Ad

புதன், 25 நவம்பர், 2020

பட்டுக்கோட்டை: நிவர் புயல் அச்சம்; வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற தாய், மகள்! கொள்ளையால் அதிர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவரது மனைவி சரஸ்வதி(40). இவர்களுடைய மகள் பாக்கியலட்சுமி (19). பன்னீர் செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சரஸ்வதியும், பாக்கியலட்சுமியும் தொக்காலிக்காட்டில், தங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு நடுவே அமைந்துள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. 2018-ல் வீசிய கஜா புயல் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும் வாழ்வாதரமாக இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் மீதும் மரங்கள் விழுந்தன. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் யார் மனதை விட்டும் இன்னும் அகலவில்லை.

கொள்ளை நடந்த வீடு

இந்நிலையில், நிவர் புயல் வீசும் என்ற தகவல் வெளியானதுமே இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும் அச்சமடைந்தனர். தென்னந்தோப்பிற்கு நடுவே கூரை வீடுகளில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு நிவர் புயல் பாதிப்பை உண்டாக்குமோ என்ற அச்சத்திலும், பாதுகாப்பு கருதியும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமியும் தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு உறங்கச் சென்று விட்டனர்.

பின்னர், நேற்று காலை வீட்டுக்கு வந்து போது,வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.10,000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

``புயல் வீசுவதால் தென்னை மரங்கள் வீட்டின் மேல் விழுந்து விடும் என்ற பயத்தால் உறவினர் வீட்டுக்கு உறங்கச் சென்றோம். புயல் வீசக்கூடிய இந்த நேரத்திலும் மர்ம நபர்கள் சிலர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், வீட்டிலிருந்த நகையையும் அத்தியாவசிய தேவைக்கு வைத்திருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்’’ என விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தவர்களிடம் சரஸ்வதி புலம்பி கொண்டிருந்தது வேதனையை ஏற்படுத்தியது.

Also Read: நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! - 4 மாவட்டங்களில் மிகக் கனமழை

இதையடுத்து சரஸ்வதி அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். புயலினால் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/pattukkottai-woman-files-police-complaint-over-theft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக