Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

டெல்லி: `நம்பர் பிளேட் இல்லாத கார்; பெண்களிடம் அத்துமீறல்!’ போக்சோவில் கைதான போலீஸ் எஸ்.ஐ

டெல்லி துவாரகா பகுதியில் காரில் வரும் ஒருவர், பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக துவாரகா போலீஸார் நான்கு வெவ்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்தநிலையில், பெண் ஒருவர் இந்த விவகாரம் குறித்து வீடியோவுடன் சமூக வலைதளத்தில் கடந்த 17-ம் தேதி பதிவிடவே, இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.

க்ரைம்

அந்த வீடியோவில் பேசிய பெண், ``தசரா மைதானத்துக்கு அருகில், செக்டர் 11 சாலையில் காலை 8:30 மணியளவில் சைக்கிளிங் செய்துகொண்டிருந்தபோது சாம்பல் நிற கார் ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். அதனால், வேகமாக சைக்கிளை மிதித்தேன். ஆனால், விடாமல் என்னை அந்த கார் பின்தொடர்ந்த நிலையில், சைக்கிளுக்கு அருகில் வந்த காரின் வேகம் குறைந்தது. நான் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில் சைக்கிளை நிறுத்தினேன்.

கார் கண்ணாடியை இறக்கியபடி, என்னிடம் ஒரு முகவரியைக் குறிப்பிட்டு காரில் இருந்த நபர் விசாரித்தார். `நான் வேறு யாரிடமாவது கேளுங்கள்’ என்று கூறி நகர முயன்றபோது, அந்த நபர் ஆபாசமாகப் பேசத் தொடங்கினார். அந்தக் காலை நேரத்தில், சாலையில் அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். திடீரென அந்த நபர் தனது ஆடையைக் களையத் தொடங்கினார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் உடனடியாக உதவி கோரி சத்தமிட்டதுடன், அந்த சமயத்தில் நடந்தவற்றை வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டேன்.

கார்

எனது சத்தத்தைக் கேட்டு சிலர் உதவிக்கு வரத் தொடங்கியபோது, கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு அந்த நபர் காரில் வேகமாகச் சென்றுவிட்டார். அந்தச் சாம்பல் நிற காரில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை. போலீஸார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்தப் பெண் கலங்கியிருந்தார். இதேபோல், ஒரு சாம்பல் நிற காரில் வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றதாக சிறுமி ஒருவரும் போலீஸில் புகாரளித்திருந்தார். சாம்பல் நிற காரைக் குறிப்பிட்டே அந்தப் பகுதியில் நான்கு பெண்கள், ஒரு சிறுமி என ஐந்து பேர் புகார் சொல்லியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

Also Read: சிசிடிவி கேமரா... 2 சட்டை! - துப்பாக்கித் திருட்டில் நண்பருடன் கும்பகோணம் போலீஸ் சிக்கிய பின்னணி

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்த துவாரகா போலீஸார், சிசிடிவி காட்சிகள் மூலம் குறிப்பிட்ட சாம்பல் நிற கார் குறித்த காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினர். சுமார் 200 சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அந்த சாம்பல் நிற கார் ஜனக்புரி பகுதியை நோக்கிச் செல்வதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த வீட்டை போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கு நேரடியாகச் சென்று விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

எஸ்.ஐ புனீத்

சாம்பல் நிற கார் நிறுத்தப்பட்டிருந்த வீடு டெல்லி போலீஸில் சிறப்புப் பிரிவில் பணியாற்றிவந்த எஸ்.ஐ புனீத் கிரீவாலுக்குச் (Puneet Grewal) சொந்தமானது என்று தெரியவந்தது. அந்த கார், ஆசிரியையாகப் பணியாற்றும் அவரின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Also Read: ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமை; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை! - 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இது குறித்துப் பேசிய டெல்லி துவாரகா போலீஸார், ``டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவில் பணியாற்றிய புனீத், தற்போது போக்குவரத்துக் காவல் பிரிவில் எஸ்.ஐ-யாக இருக்கிறார். நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்று, துவாரகா பகுதியில் நான்கு பெண்கள், ஒரு சிறுமியிடம் அத்துமீற முயன்றிருக்கிறார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைதுசெய்திருக்கிறோம்.

பாலியல் சீண்டல்

மனைவி ஆசிரியை. அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். புனீத்தைப் பணி நீக்கம் செய்ய அவர் பணியாற்றும் துறைக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். விடுமுறைகால சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்’’ என்று தெரிவித்தனர். போக்குவரத்து எஸ்.ஐ-யான புனீத், தொடர்ச்சியாகப் பல பெண்களுக்குத் தொல்லை கொடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/delhi-police-si-arrested-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக