கேரள மாநிலத்தின் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் (நவ.16) அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக வாரத்தின் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் சபரிமலை சன்னிதானம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கபட உள்ளனர்.
மண்டலகால மகரவிளக்கு பூஜை காலத்தில் அனைத்து நாள்களுக்குமான தரிசன முன்பதிவுகள் நவம்பர் ஒன்றாம் தேதியே முடிவடைந்துவிட்டது. சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 15-ம் தேதி தமிழகத்தில் இருந்து சென்ற இரண்டு பக்தர்களுக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் ரானி-யில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதுபோல நேற்றும் ஒரு தமிழக பக்தருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இல்லாத நிலை காணப்பட்டது. பக்தர்கள் மலை ஏறும்போதும், பதினெட்டாம் படி ஏறும்போதும் சமூக இடைவெளி கடைபிடித்து செல்கின்றனர். பம்பா நதியில் குளிக்க அனுமதி இல்லாததால், பம்பையில் ஷவர் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பம்பையில் 200 ரூபாய்க்கு ஸ்டீல் பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வழியில் தண்ணீர் பிடிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலை இறங்கும்போது ஸ்டீல் பாட்டிலை கொடுத்தால் 200 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது.
மலை ஏறும் பகுதியில் 23 இடங்களில் கைகளைச் சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் ஐந்து இடங்களில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலையில் டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு நடை சார்த்தப்படும். பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 19-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை மீண்டும் சார்த்தப்படுகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், கூடுதல் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என சி.பி.எம் அரசு முடிவு செய்துள்ளதாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. அதேசமயம் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படிதான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "சபரிமலை குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். அந்த பிரசாரத்தை பக்தர்கள் கண்டுகொள்ளவில்லை" என்றார்.
source https://www.vikatan.com/spiritual/temples/sabarimala-devotees-to-follow-strict-safety-norms
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக