Ad

திங்கள், 23 நவம்பர், 2020

ஆரியின் இமேஜ் பலூனை ஊதி வெடித்த பாலாஜி... அப்ப எல்லாமே நடிப்பா ப்ரோ?! பிக்பாஸ் - நாள் 50

பிக்பாஸ் வீடு இன்று ரசாபாசமாக மாறியது. தடித்த வார்த்தைகள் பரஸ்பரம் எறியப்பட்டன. ஏறத்தாழ கைகலப்பு உண்டாகும்படியான சூழல். ‘ப்பா... ரொம்ப நாள் கழிச்சு கேமராக்களுக்கு இன்னிக்குத்தான் நல்ல தீனி’ என்று பிக்பாஸ் அகம் மகிழ்ந்திருப்பார்.

நிதானம், நேர்மை என்று இதுநாள் வரை இருந்த ஆரியின் பிம்பம், பலூன் மீது குண்டூசி பட்டது போல் ஒரே நாளில் உடைந்து போனது.

ஒன்று கோபத்தை அவ்வப்போது கொட்டி விட வேண்டும் அல்லது அதை முதிர்ச்சியுடன் கடந்து வர வேண்டும். ஆனால், அந்தக் கோபத்தை உள்ளேயே ஊற வைத்திருந்தால் அது நஞ்சாகவும் வன்மமாகவும் மாறி விடும். ஆரி இன்று அந்த நிலைமைக்கு வந்து சேர்ந்தது போல் இருக்கிறது. அவர் தினமும் செய்யும் தியானமெல்லாம் இன்று அவரைக் கை விட்டது.

இதன் இன்னொரு கோணமும் உண்டு. ஒருவன் போக்கிரியாக தினமும் அழிச்சாட்டியம் செய்யும் போது ‘அவன் அப்படித்தாம்ப்பா’ என்று அவன் செய்யும் சேட்டைகளை விட்டு விடுவார்கள். ஆனால் மிகப் பொறுமையாக இருக்கும் ஒருவன் திடீரென ஒரு நாள் வெடித்தால் ‘நீயாடா... இப்படிப் பண்ணே’ என்று எல்லோரும் சேர்ந்து கேள்வி கேட்டு சாகடிப்பார்கள்.

துரோகம், வன்மம், கோபம், வம்பு, சண்டை, சமாதானம் என்று பல விஷயங்கள் இன்று பிக்பாஸ் வீட்டில் நடந்தன.

பிக்பாஸ் - நாள் 50

50-வது நாளில் நடந்தது என்ன?

49-வது நாளின் நள்ளிரவு. பாலா டீம் பேசிக் கொண்டிருந்தது. (வேல் பிரதர்ஸ் மாதிரி நீங்களும் ஒரு பேர் வைங்கப்பா!) "கேப்டன் போட்டியில் நான் வேண்டுமென்றுதான் தோற்றேன். அர்ச்சனா குழுவின் நிழலில்தான் ரியோ இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் தலைவராக ஆனால் பாரபட்சமின்றி செயல்படுகிறாரா என்று பார்க்க நினைத்தேன். எனவே தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தேன்” என்று ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டார் ஆரி.

“அவிய்ங்க. ஒரு டீமாத்தான் இருக்காங்க... அவங்க ஆளுக்குள்ள ஒருத்தர் கேப்டனா வந்தாத்தான் லாபம்னு பார்ப்பாங்க. அதை உடைக்கணும். அர்ச்சனா கூட என்னை மகன் சென்டிமென்ட்ல கட்டிப் போட்டாங்க... இனிமே அது நடக்காது'’ என்று பழைய புராணத்தைப் பாடினார் பாலாஜி.

தலைவர் பதவியை ஆரி வேண்டுமென்றே விட்டுத் தந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த வெற்றி இந்தச் சமயத்தில் அவருக்கு மிக அவசியமானது. எந்தக் குழுவிலும் இணையாமல் தனித்திருக்கும் ஆரி மற்றவர்களால் எளிதில் நாமினேட் ஆவார். எனவே கேப்டன் ஆனால் இன்னமும் ஒரு வாரம் பாதுகாப்பாக அவர் கடக்க முடியும்.

ஒருவேளை பாலாஜியை நகலெடுத்து இன்னொருவரை தலைவராக்கி அழகு பார்க்கும் ராஜதந்திரத்தை ஆரி முயற்சிக்கிறாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஏனெனில் பாலாஜி சம்யுக்தாவை ஜெயிக்க வைத்தார். ஆரிக்கு ரியோ அத்தனை நெருங்கிய நண்பர் இல்லை.

ஆக... எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஆரி வேண்டுமென்றே தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பாலாஜியிடம் ‘உதார்’ காட்டுவதற்காக அவர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும்.

பிக்பாஸ் - நாள் 50

50-ம் நாள் விடிந்தது. ‘பம்பரக் கண்ணாலே’ என்கிற ரகளையான ரீமிக்ஸ் பாட்டு ஒலித்தது. சாம், ஷிவானி, ரம்யா ஆகிய முப்பெரும் தேவியர் இணைந்து கிச்சன் ஏரியாவில் ஆடியது கண்கொள்ளாக்காட்சி. அவர்கள் தினமும் இப்படி ஆடினால் நன்றாக இருக்கும். உற்சாகமாக நடனம் ஆடினாலும் தான் தயாரித்துக் கொண்டிருந்த டீயிலும் கவனமாக இருந்தார் ரம்யா.

ஸ்வப்னா கடமையிலும் கண்ணாக இருப்பவர் என்பதற்கு இதுவே உதாரணக்காட்சி. (பொறுங்கள்... உடனே ரம்யா ஆர்மியா என்று ஆரம்பித்து விடாதீர்கள்). அடுத்து அவர் செய்த காரியம்தான் ‘உவ்வேக்’ ரகம். பாத்திரத்தில் இருக்கும் டீயை கரண்டியில் மொண்டு ருசித்துப் பார்த்தவர், பிறகு மீண்டும் அந்தக் கரண்டியை பாத்திரத்திலேயே போட்டார். (போன சீசனில் வனிதா உணவை நக்கி ருசி பார்த்ததுதான் நினைவிற்கு வருகிறது). வெரி பேட் ஸ்வப்னா.

இந்த வார நாமினேஷனுக்கான சடங்கு ஆரம்பித்தது. அர்ச்சனா குழு ஒருமுறை கூட தங்கள் அணியைச் சேர்ந்தவரை நாமினேட் செய்யாமல் கட்டுக்கோப்பாக இயங்குகிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. எனவே குழுவில் இல்லாத அனிதா, சனத்தின் பெயர் அதிக முறை அடிபட்டது. அனிதா ஏனோ சாமின் மீது கொலைவெறியில் இருக்கிறார்.

இந்தச் சடங்கின்போது ஆரி செய்த சம்பவங்கள்தான் இன்றைய நாளின் சர்ச்சைக்கு அடிப்படை. அவர் நாமினேட் செய்ய கிளம்பும் போது ‘Count down starts’ என்பது போல் ரமேஷ் விளையாட்டாக கமென்ட் அடிக்க, ஆரிக்கு உடனே கோபம் வந்து விட்டது. "எப்பவுமே எனக்கு இப்படித்தான் பண்றீங்க. இந்த மாதிரி பண்ணாதீங்க” என்று கோபமாக சொல்லி விட்டு வாக்குமூல அறைக்கு போனார்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு காட்டப்படும் காட்சிக்கு முன்னாலும் பின்னாலும் நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை முழுவதும் அவர்களால் காட்ட முடியாது. எனவே நாமாகத்தான் அந்த இடைவெளியை நிரப்பிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காட்சியை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. அதனால்தான் சுச்சி வெளியேறும் போது அர்ச்சனா குழு தூரத்தில் மெளனப் பார்வையாளர்களாக நின்றதில் ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என்ன இருந்தாலும் அந்தச் சமயத்தில் அவர்கள் பெருந்தன்மையாக வந்து சுச்சியை வழியனுப்பி வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அப்போது அவர்கள் நடந்து கொண்டது நிச்சயம் முறையற்றது.

பிக்பாஸ் - நாள் 50
கோபம் அடங்காத ஆரி வாக்குமூல அறைக்குள் சொன்ன விஷயங்கள் சற்று திகைப்பை ஏற்படுத்தின. "நிஷா தனக்காக விளையாடவில்லை. பிக்பாஸ் என்னும் அரிய வாய்ப்பை அவர் மற்றவருக்காக பயன்படுத்துகிறார். இந்த வீட்டில் சில ஆண்களின் துணிகளை பெண்கள்தான் இந்த ஐம்பது நாளும் துவைக்கிறார்கள். இது சமத்துவம் இல்லை” என்ற ஆரி குறிப்பாக சோமை சுட்டிக் காட்டி ‘ராஜா வீட்டு கன்னுக்குட்டி’ என்றார்.

போட்டியாளருக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கி அவர்களின் சகிப்புத்திறனை சோதிப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையான சவால். ஆனால் இவர்கள் சைடு கேப்பில் லாரி ஓட்டுவது சுவாரஸ்யமாக இருக்கிறது. விசாரணை நாளில் கமல் இதை அழுத்தமாக விசாரிப்பார் என்று நம்புவோம். (சரி... நம்பி வைப்போமே!).

கோபம் இன்னமும் அடங்காத ஆரி, வெளியே வந்து ரமேஷிடம் மன்னிப்பு கேட்டு ‘குறுக்கே யாராவது எதையாவது பேசினா எனக்கு நெருக்கடியாகுது’ என்பது போன்ற பொதுவான எச்சரிக்கையைத் தந்தார்.

அதற்கு முன் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்களைப் பார்த்து விடுவோம். சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம் மற்றும் நிஷா.

(ஷிவானி போன்றவர்கள் ஒருமுறை கூட இதில் வராதது ஆச்சர்யமில்லை. ஏனெனில் அவர்கள் எந்த சர்ச்சையிலும் தலையிடாமல், யாரையும் பகைத்துக் கொள்ளாமல் பாதுகாப்பாக ஆடுபவர்கள். Soft targets-ம் கூட. அவர்களை எப்போது வேண்டுமானாலும் அடிக்கலாம். முதலில் பலமுள்ள எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதே கணக்கு).

ஆரியின் எச்சரிக்கையைக் கேட்ட பாலாஜிக்கு மண்டைக்குள் ‘சுர்’ என்று ஏறி விட்டது. ஏனெனில் சனமும் இவரும் முன்பு சண்டை போட்ட போது ஆரி குறுக்கே வந்து பேசியதை இவர் இன்னமும் மறக்காதிருக்கலாம். “நீங்கள் உபதேசிப்பதை முதலில் நீங்களே பின்பற்றுங்கள்" என்று பாலாஜி இடக்காக சொல்ல, ஆரியின் கோபத்தில் பெட்ரோலை ஊற்றியது போல் ஆகி விட்டது.

பிக்பாஸ் - நாள் 50
இந்த வாக்குவாதத்தின் இடையே தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினார் பாலாஜி. ஆரி நேற்று இரவு ‘கேப்டன்சியை விட்டுக் கொடுத்தேன்’ என்று சொன்னதை சபையில் இப்போது கச்சிதமாகப் போட்டுக் கொடுத்து விட்டார். இப்படிச் செய்தால் அாச்சனா குழுவின் பகைமை முழுதும் ஆரியின் மீது பாயும் என்று அவருக்குத் தெரியும். அவ்வாறே ஆயிற்று. ஒட்டுமொத்த வீடே ஆரியின் மீது வாக்குவாதப் போர் தொடுக்க தனியாளாக நின்று மல்லுக்கட்டினார் ஆரி.

"காதல் கண்ணை மறைக்குது'’ என்று தன் மீது புகார் சொன்ன ஆரியைப் பழிவாங்க, இப்படியொரு சந்தர்ப்பத்தை பாலாஜி பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

"உங்களை நம்பி வாக்களித்த எங்களை ஏமாற்றினீர்களா?” என்பது சனம் மற்றும் ரம்யாவின் கேள்வி. இந்தக் கூச்சலின் இடையே அனிதாவும் எதையோ சொல்ல முயல, வழக்கம் போல் அவரை யாரும் கவனிக்கவில்லை. (பாவம்ப்பா அந்தப் பொண்ணு!)

ரம்யா தனது லாஜிக் திறமையை வைத்து ஆரியை மடக்க முயன்று ஒரு கட்டத்தில் சலித்து விலகிப் போய் விட்டார். (ஸ்மார்ட்!) ஒரு கட்டத்தில் இவர் ஆரியின் கையை இயல்பாக தட்டி விட, அதற்கும் ஆரி பயங்கரமாக கோபித்துக் கொண்டார்.

“நேர்மை பத்தி பேசுகிற உங்களுக்குத்தான் நேர்மை கிடையாது” என்று ஆரியை நோக்கி அழுத்தம் திருத்தமாக பாலாஜி சொல்ல, இந்தச் சண்டை இன்னமும் பெரிதாகி ‘வாடா... வாடா... என் ஏரியாவுக்கு வாடா’ என்கிற வடிவேலு மாதிரி ஆரி பாலாஜியைத் துரத்திக் கொண்டே இருந்தார். "உண்மையான ஆம்பளைா இருந்தா..." என்கிற – ஆண்களை மிகவும் ஆத்திரமூட்டுகிற – வார்த்தைகளை ஆரி விட்டது மிகப் பெரிய சறுக்கல். அவரின் இதுவரையான பிம்பத்தை ஒட்டுமொத்தமாக குழி தோண்டிப் புதைக்கிற சறுக்கல்.

"உங்களை அவர் தூண்டி விடறாரு... அந்த trap-ல மாட்டிக்காதீங்க" என்று ஆஜீத் பாலாஜியிடம் சொன்னது சரியான விஷயம். "கைய இறக்கிப் பேசு... இல்லைன்னா வேற எதையாவது நீட்டிப் பேசுவேன்" என்ற பாலாஜியின் கமென்ட் ஆரியை இன்னமும் உக்கிரமாக்கி விட்டது. ஆனால், இதைப் பிறகு "காலை நீட்டிப் பேசுவேன்'’ என்கிற பொருளில்தான் சொன்னேன் என்று பாலாஜி சாமர்த்தியமாக மாற்றி விட்டார். பிறகு ஒரு கட்டத்தில் கீழே அமர்ந்து காலை நீட்டிக் காட்டிய போது மற்றவர்கள் பதறி அவரைத் தடுத்தார்கள்.

பிக்பாஸ் - நாள் 50

“அவருக்கு மரியாதை தரணும்னுதான் செருப்பை கழட்டி வெச்சுட்டு காலை நீட்டினேன்" என்று அந்தச் சமயத்திலும் பாலாஜி அளித்த நக்கல் விளக்கம் சுவாரஸ்யம். இதைக் கேட்டு தாங்க முடியாமல் ரியோவே சிரித்து விட்டார்.

பாலாஜி பின்வாங்கினாலும் ஆரி அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். ‘இரண்டில் ஒன்று இன்று பார்த்துவிடுவோம்’ என்பது அவரது எண்ணமாக இருக்க வேண்டும். பாலாஜியை எப்படியாவது தவறு செய்ய வைத்து விட்டு அவரை சிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கமாகவும் இருக்க வேண்டும்.

‘போதும்ப்பா விடுங்க... இது நேஷனல் டெலிவிஷன்ல வரும்’ என்று உரத்த குரலில் ஒரு கேப்டனாக ரியோ அதட்டல் போட்டவுடன் இந்தச் சண்டை சற்று ஓய்ந்தது. (அப்ப லோக்கல் டெலிவிஷன்ன்னா செய்யலாமா?!).

“பாலாஜி இப்பல்லாம் திருந்திட்டாரு. ரொம்ப மாற்றம் தெரியுது'’ என்று கமல் சொல்லிக் கொண்டிருந்தது பாலாஜியின் நினைவிற்கு வந்ததோ... என்னமோ. இந்த வாரத்தின் விசாரணை நாளில் இது நிச்சயம் வரும் என்பது அவருக்குத் தெரியும். எனவே தன் தரப்பை பாதுகாத்துக் கொள்ள ஆரியை நெருங்கி "தெரியாம பேசிட்டேன். கால்ல கூட விழறேன்" என்று மன்னிப்பு கேட்டார். ‘படுத்தே விட்டானாய்யா’ என்கிற ரேஞ்சிற்கு பாலாஜி இறங்கி வந்த போதே ஆரியும் இதை விட்டிருக்கலாம். "ஆம்பளையான்னு கேட்டதுக்கு சாரி" என்று பதிலுக்கு கெத்து குறையாமல் மன்னிப்பு கேட்டு அமர்ந்தார்.

பிறகு மறுபடியும் பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்திருந்த பாலாஜியிடம் "நீ மன்னிப்பு கேட்டு சீன் போடுவே... நாங்க அதை நம்பணுமா?” என்று விடாக்கொண்டனாக சண்டையை இழுக்க “சாம் கால்ல விழுவேன்-னு நீங்க கமல் சார் ஷோல சொன்னது கூட அப்ப டிராமாவாதான் இருக்கும்’' என்று பதிலடி தந்து விட்டு சாமர்த்தியமாக அங்கிருந்து விலகி விட்டார் பாலாஜி.

“உன் மேல நிறைய மரியாதை வெச்சிருந்தேன். அதை நீ இழந்துட்டே. இனிமே அதை நீ சம்பாதிக்க முடியாது” என்று ஆரி சீரியஸாகச் சொல்ல, "அதை வெச்சு நான் என்ன பண்ணப் போறேன்” என்று பாலாஜி இடக்காக சொன்னது அசத்தலான காமெடி. (பாவம் ஆரி!).

**

பிக்பாஸ் - நாள் 50

ஆரி அடிப்படையில் நேர்மையானவர். பொறுப்புணர்ச்சி கொண்டவர். அனைத்து விஷயங்களும் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி சொல்கிற புகாரின் படி, தான் உபதேசிப்பதை தானே பின்பற்றுகிறாரா என்று தெரியவில்லை. வெளியுலகத்தில் செடி வளர்த்து கின்னஸ் சாதனை செய்தவர், வீட்டிலுள்ள ஒரு செடியைக்கூட வளர்க்க முடியவில்லை என்பது ஓர் உதாரணம். தனது இத்தனை நாள் பிம்பத்தை, அதீதமான கோபத்தின் மூலம் தானே போட்டு உடைத்து விட்டார் ஆரி. அந்த வீட்டில் நிகழும் கீழ்மைகள் அவருக்குள் கோபத்தை உருவாக்கியிருக்கலாம். எந்தக் குழுவிலும் இல்லாமல் தனிமையாக உலவுவது கூட அவருக்குள் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்.

“யப்பா டேய்... இவனுங்க நல்ல ஃபார்ம்ல இருக்காங்க... இந்தத் தீ மேல இன்னும் ரெண்டு லிட்டர் பெட்ரோலை ஊத்துவோம்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்" என்று பிக்பாஸ் நினைத்தாரோ... என்னவோ!

பிக்பாஸ் வரலாற்றிலேயெ முதன்முறையாக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் நாமினேட் ஆனவர்கள் அனைவரும் கூடி உரையாட வேண்டும்.

நாமினேஷன் ஆகாதவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் இந்த வீட்டில் இருக்க தகுதியில்லாதவர் என்பதைக் காரணங்களுடன் கூறி நாமினேட் செய்யலாம். இந்த விவாதத்தில் வெல்பவருக்கு Topple card கிடைக்கும். அவர் தப்பித்துக் கொள்வார். அவர் சுட்டிக் காட்டியவர் எவிக்ஷன் லிஸ்ட்டிற்கு வருவார். (சுருக்கமாகச் சொன்னால் வடிவேலு ஒருவரின் தலையில் கைவைத்து மாட்டிக் கொள்வார் அல்லவா. அந்தக் காமெடி போல. ஒருவர் தப்பித்து இன்னொருவரை சிக்க வைக்கலாம்).

பிக்பாஸ் - நாள் 50
‘Eviction Free pass’-க்கு முன்பு நடந்த விவாதம் போல இந்த உரையாடல் மறுபடியும் ஆரம்பித்தது. (ரம்யா இருந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்). ஆரி சாமையும், ரமேஷ் ஷிவானியையும் (சூப்பரு!) நிஷா ஆஜீத்தையும் நாமினேட் செய்தனர். சனம் பிக்பாஸ் தவிர பெரிய பட்டியலை நீட்டினார். சாம், ஷிவானி, அர்ச்சனா ஆகிய மூவரை இவர் நாமினேட் செய்தார். (உள்ளே இருந்து தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா. ‘தண்ணிய குடி, தண்ணிய குடி’ என்று கிண்டலடித்தார்).

பாலாஜி மீது என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் அவரின் வெளிப்படைத்தன்மை பல சமயங்களில் வியக்க வைக்கிறது. அர்ச்சனாவை நாமினேட் செய்த இவர், "அர்ச்சனா கிட்ட சென்டிமென்ட்டா மாட்டிக்கிட்ட மாதிரி ஃபீல் பண்ணேன்... அவங்களுக்கு வேண்டியவங்க மட்டும் ஜெயிக்கணும்னு அர்ச்சனா இந்த விளையாட்டை ஆடறாங்க” என்றார். மிகச்சரியான காரணம் இது.

“யார் கிட்ட கடுமையா பேசினா தனக்கு பாதிப்பில்லையோ அவங்க கிட்ட மட்டும் கடுமையா நடந்துக்கறாங்க” என்ற குற்றச்சாட்டை வைத்து சாமை நாமினேட் செய்தார் அனிதா.

விக்ரமன் படங்களில் வரும் பாத்திரம் போல பேசினார் சோம். முதலில் கேபியை நாமினேட் செய்த இவர் “இப்படி செஞ்சா அந்தப் பொண்ணு இன்னமும் நல்லா விளையாடும்” என்று நம்புகிறாராம். அர்ச்சனாவிற்கு அவர் சொன்ன காரணம் நகைப்பாக இருந்தது. “அர்ச்சனாவை சிலர் அவமதிப்பாக பேசுகிறார்களாம். அதெல்லாம் அவருக்குத் தேவையில்லாததாம். அர்ச்சனா வீட்டிற்குச் சென்று நிம்மதியாக இருக்கலாமாம்”. கண்கலங்கியபடி இதை அவர் கூற ‘செல்லப்புள்ளைடா நீ’ என்று நெகிழ்ந்தார் அர்ச்சனா. இந்த மாதிரி டிராமாக்களை பார்க்கும் போது பாலாஜி மாதிரியே நமக்கும் கொலைவெறி ஏறுகிறது. இதென்ன விளையாட்டா, அல்லது தொலைக்காட்சி சீரியலா?

ஓகே... இப்போது நாமினேஷனில் இல்லாதவர்களை கோத்து விடும் பகுதி முடிந்தது. இப்பொது இவர்கள் தங்களுக்குள் பேசி, வாக்கெடுப்பு நடத்தி ‘யார் கார்டைப் பெறுவது?’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். முதல் கட்டத்திலேயே பாலாஜி, ஆரி, ரமேஷ் ஆகியோர் இதிலிருந்து விலகிக் கொள்வதாக சொல்லி விட்டனர்.

பிக்பாஸ் - நாள் 50

மக்கள் வாக்கின் மீது நம்பிக்கை வைத்து கார்டை மறுக்கிறார்களா, அல்லது வெளியேறி விடுவோம் என்று அஞ்சி கார்டை கைப்பற்ற நினைக்கிறார்களா என்பதுதான் இந்த விளையாட்டிலுள்ள சூட்சுமம். தன்னுடைய பயத்தை ஒப்புக் கொள்ளாமல் சிலர் விளையாட்டு காட்டிக் கொண்டேயிருந்தார்கள். அது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் சோம் இதிலிருந்து விலகிக் கொண்டார்.

ஆக மீதமிருப்பவர்கள் அனிதா, சனம், நிஷா. "நீங்கள் உங்களுக்காகத்தான் விளையாடுகிறீர்களா. இன்னொருவரை பாதுகாக்க இங்கு இருக்கிறீர்களா?” என்கிற சரியான கேள்வியை வைத்து நிஷாவை லாக் செய்ய அனிதாவும் சனமும் முயன்றனர். "என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. மக்கள் நிச்சயம் என்னைக் காப்பாத்துவாங்க. இருந்தாலும் இந்த வீட்ல இன்னமும் சில காலம் இருக்க விரும்புகிறேன்'’ என்கிற குழப்பமான பதிலைச் சொன்னார் நிஷா.

"நம்பிக்கையிருக்குன்னா கார்டை விட்டுக் கொடுக்க வேண்டியதுதானே" என்று சனம் சரியான லாஜிக்கை முன்வைத்தார். தனது வாக்கை சனத்திற்கு அளிப்பதாகச் சொல்லி சனத்தை வெட்கப்பட வைத்தார் பாலாஜி. (என்னவே நடக்குது இங்க?!). ஆனால் அங்கு நடந்த குழப்பத்தைப் பார்த்து "யாருக்கும் கிடையாது போங்கப்பா..." என்று மறுபடியும் குட்டையைக் குழப்பினார் பாலாஜி.

இப்படி கச்சா முச்சாவாக நடந்து கொண்டிருந்த விவாதத்தில் அதிர்ஷ்டக் காற்று ஒரு சமயத்தில் நிஷாவின் பக்கம் அடித்தது. ஆனால், "அனிதா ஏதோ விட்டுக்கொடுப்பது போல தருவதில் எனக்கு விருப்பமில்லை" என்று நிஷா முரண்டு செய்ய "மறுபடியும் மொதல்ல இருந்தா'’ என்று ரமேஷ் கோபித்துக் கொண்டார். (அவருக்கு பசி நேரம் ஆரம்பித்திருக்க வேண்டும்).

நிஷா அவருடைய விளையாட்டை அவருடைய இஷ்டம் போல் விளையாடுவது அவரின் உரிமை. அவரைக் கட்டுப்படுத்துவது போல ரமேஷ் ஆதிக்கம் செலுத்துவது முறையற்றது. ரமேஷின் கைப்பாவை போல நிஷா செயல்படுவது அறியாமை.
பிக்பாஸ் - நாள் 50

இந்தச் சண்டைகளுக்கு இடையில், "யாருக்கும் வேணாம்ன்னா சொல்லுங்க. நான் எடுத்துக்கறம்ப்பா'’ என்று வெளிப்படையாக அறிவித்து காமெடி செய்தார் சனம். (ஒருவகையில் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு சனம்!). அனிதா தனக்கு வேண்டாவெறுப்பாக தந்ததை மறுபடியும் அனிதாவிற்கே நிஷா திருப்பித்தர (மண்டை குழம்புது!) பெரும்பான்மை என்னும் அடிப்படையில் அனிதாவிற்கு அதிர்ஷ்ட அட்டை கிடைத்தது. (ஹப்பாடா!).

அதிர்ஷ்ட அட்டையைப் பெற்ற அனிதா, நாமினேஷனின் போது சொன்ன அதே காரணத்தை இப்போதும் சொல்லி சம்யுக்தாவின் பெயரைச் சொல்ல சாமின் முகம் சுருங்கியது. என்றாலும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார். ஆக எவிக்ஷன் பட்டியலில் அனிதாவின் பெயர் அடிக்கப்பட்டு சாமின் பெயர் ஏற்றப்பட்டது.

ஒரு மாம்பழத்தைத் தந்து பரமசிவனின் குடும்பத்தில் குண்டு வைத்த நாரதரைப் போல ஒரு அதிர்ஷ்ட அட்டையைத் தந்து விட்டு இந்த பிக்பாஸ் செய்யும் திருவிளையாடலும், கலகமும் இருக்கிறதே... அப்பப்பபா!

ஆக... பிக்பாஸின் ஐம்பதாவது நாள் (பார்வையாளர்களின் நோக்குப்படி) இப்படியாக மங்கலகரமாக நடந்து முடிந்தது. சுபம்!


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/aari-vs-bala-and-eviction-topple-card-bigg-boss-tamil-season-4-day-50-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக