Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பஞ்சாப் பவர்... ஜாலியாகி காலியான ஹைதராபாத்! #KXIPvSRH

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமென, இன்னும் எதிரணிக்கு முட்டை மந்திரித்து வைக்காத குறைதான். கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் எல்லாம் குழப்ப குட்டைக்குள் முங்கு நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, நேற்று நடந்ததோ இன்னும் கொடுமை. அந்த ஒரே குழப்ப குட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் இரண்டு மட்டைகளும் மோத வேண்டிய கட்டாயம். ரொம்ப அநியாயம்!

துபாயில் நேற்று நடந்த 2020 ஐபிஎல்-ன் 43வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் வெறிகொண்டு மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஹைதராபாத் அணியில் நதீமுக்கு பதிலாக கலீல் அகமதும், பஞ்சாப் அணியில் மயாங்க் மற்றும் நீஷம்க்கு பதிலாக ஜோர்டன் மற்றும் மந்தீப் இடம்பிடித்தனர்.

#KXIPvSRH

ராகுலுக்கு பக்கபலமாகவும் பஞ்சாப் அணிக்கு பக்கா பலமாகவும் இருந்த மயாங்க், காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியதால், மந்தீப்புடன் இணைந்து இன்னிங்ஸைத் துவங்கினார் கே.எல்.ராகுல். முதல் ஓவரை வீசினார் சந்தீப் ஷர்மா. வெறும் 5 ரன்கள் மட்டுமே. கலீல் வீசிய 2-வது ஓவரில், ராகுலுக்கு ஒரே ஒரு பவுண்டரி மட்டும் கிடைத்தது. சந்தீப் வீசிய 3-வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதுமில்லை. கலீல் வீசிய 4வது ஓவரில், மிட் ஆனில் ஒரு பவுண்டரியை விளாசினார் ராகுல். தூக்கமருந்து கொடுத்ததுபோல டல்லாக சென்ற இன்னிங்ஸ், 5வது ஓவரில்தான் ஊக்கமருந்து கொடுத்ததுபோல எழுந்து நின்றது. சந்தீப் வீசிய முதல் பந்தை, மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு விளாசினார் ராகுல். மந்தீப் ஷர்மா, லாங் ஆனில் ஒரு பவுண்டரியைப் போட்டார். ட்விஸ்டாக, அதே ஓவரில் அவர் விக்கெட்டும் காலி. டீப் ஸ்கொயர் லெக்கில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

உள்ளே வந்தார் யுனிவர்சல் பாஸ். வார்னரும், ஹோல்டரை பந்து வீச அழைத்தார். மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி, ஷார்ட் தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரி என பயம் காட்டினார் கெயில். பவர்ப்ளேயின் முடிவில், 47/1 என ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தது பஞ்சாப். ரஷீத்கானையும் விட்டு வைக்கவில்லை இந்த கரீபியன் கட்டப்பா. அடுத்த ஓவரிலேயே, லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரை அணுப்பிவைத்தார். அவ்வளவுதான், அடுத்த 11 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரியைக் கூட அடிக்கவில்லை இந்த பஞ்சாப் பயபுள்ளைகள்.

#KXIPvSRH

ஹோல்டர் வீசிய 10வது ஓவரில், நேராக வார்னர் கையில் கேட்சைக் கொடுத்து வெளியேறினார் கெயில். அடுத்த ஓவரிலேயே, ராகுலை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் ரஷீத். 14-வது ஓவரில், மேக்ஸ்வெல்லும் காலி. தூங்கிக்கொண்டிருந்த அம்பயர், சந்தீப்பின் சத்தம் கேட்டு எழுந்தே, ஒற்றை கையைத் தூக்கினார். பவுண்டரி லைனில் புதிதாக புல், பூண்டுகள் முளைத்திருந்தன. 15-வது ஓவரில், ஹூடாவையும் ஸ்டெம்பிங் அடித்துவிட்டார்கள். 18-வது ஓவரில் ஜோர்டன் அவுட். 19-வது ஓவரில் முருகன் அஷ்வினும் அவுட். `ஒரு பவுண்டரியாவதும் அடிச்சு விடுங்கப்பா. அப்பதான் சாப்பிட்ட பட்டர் சிக்கன் செரிமானம் ஆகும்' என பஞ்சாப் ரசிகர்கள் பவுண்டரி வரம் கேட்டு நிற்க, ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் பூரன். பிறகு, நடராஜன் வீசிய கடைசி ஓவரில் இன்னொரு பவுண்டரி. அம்புட்டுதேன்! கடைசி 13 ஓவர்களுக்கு 2 பவுண்டரிகளை மட்டுமே வெற்றிகரமாக விளாசி, 126/7 என இன்னிங்ஸை முடித்தது பஞ்சாப்.

`127 ரன்லாம், வார்னர் - பேர்ஸ்டோவுக்கே பத்தாதேடா' என கெக்கிலி காட்டினார்கள் ஹைதராபாத் ரசிகர்கள். முதல் ஓவரை வீசவந்தார் முகமது ஷமி. 4-வது பந்திலேயே எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு சிக்ஸர். அம்மாஞ்சி குழந்தை அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரில், இன்னொரு சிக்ஸர். 3-வது ஓவரில், பேர்ஸ்டோவும் ரம்மியை இறக்கினார். லாங் லெக் திசையில் ஒரு பவுண்டரி. அடுத்த ஓவரிலேயே முருகன் அஷ்வின் பந்தில் இன்னொரு பவுண்டரியையும் விளாசினார். ஷமி வீசிய 5வது ஓவரில் வார்னர் 2 பவுண்டரிகளை விரட்ட, பதிலுக்கு முருகன் அஷ்வின் வீசிய 6-வது ஒவரில் பேர்ஸ்டோ 2 பவுண்டரிகளை விரட்ட, பவர்ப்ளேயின் முடிவில் 52/0 என வலுவான நிலையில் இருந்தது ஹைதராபாத் அணி.

#KXIPvSRH

அப்போதுதான் ரவி பிஷ்னோய் வந்தார். வார்னரின் விக்கெட்டைத் தூக்கினார். வார்னரின் க்ளவுஸை உரசிப்போன பந்து, ராகுலின் க்ளவுஸுக்குள் தஞ்சமடைந்தது. வார்னர் அவுட்டான சோகத்தில், அடுத்த ஓவரிலேயே பேர்ஸ்டோவும் அவுட்டாகி கிளம்பினார். பஞ்சாப் அணிக்காக ஃபீல்டிங் செய்த சமத், ஐதராபாத் அணிக்காக பேட்டிங் ஆடவந்தார். 9வது ஓவரில் சமத்தும் அவுட். சமத்தாக பந்து வீசியது உங்கள் ஷமி!

ஏற்கனவே, நைந்து போய் கிடக்கும் ஐதராபாத்தின் மிடில் ஆர்டர், அதன்பிறகு நொந்து நூலாகிப்போனது. விஜய் ஷங்கர் மட்டும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருந்தார். எவ்வளவு மொக்கையாக ஆடினாலும் பஞ்சாப்பை விட மொக்கையாக ஆடமுடியாது என்கிற காரணத்தினால் 15வது ஓவரின் முடிவில் 97/3 என நல்ல நிலையில்தான் இருந்தது ஐதராபாத். 30 பந்துகளுக்கு 30 ரன்கள் என அடிக்கக்கூடிய இலக்குதான். ஆனால், எந்த கரப்பான்பூச்சியின் கண்ணு பட்டதோ...

16வது ஓவரை வீசிய பிஷ்னோய், அருமையாக பந்துவீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 17வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே கொடுத்து மனீஷ் பாண்டேவின் விக்கெட்டையும் கழட்டினார் ஜோர்டன். விஜய் ஷங்கர் மட்டும் ஒண்டியாக போராடிக்கொண்டிருந்தார். 18வது ஓவரில், ஒரு சிங்கிளைத் தட்டிவிட்டு உசுரைக் கொடுத்து ஓடினார் ஷங்கர். பாயின்ட்டில் நின்றுக்கொண்டிருந்த பூரன், அவரை ரன்-அவுட்டாக்கும் முயற்சியில் பந்தை எடுத்து எறிய, அது ஷங்கரின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அதிர்ச்சியில் உருண்டு விழுந்தார் ஷங்கர். மெடிக்கல் டீம் விறுவிறுவென ஓடிவர, நல்லவேளையாக பெரிய அடி இல்லை. ஆனால், அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆனார். பாவத்த! இப்போது 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை.

#KXIPvSRH

19-வது ஓவரை வீசவந்தார் ஜோர்டன். 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஹோல்டர் மற்றும் ரஷீத் இருவரின் விக்கெட்டையும் கழட்டினார். 6 பந்துகளில் 14 ரன்கள் தேவை. 3 விக்கெட்கள் மட்டுமே கையில் உள்ளன. கடைசி ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். முதல் பந்தில் சிங்கிள். இரண்டாவது பந்தில் சந்தீப்பின் விக்கெட் காலி. மூன்றாவது பந்தில் கார்க் விக்கெட்டும் க்ளோஸ். மீதம் ஒரே ஒரு விக்கெட். 5வது பந்தில், கலீல் ரன் அவுட். ஹைதராபாத்துக்கு டாட்டா காட்டியது பஞ்சாப். பஞ்சாப்பை விடவும் மொக்கையாக ஆடமுடியும் என செய்துகாட்டியது ஹைதராபாத்.

"ரொம்ப வலிக்குது சார். எங்க டீம் ஆளுங்க பெளலிங் நல்லா போட்டாங்க. பேட்ஸ்மேன் நாங்கதான் அதை காப்பாத்திக்க தவறிட்டோம். அழ வைக்காதீங்க சார். இதை மறந்துட்டு, அடுத்த மேட்சை ஒழுங்கா ஆடணும்'' என அமைதியாக கிளம்பினார் வார்னர். "பேசிக்கலாவே நாங்க பஞ்சாப் டீம். இதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். எனக்கு பேச்சு மூச்சே வரலை. எல்லாம் எங்க டீமையே சாரும்" என சந்தோஷமாக கிளம்பினார் ராகுல். க்றிஸ் ஜோர்டனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kings-xi-punjab-vs-sunrisers-hyderabad-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக