து ராமதாஸ் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது அ.தி.மு.க-வை மிரட்டுவதற்காக தனி ஒதுக்கீடு ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். முன்பு `நாடகக் காதல்’ என்பதைக் கையில் எடுத்தார். அது எடுபடவில்லை. வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை மையமாகவைத்துப் போராடினால் அனுதாபம் கிடைக்கும் எனத் திட்டமிடுகிறார். பா.ம.க-வுக்கு மொத்தமாக மூன்று சதவிகித வாக்குகள்தான் இருக்கின்றன. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைத்தது, படையாட்சியார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது, அவருடைய படத்தை சட்டசபையில் திறந்தது, அவரது மணிமண்டபத்தைக் கடலூரில் கட்டியது... என முதல்வருக்கு சமூக மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. பா.ம.க-வின் நாடகத்தைச் சமூக மக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்" என்றார் கொதிப்புடன்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் எதிரொலி மணியனிடம் பேசினோம். ``இடஒதுக்கீடுப் போராட்டம் என்பது எங்கள் கட்சியின் ஆணிவேர். எங்களின் முதன்மைக் கொள்கையே இட ஒதுக்கீடுதான். இந்தக் கட்சியே சமூகநீதிக்காகத்தான் தொடங்கப்பட்டது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. `அரசுப் பள்ளிகளே வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட்டுப் போகும் காலத்தில், மீண்டும் அவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கித் திருப்பிவிட்டிருக்கிறார். நாங்கள் கேட்பது, `எங்கள் சமுதாயத்துக்கும் தனி ஒதுக்கீடு கொடுங்கள்’ என்பதைத்தான். இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பெறுவதற்காக இப்போது போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். யாரிடம், எப்போது கேட்டால் கிடைக்குமோ, அப்போதுதான் கேட்க முடியும். இதை விமர்சனமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

எடப்பாடி பழனிசாமி- ராமதாஸ்

`எங்கள் கோரிக்கையை மையமாகவைத்து, யார் இடஒதுக்கீடு தருகிறார்களோ, அவர்களோடு கூட்டணி வைப்போம்’ என மருத்துவர் அறிவித்திருக்கலாமே... அவர் அவ்வாறு செய்யவில்லை. சமூகநீதியின் மீது அக்கறையுள்ள ஒருவராக முதல்வரைப் பார்க்கிறோம். கிராமப்புறத்திலிருந்து வந்த அவர், மிகுந்த நேர்மையோடு செயல்பட்டுவருகிறார். தவிர, இட ஒதுக்கீட்டை நாங்கள் புதிதாகக் கேட்கவில்லை. 20 சதவிகிதத்தில் உள் ஒதுக்கீடு கேட்கிறோம். கேரளா, ஆந்திராபோல தொகுப்பு இட ஒதுக்கீடு கொடுத்தாலும் சந்தோஷம்தான். இதைக் கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லையென்றால், எம்.பி.சி பிரிவிலுள்ள இடஒதுக்கீட்டைப் பிரித்துக் கொடுக்கலாம். அதன்படி, எங்களுக்கு 12 அல்லது 13 சதவிகித ஒதுக்கீடு வரலாம். இதனால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. தனி இட ஒதுக்கீடு கொடுத்தாலும் சந்தோஷம்தான்" என்றார் உறுதியாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-irks-over-ramadoss-protest-announcement-regarding-reservation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக