"2010 ஐபிஎல்-ல பாத்தேன்னு வையி. மொத 7 மேட்சுல 2 மேட்ச்தான் சென்னை ஜெயிச்சது. அப்பால, அடிச்சு நொறுக்கி பைனல்ஸ நெருங்கி கப்பைத் தூக்கி மாஸ் காட்டுச்சு. ஆங்" என யாரோ எங்கிட்டோ ஒரு புள்ளி விவரத்தை கொளுத்திபோட, 'அப்போ இந்த மேட்சும் ஜெயிக்க மாட்டீங்க. அப்படித்தான' என வெறுப்பாகினர் சென்னை ரசிகர்கள்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல்லின் 14வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணிகளும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முரளி விஜய், ருதுராஜ், ஹேசல்வுட் ஆகியோருக்குப் பதிலாக, பிராவோ, ராயுடு மற்றும் தாக்கூர் அணியில் இணைய, ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் சென்னை ரசிகர்கள். 'எண்டு கார்டு போட்டு எகத்தாளமடா பண்றீங்க. போறதுக்கு முன்னாடி ஒரு குட்டி கதை சொல்லிட்டு போறேன்' என இளவு காத்த கிளியின் கதையைத் துவங்க, 'நீங்க குட்டி ஸ்டோரி சொல்லிட்டு இருங்க விஜய். நாங்க குட்டியா ஒரு மேட்ச் ஆடிட்டு வர்றோம்' என கிளம்பியது சிஎஸ்கே. 'எய்யா அண்ணாமல, ஒரு காலத்துல எப்படி இருந்த நீயி!' என ரசிகர்கள்தாம் கொஞ்சம் கண்ணீர் வடித்தனர். "என்னுடைய அதிக போட்டிகள் விளையாடியவர் என்கிற ரெக்கார்டை முந்தியதற்கு வாழ்த்துகள்" என ரெய்னாவின் அன்பு வாழ்த்துகளுடன் களமிறங்கினார் தோனி. ரெய்னாவின் ட்வீட், விஜய்யின் தியாகம், பிராவோவின் வரவு என பாசிட்டிவிட்டி பொங்கலோ பொங்கல் எனப் பொங்க, மஞ்ச சொக்காயோடு களமிறங்கியது சிஎஸ்கே. எந்த மாற்றமும் இன்றி தயாரானது சன்ரைசர்ஸ்.
ஆம், தோனி ஐபிஎல்லில் நேற்று விளையாடியது அவருடைய 194வது போட்டி. ரெய்னாவின் ஐபிஎல் வருகை சந்தேகம் என்னும் நிலையில், அடுத்ததாக 192 போட்டிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் ரோஹித். அவர் முதலிடம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஐதராபாத் அணியின் 'வானவராயன் - வல்லவராயன் இணை', வார்னரும் பேர்ஸ்டோவும் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் தீபம் விளக்கேற்றும் சாஹர். 4வது பந்திலேயே ஸ்டெம்ப் கிழிந்தது. என்ன நடக்கிறதென தெரியாமல் ஹெல்மெட்டை சொரிந்துகொண்டே நடந்தார் பேர்ஸ்டோ. சென்னை சூப்பர் ஸ்டார்ட்!
அடுத்து வந்த மனீஷ் பாண்டே ஒரு பவுண்டரியை விரட்ட, முதல் ஓவரில் 6 ரன்கள். 2வது ஓவர் வீசவந்தார் சாம் கரண். அதிலும் மிட் - ஆஃப் பக்கம் ஒரு பவுண்டரியைத் தூக்கினார் பாண்டே. சாஹர் வீசிய 3வது ஓவரிலும் அதே டெய்லர் பாண்டே, அதே வாடகை பவுண்டரி. மீண்டும் கரண், சாஹர் வீசிய அடுத்தடுத்த ஓவர்களிலும் இதே கதைதான். ஓவருக்கு ஒரு பவுண்டரி என ஸ்ட்ரிக்டாக விளையாடினார் பாண்டே. தாக்கூர் வீசிய 6வது ஓவரில் மட்டும் வாடகையை வார்னர் கொடுத்தார். பவர் பிளேயின் முடிவில் 42/1 என்ற நிலையில் சன்ரைசர்ஸ்.
ரன்கள் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த மனிஷ் பாண்டே, சுலபமாக சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டூ டவுனில் வில்லியம்சன். மிடில் ஆர்டர் வீக் என்பதால் இந்தப் போட்டியில் கடைசி வரை நிலைத்து ஆட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் கேப்டன் வார்னர். முதல் பவுண்டரியே ஆறாவது ஓவரில்தான் அடித்தார். சிஎஸ்கேவுக்கு எதிராக அரைசதங்கள் விளாசியிருக்கும் வார்னர், இப்படி ஒரு பவுண்டரிக்கு இவ்வளவு பந்துகள் எடுத்துக்கொண்டே போதே மிடில் ஆர்டர் மீதான பயம் அப்பட்டமாய் தெரிந்தது. கடந்த போட்டியில் எளிதாக விக்கெட்டை இழந்த விஜய் ஷங்கர் இப்போட்டியில் டிராப்டு என்றாலும், மிடில் ஆர்டரில் ஹிட்டர் என்றெல்லாம் யாருமே இல்லை. முந்தைய போட்டியில் மும்பைக்கு ஹர்திக் பாண்டியாவும், பொலார்டும் ஆடியது போல் ஒரு இன்னிங்ஸ் எல்லாம், சன்ரைஸர்ஸ் என்றுமே நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால், நேற்று அதை மெய்ப்பித்துக் காட்டினர் சன் ரைசர்ஸின் ஜூனியர்ஸ்.
ஒரு வழியாக சாவ்லாவின் பந்துவீச்சை குறிவைத்து இரண்டு பவுண்டரிகள் எடுத்து, தன் ஸ்டிரைக் ரேட்டை நூறுக்குக்கு கொண்டு வந்தார் வார்னர். அடுத்த பந்தையும் சிக்ஸுக்கு, அனுப்ப, சர்ப்ரைஸ் கேட்ச் பிடித்து லாங் ஆனில் கதையை முடித்தார் டூ பிளெஸ்ஸி. இப்படி சிக்ஸ் லைனுக்கு உள்ளே சென்று மீண்டும் வெளியே வந்து அவர் பிடிப்பது முதல்முறை இல்லையென்றாலும், ஒவ்வொருமுறையும் ஃபீல்டிங்கில் ஆச்சர்யப்படுத்துகிறார் டூ பிளெஸ்ஸி.
வில்லியம்சனை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல். உலகக்கோப்பை தோல்வியில்கூட கோபம் கொள்ளாத சாந்த சொரூபி வில்லியம்சன் நேற்று கோபப்பட்டார். ராயுடு நின்ற இடத்தில் சிங்கிளுக்கு வழியே இல்லை என்னும் போதும், சிங்கிளுக்கு ஓட ஆரம்பித்தார் வில்லி. பிரியம் கார்க்கின் சைகையாலேயே அவ்வாறு அவர் ஓடியிருப்பார் என்றாலும், சட்டென NO சொல்லிவிட்டார் கார்க். சீனியர் வீரர் மிடில் ஆஃப் தி கிரவுண்டில் இருக்கும் போது, ஜூனியர்கள் தங்களின் விக்கெட்டை தாமாக முன்வந்து இப்படியான சூழலில் காவு கொடுப்பதுதான் கிரிக்கெட்டின் ஆதி கால வழக்கம். ஆனால், இந்தியாவின் அண்டர் 19 கேப்டனான கார்க் நகரவில்லை. வில்லியம்சன் கடுப்பில் வெளியேறினார். கார்க்கின் செயலுக்குக் காரணமும் இல்லாமல் இல்லை. வில்லிம்சனின் பேட்டிங் எண்டில் நிற்பது வேறு கீப்பர் அல்ல, சாணக்கியன் தோனி. வில்லியம்சன் இந்தப் பக்கம் வராமல், அந்த பக்கம் நகர்கிறார் என்றால், சிரித்துக்கொண்டே ஸ்டம்பிங் செய்யாமல், அந்தப் பக்கம் பந்தை வீசிவிடுவார் தோனி. எத்தனை போட்டிகளில் இதை கார்க் பார்த்திருப்பார். அதுகூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
என்ன இருந்து என்ன 11 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஐதராபாத். சிங்கத்தின் வாய்க்குள் முழுமையாகத் தன் தலையை ஐதராபாத் அப்போது உள்ளே கொடுத்திருந்தது. மிடில் ஆர்டர் லட்சணம் தெரியும் என்பதால், லட்சுமணன், முரளி என டக் அவுட்டில் இருந்த எந்த சன் ரைசர்ஸ் கோச்சுகளுக்கும் நம்பிக்கை இல்லை. சம்பிரதாயமாக நடராஜா சர்வீஸ் எடுப்பார்கள் என்கிற நிலையில் உள்ளே வந்தார் பஞ்சாப் மாநில வீரரான அபிஷேக் ஷர்மா. கார்க் சிங்கிள் ரொட்டேட் செய்ய, அபிஷேக் அடித்து ஆட ஆரம்பித்தார். சாவ்லாவின் ஓவரில் பவுண்டரி போனபோது அதிர்ஷ்டம் என நினைத்த ரசிகர்கள், ஜடேஜா ஓவரில் ஷர்மா பவுண்டரி, சிக்ஸ் என அடுத்தடுத்து அடிக்க லைட்டாய் ஜெர்க் ஆகினர். கமெண்ட்டரியில் இருந்த பாலாஜிகூட அபிஷேக் நாயர் என்றுதான் முதலில் சொன்னார். அந்த அளவுக்கு அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க் பெயர்களை ஆடும் லெவனில் பார்த்ததில்லை. அபிஷேக் ஷர்மாவுக்கு பத்தாவது இன்னிங்ஸ் என்றால், பிரியம் கார்க்குக்கோ இது இரண்டாவது இன்னிங்ஸ். அபிஷேக் 20 வயது, கார்க் இன்னும் டீன் கிட்,19 வயதுதான். 'என்னடா இன்னும் நிக்குது' என வாய் பிழந்து பார்த்துக்கொண்டிருக்க 17வது ஓவரை வீச வந்தார் சென்னையின் சுட்டிப்பையன் சாம் கர்ரன். மூன்று பவுண்டரி , ஒரு சிக்ஸ் என அந்த ஓவரில் ருத்ர தாண்டவமாடினார் கார்க். 22 ரன்கள் போன போதுதான், யார்றா இவன் என அப்போதுதான் கூகுள் செய்ய ஆரம்பித்தனர் நெட்டிசன்ஸ்.
அபிஷேக்கை அடுத்த ஓவரில் தோனி கேட்ச் பிடித்து அனுப்பி வைத்தாலும், சன் ரைசர்ஸ் அப்போதே டீசண்டான ஸ்கோரை எட்டியிருந்தனர், இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ். சன்னின் பலமே பவுலிங்கும், ஃபீல்டிங்கும்தான்.
வாட்டோவும், டூ பிளெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்க, புவியின் முதல் ஓவரில் வெறும் ஒரு ரன். கலீல் அஹமதின் ஓவரில் 3 ரன். அடுத்த புவியின் ஓவரில் முதல் சூப்பர் சீனியரான வாட்டோ இன்சட் எட்ஜில் அவுட். தாயம் என எண்ண ஆரம்பித்தனர் சென்னை ரசிகர்கள். பவர்பிளேயின் கடைசி ஓவரில் விக்கெட் விழாமல் இருந்து இருக்கலாம். நடராஜ் வீசிய பந்தைத் தவறாக கணித்த ராயுடு போல்டானார். 2018ம் ஆண்டில் இருந்து ஒருமுறை மட்டுமே 30 ரன்களைக் கடந்து அடித்திருக்கும் கேதார் ஜாதவ் என்னும் சென்னையின் 'ஏன் இருக்கார்னு அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது' வீரர் உள்ளே வந்தார். கீப்பர் பேர்ஸ்டோவும் கையிலிருந்தப் பந்தை அவரை நழுவ விட, அவரும் பந்தும் ஒரே நேரத்தில் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதெப்படி அவுட்டாகும், என விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க, மூன்றாவது அம்பயர் ரொம்ப நேரம் யோசித்து, கோழி முதலிலா முட்டை முதலிலா என்னும் சிறுகதையை படித்துவிட்டு, யார் முதல்ல வந்தா என்ன ஸ்டம்ப்ப பால் தொட்டுச்சு, அவுட் என அறிவித்தார். பவ்ர்பிளே இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எனப் பரிதாபமாக நின்றது சென்னை.
தோனி உள்ளே வந்தார். அடுத்து எல்லாம் சரவெடிதான் என கெத்தாக நிற்க, வழக்கம் போல, சோல்ஜர்ஸ் ரொட்டேட் தி சிங்கிள்ஸ் என தோனியும் ஜாதவும் ஆயுத்தமாயினர். அய்யா, ரஷீத் ஓவர் வேற இருக்கே, இவிங்க அபிஷேக் ஷர்மா ஓவர்லயே அடிக்க மாட்டேங்குறாங்களே என புலம்பினர் சென்னை ரசிகர்கள். ரஷீத்தின் முதல் ஓவர் வெறும் 1 ரன். பந்து பந்துகள் சாப்பிட்டு, 3 ரன்கள் எடுத்திருந்த ஜாதவ், அடுத்த வந்த சமத்தின் பந்தில், வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரஷீதின் அடுத்த ஓவரிலும் ஒரு ரன். தேவைப்படும் ரன் ரேட் 12-ஐ தாண்டியிருந்தது. ரஷீத் மூன்றாவது ஓவரில் 3 ரன். தேவைப்படும் ரன் ரேட் 13-ஐ தாண்டி இருந்தது. கன்னத்துல கை வைக்குற நேரத்துக்குக் கின்னத்துல கை வச்சிருந்தா, டின்னராவது சாப்பிட்டிருக்கலாம். இப்ப டின்னரும் போச்சு என்கிற நிலையில்தான் சென்னை பேட்டிங் இருந்தது.
கடைசி நான்கு ஓவர்களில் 78 ரன்கள் தேவை. கிட்டத்தட்ட ஓவருக்கு 20 ரன்கள். ஜட்டூ ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, எந்திர்றா எந்திர்றா என உற்சாகமாகினர் சென்னையன்ஸ். அடுத்த நடராஜ் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து தன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார் ஜட்டூ. இந்த சீசனிலா என்று கேட்காதீர்கள். ஐபிஎல் வரலாற்றில்! ஆம், 174 போட்டிகளில் விளையாடி, 130க்கு மேல் இன்னிங்ஸ் ஆடிய ஜட்டூ எடுக்கும் முதல் அரைசதம் இதுதான். சாம் கர்ரன் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸ் அடித்தார். இந்த ஓவர் 19 அடிச்சாச்சு. ஆனா அடுத்தடுத்த ஒவர் என்ன பண்றது என்கிற சிந்தையில் இருந்தது சென்னை.
19வது ஓவரை வீசிய புவிக்கு காலில் காயம் ஏற்பட மீதி ஓவரை போட பந்தார் கலீல் அஹமது. அந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து, 16 ரன்கள் சேகரித்தார் தோனி. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை. யார் பந்துவீசினாலும், தோனி அடிப்பார் எனத் தெரியும். சாம் கரனும் கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விளாசுவார்.
யோசித்து காஷ்மீரி சிறுவனான அப்துல் சமத்தை வீச வைத்தார் வார்னர். வலது கை ஸ்பின்னர் எப்படியும் ஐந்து சிக்ஸ் என யோசித்துக்கொண்டிருக்கும் சூழலில், முதல் பந்தை வொய்டாக போட்டு, அது பவுன்டரிக்கும் போனது. தற்போது ஆறு பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே தேவை. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி சிங்கிள் அடித்த போது, இந்த நாள் அவருடையது இல்லை என ஊகித்திருப்பார்கள் சென்னை ரசிகர்கள். அவ்வளவு சோர்ந்து காணப்பட்டார் தோனி. கடைசி மூன்று பந்தில் 16 ரன்கள் தேவைப்பட, சாம் கர்ரனால், கடைசி பந்தில் மட்டுமே சிக்ஸ் அடிக்க முடிந்தது. ஜாதவ் சாப்பிட்ட வெட்டி பந்துகளை கொடுத்திருந்தாலாவது சாம் ஏதேனும் முயன்றிருப்பார். இறுதியாக ஏழு ரன் வித்தியாசத்தில் தோற்றது சென்னை. ஆட்டநாயகாக அரைசதம் அடித்த கார்க் தேர்வானார்.
Also Read: பால்காரர் மகன், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்... சிஎஸ்கேவை சுழற்றிய பிரியம் கார்கின் பின்னணி! #PriyamGarg
"ரிலாக்ஸாக, மீண்டும் மீண்டும் செய்த தவறுகளையே செய்கிறோம். கேட்ச் விடக்கூடாது, நோ பால் போடக்கூடாது. இவையெல்லாம் நாங்கள் தடுக்க முடிந்தவை" எனப் போட்டியின் முடிவில் தோல்விக்கான காரணமாகச் சொன்னார் தோனி. ஆனால், தோனி ரன்னிங் பிட்வின் தி விக்கெட்ஸிலேயே சிரமப்பட்டார். 19வது ஓவரிலும், 20வது ஓவரிலும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. "இங்கு மிகவும் வறண்டு இருப்பதால், தொண்டையும் வறண்டு, இருமல் வந்துவிடுகிறது. ஏதேனும் சிம்டம்ஸ் இருந்தால் ஓய்வு எடுக்கலாம். மற்றபடி நான் நலமாகவே இருக்கிறேன்" என்றார்.
சென்னை அணி மீண்டும் தன் பழைய ஃபார்மில் வெற்றிகளைக் குவிக்க என்ன செய்ய வேண்டும்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
source https://sports.vikatan.com/ipl/different-eleven-same-mistakes-dhoni-csks-ipl-campaign-slides-off
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக