Ad

சனி, 3 அக்டோபர், 2020

நால்வருக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினர் நடத்திய பஞ்சாயத்து... ஹத்ராஸில் என்ன நடக்கிறது?

`ஹத்ராஸ்’... கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தனக்கு நேர்ந்த கொடூரத்தில் இருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பெண், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தனக்குக் கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தன் நாக்கை கடித்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

உடலில் பலத்த காயங்களுடன் முதுகுத் தண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் 15 நாள்கள் தொடர் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்த பிறகுதான் அவருக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இதே போன்று பெண்களுக்கு எதிரான தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.

இதற்கிடையில் இந்த வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளும், காவல்துறையினரும் செயல்படுவதாகவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இறந்த பெண்ணின் உடல், புதன் கிழமை அதிகாலையிலேயே அவரின் குடும்பத்தினரின் அனுமதியின்றி அவசர அவசரமாக போலீஸாரால் தகனம் செய்யப்பட்டுள்ளது. ``என் சகோதரியைக் காப்பாற்ற முடியவில்லை, அவர் சிதைக்கப்பட்டு இறந்துவிட்டதால், குறைந்தபட்சம் அவருக்குப் புது ஆடைகள் அணிவித்து எங்கள் முறைப்படி இறுதி காரியங்கள் செய்யலாம் என நினைத்தோம். ஆனால் இறுதியாக அவரின் முகத்தைக் கூட பார்க்கவிடவில்லை. அவருக்கு முறையான காரியங்கள் செய்தார்களா என்பதுகூட தெரியவில்லை” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமை சம்பவம் மற்றும் போலீஸாரின் செயல் ஆகியவற்றைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்த உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி விக்ராந்த் மற்றும் நான்கு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Also Read: `விஸ்வரூபமெடுத்த ஹத்ராஸ் சர்ச்சை!'- 2 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மாவட்ட எல்லை

ஹத்ராஸில் பெரும் பதற்றம் நிலவுவதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. இதனை மீறி கடந்த புதன்கிழமை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரின் சகோதரியும் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகிய இருவரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றுள்ளனர். ஆனால் ஹத்ராஸில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கிரேட்டர் நொய்டாவிலேயே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி முன்னோக்கிச் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ராகுலும் பிரியங்காவும் காரை விட்டு இறங்கி நடந்து சென்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டுள்ளார். பின்னர் தடையை மீறி ஆதரவாளர்களுடன் சென்றதால் ராகுல், பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராகுல் காந்தி

Also Read: ஹத்ராஸ்: பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா... தடுத்து நிறுத்தப்பட்டு கைது!

இந்நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வசிக்கும் மொத்த கிராமத்துக்கும் காவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் தொலைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும் சில பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்களை உத்தரப்பிரதேச மாநில அரசும், பாஜகவின் ஐ.டி விங்கும் ஒட்டுக்கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனிடையில் நிர்பயா வழக்கில் ஆஜரான வழக்கறிஞரான சீமா குஷ்வாஹாதான் ஹத்ராஸ் வழக்கையும் கையில் எடுத்துள்ளார். ``ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்னை நேரில் அழைத்துள்ளனர். நான் அவர்களின் சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க போலீஸார் எனக்கு அனுமதி மறுத்துள்ளனர்” என்று சீமா கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைப்புகள் ஹத்ராஸை நோக்கிப் படையெடுப்பதால் அந்த மாவட்டமே பரபரப்புடன் காணப்படுகிறது. இரண்டாவது முறையாக இன்றும், ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்த நாடும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் இதே நேரத்தில், ஹத்ராஸில் உள்ள பக்னா என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான தாகூர் மக்கள் இணைந்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் குழு, எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நான்கு பேரின் மீதும் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் தங்கள் பிள்ளைகள் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கலாம், ஆனால் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைத் தண்டிக்கக் கூடாது என தர்ணாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பக்னா கிராமத்தில் நடந்த பஞ்சாயத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்துக்காக இந்த வழக்கைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயையும் சகோதரரையும் விசாரித்தால் உண்மை வெளியில் வரும். இதில் காவல்துறை சரியான விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசியல்வாதிகள் இதை தலைகீழாக மாற்றுகின்றனர். இந்த வன்கொடுமை விவகாரம் மற்றும் எங்கள் பிள்ளைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்” எனப் பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டாரைச் சந்திக்க யாரையும் அனுமதிக்காத போலீஸ், பக்னா கிராமத்தில் பஞ்சாயத்து மற்றும் தர்ணா நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

போராட்டம்

Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `செய்தியாளரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதா?' - ஆடியோவால் புதிய சர்ச்சை

ஹத்ராஸ் பகுதியைச் சுற்றியிருக்கும் பல்வேறு கிராமங்களில் சாதிய பிரச்னை தலைதூக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் பூல்கரி கிராமத்தில் தாகூர் என்ற ஆதிக்க சாதியினர்தான் அதிகம் பேர் வசிப்பதாகவும், அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கடுமையாக நடத்துவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண் வால்மீகி என்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் நான்கு வால்மீகி குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.

மக்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி நிறைய வயல்வெளிகள் இருந்துள்ளன. வயல்களும் வீடுகளும் ஒரு கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன. வயல் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது ஊரில் இருப்பவர்களுக்குத் தெரிய நிச்சயம் வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் பெண்கள் யாரும் அதிகமாக வயல் பகுதிக்குச் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் தன் தாய் மற்றும் சகோதரருடன் வயல்வெளிக்குச் சென்ற இளம் பெண்ணுக்குக் கொடூரம் நிகழ்ந்துள்ளது என அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆதங்கத்துடன் ஆங்கில ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் நிறைய சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நீடிக்கின்றன. இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.



source https://www.vikatan.com/news/india/how-the-caste-plays-the-role-in-hathras-rape-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக