Ad

புதன், 25 நவம்பர், 2020

நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! - 4 மாவட்டங்களில் மிகக் கனமழை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், தீவிரப் புயலாக வலுவிழந்து புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே முழுவதுமாகக் கரையைக் கடந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், ``அதி தீவிர நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக நேற்று இரவு 11.30 மணிக்கும் இன்று அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் கரையைக் கடந்தது. தற்போது அது தீவிரப் புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது.

நிவர் புயல் | கடலூர்

அடுத்துவரும் 6 மணி நேரத்துக்கு வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழக்கும். இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை தொடரும். காற்றும் பலமாக வீசக்கூடும்’’ என்றார். புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நேற்று இரவு முதலே கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கடலூரில் 26 செ.மீ மழையும், புதுச்சேரியில் 24 செ.மீ மழையும் பதிவானது.

Also Read: `நிவர்' புயல் கரையைக் கடந்தது; கனமழை தொடரும்! - வானிலை ஆய்வு மையம் #Nivar #LiveUpdates

புயல் கரையைக் கடந்த பின்னர் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை புயலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதுகுறித்து பேசிய பாலச்சந்திரன், ``புயல் கரையைக் கடந்த பின்னர், கடலோர மாவட்டங்களில் ஆறு மணி நேரத்துக்கு புயல் வலுவாக இருக்கும். அதன் பின்னர், புயல் படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.

நிவர் புயல் | கடலூர்

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 முதல் 75 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 85 கி.மீ வேகத்திலும் வீசலாம். திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் முற்பகல் முதல் பிற்பகல் வரை பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரையும், சில நேரங்களில் 75 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்’’ என்று அவர் கூறியிருந்தார்.



source https://www.vikatan.com/news/disaster/cyclone-nivar-rains-to-continue-in-north-districts-of-tn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக