Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ராக்கெட் ரபாடா... பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் ரபாடாவின் கதை தெரியுமா?! #KagisoRabada #IPL2020

வேகப்பந்து வீச்சில் தனக்கென புதிய வரையறைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் ராக்கெட் ரபாடா எனும் ககிசோ ரபாடா. 2020 ஐபிஎல்-ல் இதுவரையிலான 5 போட்டிகளிலும் விக்கெட் இல்லாமல் ரபாடா தன்னுடைய ஸ்பெல்லை முடிக்கவேயில்லை. நேற்று பெங்களூருவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த ரபாடாவுக்கு, துபாய் பிட்ச் அத்துப்படி. அங்கே எப்படி போட்டால், விக்கெட் விழும் என ரபாடாவுக்குத் தெரியும். ஆமாம், ரபாடாவின் துபாய் கனெக்‌ஷனுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் பிறந்தவர் ககிசோ ரபாடா. அப்பா டாக்டர், அம்மா வக்கீல். ரபாடா பிறக்கும்போது இவரின் அப்பா, அம்மா இருவருக்குமே வேலை இல்லை. அப்பா டாக்டராகவும், அம்மா வழக்குரைஞராகவும் படித்துக்கொண்டிருந்ததால் தாத்தா, பாட்டியின் வீட்டில் வளர்க்கப்பட்டிருக்கிறார். நிறத்தால் பாகுபாடுகள் காட்டப்படும் தென்னாப்பிரிக்காவில் பிறந்ததால் ''படிப்புதான் நம்மைப்போன்றவர்களை இந்த சமூகத்தில் உயர்த்தும்'' என படித்துமட்டுமே உயர்ந்த அப்பாவால் படிபடி என வளர்க்கப்பட்டிருக்கிறார் ரபாடா. ஆனால், மகனுக்கு முதலில் ரக்பி பிறகு கிரிக்கெட் என விளையாட்டில் ஆர்வம் வந்துவிட்டது.

ககிசோ ரபாடாவின் பெற்றோர்

ஒருமுறை ரபாடாவின் பள்ளியில் நடந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியைப் நேரில் பார்க்கப்போயிருக்கிறார் அவரது தந்தை எம்ஃபோ. அப்போது ரபாடாவுக்கு வயது 14. எதிரணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ரபாடாவின் டீம். விக்கெட் விழாமல் வெற்றி தாமதமாகிக்கொண்டேயிருக்க ரபாடாவின் கைகளில் பந்தைக்கொடுத்திருக்கிறார் ஸ்கூல் கேப்டன். வெறியோடு பந்துவீசிய ரபாடாவின் பெளலிங்கில் எதிரணி அவுட். கோப்யையை வெல்கிறது ரபாடா அணி. மகனின் வேகத்தை முதன்முதலாக நேரில் பார்த்து மிரண்ட தந்தை, "உனக்குள் ஒரு திறமையான ஃபாஸ்ட் பெளலர் இருக்கிறான்... அதனால் நீ இனி கிரிக்கெட்டிலேயே கவனம் செலுத்து. நான் அதற்கான உதவிகளை செய்கிறேன்" என அடுத்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ரபாடாவோடு பயிற்சி, போட்டிகள் என எல்லா இடங்களுக்கும் பயணப்பட்டு ரபாடாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கிறார். நான்கு ஆண்டு கடின உழைப்பு ரபாடாவை தென்னாப்பிரிக்காவின் ஜூனியர் உலகக்கோப்பை அணிக்குள் அழைத்துவந்தது.

இப்போது ஐபிஎல் நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளின் துபாய், ஷார்ஜா, அபுதாபி பிட்ச்களில் அதகளம் செய்துதான் முதன்முதலாக தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்தார் ரபாடா. 2014-ம் ஆண்டு அரபு நாடுகளில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையின் நாயகன் ரபாடாதான். தென்னாப்பிரிக்கா வென்றிருக்கும் ஒரே உலகக்கோப்பை இந்த ஜூனியர் உலகக்கோப்பை மட்டுமே. இந்தத் தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்ததோடு, இதே துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து அணியை இறுதிப்போட்டிக்குள்கொண்டுபோய் உலகக்கோப்பையை வெல்லவைத்தவர் ரபாடா. இப்போதும் டெல்லி கேபிடல்ஸுக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வாங்கித் தந்துவிடவேண்டும் என வெறியோடு ஓடிக்கொண்டிருக்கிறார்.

பெங்களூருவுக்கு எதிராக 4 விக்கெட்டுகள், சென்னைக்கு எதிராக 3 விக்கெட்டுகள், பஞ்சாப், ஹைதராபாத்துக்கு எதிராக தலா 2 விக்கெட்கள் என எக்கானமி ரேட் 5-ஐத் தாண்டாமல் பந்துவீசியிருக்கிறார் ரபாடா. கொல்கத்தாவுக்கு எதிராக மட்டுமே 1 விக்கெட்டை வீழ்த்தி 51 ரன்கள் கொடுத்தார். அதுவும் பெளலர்களுக்கு கொஞ்சமும் கைகொடுக்காத, சிறிய மைதானமான ஷார்ஜாவில்.

#KagisoRabada

பவர்ப்ளே ஓவர்களில் தன் பந்துகளால் வீரர்களைக் கட்டுக்குள் வைப்பதாகட்டும், இறுதி ஓவர்களில் அவர்களை ரன் குவிக்க விடாமல் திணறடிப்பதாகட்டும், செட் ஆன ஸ்டார் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுப்பதாகட்டும், சூப்பர் ஓவரில் சூரசம்ஹாரம் பண்ணுவதாகட்டும், எல்லா வகையிலும், தன்னுடைய பீரங்கித் தாக்குதலால் எதிரணியின் கூடாரத்தைத் தரைமட்டமாக்குகிறார் ரபாடா. புல்லட் வேகத்தில் பாயும் இவரது பந்துவீச்சு ரன்குவிப்பில் ஈடுபடும் எந்தக் கூட்டணியையும் உடைத்து விடுகிறது.

டெல்லி கேபிடல்ஸ், தாங்கள் விளையாடிய ஐந்து போட்டிகளில், நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று, முதல் இடத்தை, தக்கவைத்துக் கொண்டுள்ளனர். டெல்லி வெற்றி பெற்றுள்ள, நான்கு போட்டிகளையும் எடுத்துப் பார்த்தால், அவர்கள் முதலில் பேட்டிங் செய்து, அந்த ஸ்கோரை, வெற்றிகரமாக டிஃபெண்ட் செய்துள்ளனர். அதற்குக் காரணம், அவர்களது பெளலிங் யூனிட். அணியின் ஃபாஸ்ட் பெளலர்கள் முதல் ஸ்பின்னர்கள் வரை, அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர். அந்த பெளலிங் யூனிட்டிற்குத் தலைமை தாங்கி நிற்பவர் ரபாடா.

பஞ்சாப் உடனான முதல் போட்டியில், டேஞ்சர்மேன் மேக்ஸ்வெல் மற்றும் சர்ஃப்ராஸ் கானைத் தூக்கியவர், சூப்பர் ஓவரில், கேஎல் ராகுலுக்கு, ஷார்ட் பால் வீசியும் நிக்கோலஸ் பூரணுக்கு யார்க்கர் வீசியும், இருவரையும், அடுத்தடுத்தப் பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து சூப்பர் ஓவரின் 3 பந்துகளிலேயே பஞ்சாபின் கதையை முடித்தார்.

Kagiso Rabada

சிஎஸ்கே உடனான இரண்டாவது போட்டியில், நன்றாக செட் ஆகி ஆடிக்கொண்டிருந்த டுப்ளெஸ்ஸியை, வைட் ஆஃப் சைட் திசையில் ஷார்ட்க்குப் போகுமாறு செய்து, அவுட் ஆக்கியவர், இறுதி ஓவரில், தோனிக்கு ஸ்லோ ஷார்ட் பால் வீசியும், ஜடேஜாவுக்கு ஷார்ட் பால் வீசியும் அவுட் ஆக்கினார். ரபாடா வெறும் யார்க்கர்களை மட்டும் நம்பியிருக்கவில்லை; ஸ்லோ பால், ஷார்ட் ஸ்லோ பால், பேக் ஆஃப் லென்த் டெலிவரி, துல்லியமான பவுன்சர் என பல வெரைட்டிகளை வைத்து விக்கெட் வேட்டைகளை நடத்திக் கொண்டு வருகிறார்.

சன்ரைசர்ஸ் உடனான போட்டியில், நன்றாக செட் ஆகி ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ மற்றும் வில்லியம்சனுக்கு, ஸ்லோ பால்களை வீசி, சொல்லி வைத்துத் தூக்கினார். டெல்லி அணியும் ரபாடாவை அருமையாகக் கையாள்கிறது. பவர்ப்ளே ஓவரில், ஒரு ஓவர் மட்டும் கொடுத்து, கடைசி பத்து ஓவர்களில், மூன்று ஓவர்களைக் கொடுத்து, செட் ஆன பேட்ஸ்மேன்களையும், ஃபினிஷர்களையும், ரபாடாவை வைத்து ஃபினிஷ் செய்து கொண்டிருக்கிறது டெல்லி.

Also Read: சிஎஸ்கே கேதர் ஜாதவுக்கு மாற்றாக யாரை எடுக்கலாம்? #VikatanPoll

துபாய் மற்றும் அபுதாபியில் கலக்கிக் கொண்டிருக்கும் ரபாடா, ஷார்ஜாவில் மட்டும்தான் அடிவாங்கினார், அதுவும், இறுதி ஓவர்களில். அந்தப் போட்டியிலும் கொல்கத்தா அணியின் ட்ரம்ப் கார்டு ரசலை, ஷார்ட் பால் வீசி வீழ்த்தி வெற்றியை உறுதிசெய்து கொடுத்துவிட்டுத்தான் ஸ்பெல்லை முடித்தார்.

#KagisoRabada
நேற்று ஆர்சிபியுடன் நடைபெற்ற போட்டியில், செட் ஆகி ஆடிக்கொண்டிருந்த கோலியை, காலி செய்தவர், அதற்கு அடுத்த மூன்று பேட்ஸ்மேன்களையும், கண்ணிமைக்கும் நேரத்தில் காலி செய்து, டெல்லிக்கு மற்றுமொரு எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிட்டார்.

ஐந்து போட்டிகளில் ஆடி, 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்ப்பிள் கேப்பை, தொடர்ந்து கைப்பற்றி வரும் ரபாடாவின் ஆவரேஜ், வெறும் 12.50. அவரது எகானமி 7.50. ஐந்து போட்டிகளில் ஆடியிருக்கும் ரபாடா அதில் நான்கு போட்டிகளில், 30 ரன்களுக்குக் கீழே கொடுத்து, எதிரணிக்கு, சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். டெல்லி அணிக்கு, துருப்புச் சீட்டாக மாறியிருக்கும் ரபாடாவின் ஃபார்ம், தொடரும் பட்சத்தில், இந்த வருடம், தனது முதல் ஐபிஎல் கோப்பையை டெல்லி கேபிடல்ஸ் அணி கைப்பற்றும்.

கமான் ரபாடா!



source https://sports.vikatan.com/ipl/the-successful-life-journey-of-delhi-capitals-bowler-kagiso-rabada

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக