Ad

புதன், 18 நவம்பர், 2020

வேலூர்: `வீடியோவைக் காட்டி மிரட்டினான்!’ - 6 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள மேல் ஆலத்தூர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். 50 வயதான இந்த நபர் பேரன், பேத்தி எடுத்துவிட்டார். இந்தநிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவியும், அவரின் மகளும் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார் யுவராஜ். அந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டி, ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகளிடம், கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சம்பவம், தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

யுவராஜ்

பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பாலியல் கொடூரன் யுவராஜைக் கைதுசெய்தனர்.

தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் மனுவில் இளம்பெண்... ‘‘2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் நான் ஸ்கூல் போயிட்டிருந்தேன். அப்போ, திடீர்னு வந்து யுவராஜ் செல்போனை காட்டி `பாரு’னு சொன்னான். அதுல, என்னுடைய அம்மாவும், நானும் குளிக்கிற வீடியோ இருந்துச்சு. `நான் சொல்ற மாதிரி கேட்கலைன்னா, வீடியோக்களை நெட்டில் விட்டிருவேன்’னு மிரட்டினான்.

‘வீடியோவையெல்லாம் டெலிட் பண்ணுங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்’னு சொன்னேன். அவனும், வேலூர் பக்கத்துல இருக்கிற ஓட்டேரி பகுதிக்கு என்னைக் கூட்டிகிட்டுப் போனான். அங்கே என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செஞ்சான். அதுக்கு அப்புறம் குளிக்கிற வீடியோவை டெலிட் பண்ணிருவான்னு நெனச்சேன். ஆனா, என்னை வன்கொடுமை செய்யுற வீடியோவையும் ரகசியமா எடுத்து தொடர்ந்து என்னை சித்ரவதை செஞ்சான். `வெளியில யார்கிட்டயாவது சொன்னா, மொத்த வீடியோவையும் நெட்டில் விட்டிருவேன். குடும்பத்தையே வெட்டிப் போட்டிருவேன்’னு தொடர்ந்து மிரட்டினான்.

யுவராஜ்

என்னுடைய வீட்டுக்கே வந்து அப்பா, அம்மாவையும் மிரட்ட ஆரம்பிச்சான். அதுமட்டுமில்லாம, மாசம் 10,000 ரூபாய் மிரட்டி வாங்கிட்டிருந்தான். அப்பாவும் பயந்துக்கிட்டு காசு கொடுத்துக்கிட்டு இருந்தாரு. இப்ப நான் சென்னையில நர்ஸா இருக்கிறேன். சென்னைக்கு வந்தும் தொந்தரவு செய்யுறான். அப்பாவையும் அம்மாவையும் அடிக்கிறான். வீட்டுல இருக்கிற பொருள்களை உடைக்கிறான். கடந்த 2015-வது வருஷம், என்னை சித்தூர் அழைச்சிக்கிட்டு போய் கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டான். அந்தத் தாலியை நான் தூக்கியெறிஞ்சிட்டேன். இப்போ, `முகத்துல ஆசிட் அடிக்கப்போறேன்’னு மிரட்டுறான்’’ என்று கூறியிருந்தார் அந்தப் பெண்.

விசாரணையில், இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, யுவராஜ் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை நேற்றிரவு சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/young-woman-sexual-abused-in-gudiyatham-man-arrested-after-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக