Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

கால்குலேஷன்லாம் இனி ஒண்ணுமில்ல பிரதர்... மும்பையை மிரட்டி, சென்னையை விரட்டிய ராஜஸ்தான்! #RRvMI

நேற்று சென்னை அணி ஜெயித்ததும், கமுக்கமாக கட்டிலுக்கு அடியில் புகுந்து கால்குலேட்டரை திறந்தார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால், `இனி கால்குலேஷன்லாம் ஒண்ணுமில்ல ப்ரதர்' என கையை விரித்தது ராஜஸ்தான்.

முதல் சீசனில் துவங்கிய பந்தம். `சென்னை அணி போகும் இடமெல்லாம் நானும் வருவேன்' என ஃபாலோ பண்ணி வரும் பாடிசோடா இந்த ராஜஸ்தான் ராயல்ஸ். தடை விழுந்து விளையாடாமல் இருந்த காலத்திலும் நமது பக்கத்து கட்டிலில் படுத்துக்கொண்டு சாத்துக்குடி ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தது. புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் படுத்து கிடந்தபோதும், துணைக்கு கிட்டே வந்து குத்த வைத்தது. அப்படிபட்ட, ராஜஸ்தான்தான் சென்னை ரசிகர்களின் ஜீரோ வாட்ஸ் சந்தோஷத்தையும் ஃபியூஸ் போக வைத்தது நேற்று!

#RRvMI

அபுதாபியில் நேற்று நடந்த 2020 ஐபிஎல்-ன் 45வது மேட்சில், மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முரட்டுத்தனமான தைரியமும், குருட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேண்டும் என தயார் நிலையில் இருந்தது ராஜஸ்தான். `நீ முறைக்குறத பார்த்தா க்ளைமேக்ஸ் வரைக்கும் வந்து சண்டை போடுவ போலியே' என சந்தேகமாகப் பார்த்து, டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது மும்பை. அந்த அணியில் கூல்டர் நைலுக்கு பதிலாக பேட்டின்ஸன் ஆடினார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை அணியின் நட்சத்திர ஓப்பனிங் ஜோடி, டிகாக்கும் கிஷனும் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் ஜோசிய ஆர்ச்சர். ஓவரின் 4-வது பந்து, ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு திறுதிறுவென முழித்தார் டி காக். `உனக்கு கட்டம் சரியில்லை' என கடுப்பான ஜோசிய ஆர்ச்சர், அடுத்த பந்திலேயே டி காக்கை டிஸ்மிஸ் செய்தார். 2-வது ஓவரை வீசவந்தார் வரலாற்றிலிருந்து மறைக்கபட்ட எட்டாவது வள்ளல் ராஜ்புத். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன இஷான் கிஷனுக்கு. 3-வது ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்தார் ஆர்ச்சர். `ஏன் இவ்ளோ கஞ்சத்தனம். ச்சைக்' என கோபப்பட்ட ராஜ்புத் அடுத்த ஓவரில் 13 ரன்களை கொடுத்து காலரைத் தூக்கிவிட்டார்.

#RRvMI

அடுத்த ஓவரை வீசவந்தார் கார்த்திக் தியாகி. பெயருக்கு ஏற்றார்போல், அவரும் சூர்யகுமாருக்கு இரண்டு பவுண்டரிகளை தியாகம் செய்தார். `ஓ நீங்களே இரண்டு பவுண்டரி கொடுத்தா, அப்போ எனக்கு என்ன மரியாதை' என குடுகுடுவென ஓடிவந்து ஒரே ஓவரில் சூர்யகுமாருக்கு லாங் லெக்கில் ஒரு சிக்ஸர், கிஷனுக்கு ஷார்ட் ஃபைனில் ஒரு சிக்ஸரை இடதுகையில் அள்ளி வழங்கினார். பவர்ப்ளேயின் முடிவில், 59/1 என கெத்தான நிலையில் இருந்தது மும்பை. 7-வது ஓவரை வீசவந்தார் கோபால். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. அடுத்து திவேதியா வந்தார். 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கோபால் வீசிய 9-வது ஓவரில், பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியும், நேராக ஒரு பவுண்டரியும் விளாசினார் சூர்யகுமார் யாதவ். திவேதியா வீசிய 10வது ஓவரில், கிஷனுக்கு ஷார்ட் ஃபைன் திசையில் இன்னொரு பவுண்டரி கிடைத்தது.

11-வது ஓவரில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார் ஆர்ச்சர். கார்த்திக் தியாகி வீசிய ஓவரின் 4-வது பந்தை தேர்ட் மேன் திசைக்கு பறக்கவிட்டார் கிஷன். அங்கே நின்றுகொண்டிருந்த ஆர்ச்சர், பந்தைக் கேட்ச் எடுக்க நினைத்து, அதை தவறாகவும் கணித்து இரண்டு - மூன்று ஸ்டெப்கள் முன்னோக்கி நகர்ந்தார். பிறகுதான், பந்து பிடனியைத் தாண்டி போய்கொண்டிருப்பது தெரிய, எகிறி ஒற்றைக்கையில் பந்தை அமுக்கினார். ராஜஸ்தான் அணியினரே அரண்டுபோனார்கள். கிஷானுக்கு, இதெல்லாம் வீரத்தழும்பு லிஸ்ட்லதான் வரும் என பெருமிதமாகவே பெவிலியனுக்கு திரும்பினார். கோபால் வீசிய 13-வது ஓவரில், ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சூர்யகுமார் யாதவ். 26 பந்துகளில் 40 ரன்கள் எனும் நல்ல இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து இறங்கிய கப்தான் பொல்லார்டு, லாங் ஆஃபில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். எங்கேயோ போன பந்து, அதை எகிறி பிடிக்க முயன்ற ஸ்டோக்ஸின் கைகளை உரசி சென்றது. அடுத்த பந்தை டாட் பந்தாக மாற்றி, பொல்லார்டை முறைத்தார் கோபால். பொல்லார்டுக்கு கோபம் வந்தது.

#RRvMI

`கஜேந்திரனை தோக்கடிக்கணும்னா, அவனுக்கு மதம் பிடிக்க வைக்கணும்' எனும் `ஆரண்ய காண்டம்' ஃபார்முலாவை இறக்கி, அடுத்த பந்தில் அவரை க்ளீன் போல்டாக்கினார் கோவாலு. அடுத்து ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தார். 15 ஓவர்களுக்கு 116/4 என சரிந்துக்கொண்டிருந்தது மும்பை. திவாரியும், ஹர்திக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். `ஹூஹும்... இது சரிபட்டு வராது' என அக்ரஷன் மோடுக்கு மாறினர். ஆர்ச்சர் வீசிய 17வது ஓவரில், 2 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் வெளுத்தார் திவாரி. அடுத்த ஓவரை வெளுத்துக்கட்ட, ஹர்திக்கும் வேட்டியை மடித்துக்கட்டி நின்றுகொண்டிருந்தார். வந்தார் வள்ளல் ராஜ்புத். லாங் ஆனில் ஒரு சிக்ஸர், லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர், ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸர், ஸ்கொயரில் ஒரு சிக்ஸர் என ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டார் பாண்டியா. 27 ரன்கள் கொடுத்த திருப்தியில், நிம்மதியாக சென்றார் ராஜ்புத்.

19வது ஓவரை வீசிய ஆர்ச்சர், திவாரியின் விக்கெட்டையும் கழட்டி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ராஜ்புத்துக்கு கோபம் வந்தது. ஆனால், ஒரு வீரர் 4 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்கிற காரணத்தினால், கையறு நிலையில் கையை பிசைந்து நின்றுக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்குப் பதிலாக தியாகி வந்தார். டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவரில் இரண்டு பவுண்டரி, லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர், பவுலரின் தலைக்கு மேல் இன்னொரு சிக்ஸர் என அவரும் 27 ரன்கள் கொடுத்து ராஜ்புத்துக்கு ராஜமரியாதை செய்தார். 21 பந்துகளில் 60 ரன்களை விளாசிய பாண்டியா, மும்பையின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 195/5 என உயர்த்தியிருந்தார். 196 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்கோடு களமிறங்கியது ராஜஸ்தான் அணி. பென் ஸ்டோக்ஸும், ராபினும் ஓபனிங் இறங்கினார்கள். முதல் ஓவரை வீசினார் போல்ட். 5 ரன்கள் மட்டும் கிடைத்தது. பேட்டின்ஸன் வீசிய 2 வது ஓவரில், மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய உத்தப்பா, மிட் ஆனில் நின்றுக்கொண்டிருந்த பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். `உத்தப்பா... என்னப்பா' என மீண்டும் தலையில் கைவைத்தது ராஜஸ்தான் அணி.

#RRvMI

ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும். இல்லையெனில் அடித்து நொறுக்கப்படுவோம் என்பதை உணர்ந்த ஸ்டோக்ஸ், போல்ட் வீசிய 3-வது ஓவரில் டங்குவாரை கிழித்தார். ஹாட்ரிக் பவுண்டரிகள் உட்பட 4 பவுண்டரிகள் ஒரே ஓவரில். `சரி பும்ராஸ்த்திரத்தை இறக்கிட வேண்டியதுதான்' என பும்ராவைக் கூட்டிவந்தார் பொல்லார்டு. `வாடி வா...' என மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியையும், ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸரையும் வெளுத்தார் ஸ்மித். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒரு கள்ளிப்பூ மலர்ந்தது. கடைசியில், அதற்கும் கள்ளிப்பாலை ஊத்தி கருகவைத்தார் பேட்டின்ஸன். அடுத்த ஓவரிலேயே ஸ்மித் காலி. ஆனாலும், ஸ்டோக்ஸ் அசரவில்லை. ஹர்திக் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். பவர்ப்ளேயின் முடிவில், 55/2 என திடகாத்திரமான நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி.

சாஹர் வீசிய 8-வது ஓவரில், டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரும் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரியும் வெளுத்தார் ஸ்டோக்ஸ். அடுத்த ஓவரில், பொல்லார்டு வீசிய பந்தை லாங் ஆஃப் திசைக்கு பறக்கவிட்டார் சாம்சன். க்ருணால் வீசிய 10-வது ஓவரில், 2 பவுண்டரிகளை விரட்டிய ஸ்டோக்ஸ், 28 பந்தில் அரை சதத்தையும் கடந்தார். 10 ஓவரில் முடிவில் 99/2 என மும்பையின் வயிற்றில் புளியைக் கரைத்தது ராஜஸ்தான். அடுத்த இரண்டு ஓவர்கள், பவுண்டரிகள் ஏதுமின்றி வறட்சியாகவே செல்ல, அதற்கடுத்த ஓவரில் ஸ்டொக்ஸும் சாம்சனும் சேர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விரட்டி மிரட்சி அடைய செய்தனர்.

#RRvMI

சஹார் வீசிய 14வது ஓவரில், ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸரும், சாம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியையும் தூக்கி கிடாசினார். புயல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜஸ்தானிடம், பும்ராவின் பாட்ஷாவும் பலிக்கவில்லை. தட்டிவிட்டு ஒரு பவுண்டரி, தொட்டுவிட்டு ஒரு பவுண்டரி என 2 பவுண்டரிகளை அள்ளினார் சாம்சன். அடுத்து பந்து வீச போல்ட்டையும், கூப்பில் உட்கார வைத்தது இந்த இணை. தட்டிவிட்டும், தொட்டுவிட்டும் ஸ்டோக்ஸ் இரண்டு பவுண்டரிகளை அவர் பங்குக்கு அள்ளினார். 60 பந்துகளுக்கு 97 ரன்கள் தேவை என ஆடிக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணி, 18 பந்துகளுக்கு 14 ரன்கள் என மேட்சையே தலைகீழாக மாற்றியது.

Also Read: ஸ்பார்க் இல்லை, தீப்பந்தமே எரிந்தது... சாம் கரண், கெய்க்வாட் அதிரடியால் வென்ற சென்னை! #RCBvCSK

19-வது ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு அணுப்பி, தனது சதத்தை நிறைவு செய்த ஸ்டோக்ஸ், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிவிட்டு மேட்சையும் நிறைவு செய்தார். "ஹர்திக் நல்லா விளையாடி, மேட்சை எங்க பக்கம் கொண்டு வந்தாப்ல. ஆனா, இந்த ஸ்டோக்ஸும் சாம்சனும் பின்னி பெடலெடுத்துட்டாங்க. பனியும் அவங்களுக்கு சாதகமா அடிச்சிடுச்சு" என்றார் பொல்லார்டு.

#RRvMI

"அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் விளையாடுவதை பார்க்க எவ்வளவு சுஹானுபவமாக இருக்கிறது. இதே வெறியோட அடுத்த இரண்டு கேமையும் எதிர்கொள்வோம். ஹல்லா போல்" என்றார் ஸ்டீவ் ஸ்மித். ஒற்றை ஆளாக மேட்சை மாற்றிய ஸ்டோக்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது. கண்ணீருடன் கைத்தட்டிக் கொண்டிருந்தனர் ராஜ்புத்தும் தியாகியும்!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-rajasthan-royals-vs-mumbai-indians-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக