Ad

சனி, 3 அக்டோபர், 2020

`ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு நீதி வேண்டும்!'- கட்டுப்பாடுகளை மீறி டெல்லியில் வெடித்த பெரும் போராட்டம்

உத்தரப்பிரதேசத்தின் ஹத்தராஸில் 19 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலைக்கு நீதிகேட்டு டெல்லியின் ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். `நாட்டின் சௌகிதார் எங்கே?', 'குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்' என்ற கோஷங்களுடன் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டம் வலுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் சண்ட்பாவை கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் நான்கு பேர் அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்றனர். அருகிலிருந்த வீட்டில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கடுமையாகத் தாக்கவும் செய்தனர். இதனால், மயக்கமடைந்த அந்தப் பெண்ணை சாலை ஓரம் போட்டுவிட்டுச் சென்றனர்.

டெல்லி போராட்டம்

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளம்பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த பெண்ணின் சடலத்தை இரவோடு இரவாக ஹத்ராஸ் கொண்டு வந்த போலீஸார், பெற்றோர்கள் அனுமதியின்றி அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே தகனம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்களும், பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் அந்த பெண்ணின் கொலைக்கு நீதிகேட்டு குரல்களும், போராட்டங்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் தலைவர்கள் தொடங்கி பாலிவுட் நடிகர்கள் வரை தங்கள் ஆதரவுக் கருத்துக்களை பதிவு செய்தனர்.

அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் விரைந்தனர். அப்போது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ராகுல் காந்தி போலீஸாரால் கீழே தள்ளிவிடப்பட்டார். அதன்பின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்று சில மணி நேரத்துக்குப் பின் விடுவி்த்தனர் காவல்துறையினர்.

Also Read: `விஸ்வரூபமெடுத்த ஹத்ராஸ் சர்ச்சை!'- 2 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மாவட்ட எல்லை

அதைத்தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரீக் ஓ பிரையன் தலைமையில் காகோலி கோஷ் தஸ்திதார், முன்னாள் எம்.பி. பிரதிமா மண்டல் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்றனர். அவர்கள் கிராமத்திற்கு 1.5 கிலோமீட்டர் முன்பே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 பேருக்கு மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கி இருந்த நிலையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முகமூடி அணிந்திருந்த மக்கள், அந்தப் பெண்ணுக்கு நீதி கோரி மெழுகுவர்த்திகளையும், `நாங்கள் முகமூடிகளை அணிந்து கொரோனாவின்போது வெளியே வரலாம். ஆனால், எங்கள் மகள்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பது கொரோனாவை விட ஆபத்தானது" என்ற பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஜந்தர் மந்தரில், காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஜந்தர் மந்தரின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இரவு 7.15 மணியளவில், இந்தியா கேட்டை நோக்கி அணிவகுத்துச் செல்ல இலக்கு வைத்திருந்த போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஜந்தர் மந்தர் போராட்டம்

போராட்டக் களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ``உத்தரப்பிரதேச மாநில அரசு, இனியும் அதிகாரத்தில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. எங்களுக்குத் தேவை நீதிதான். ஹத்ராஸ் விவகாரத்தில் மத்திய அரசும், பா.ஜ.க தலைமையும் வாய்மூடி மவுனியாக இருப்பது அவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது'' என்று விமர்சித்தார்.

பின்னர் அங்கு வந்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ``ஹத்ராஸில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் தப்பவிடக் கூடாது. நாட்டில் இனி யாரும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட அஞ்சும் அளவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்று ஆவேசமாக பேசினார். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

''`கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விளக்கை ஏற்றி, கைதட்டச் சொல்லி, நாட்டின் சௌகிதார் நான்' என்று சொன்ன பிரதமர் மோடி எங்கே போனார்? இந்த விவகாரம் குறித்து பேசாமல் அவர் மவுனம் காப்பது ஏன்?'' என்ற முழக்கங்களும் போராட்டக் களத்தில் எழுப்பப்பட்டன.

ஜந்தர் மந்தர் போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் பெரிய கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இந்த ஆறு மாதங்களில் நடக்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுதான் என்கிறார்கள். 2012-ல் மருத்துவ மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.



source https://www.vikatan.com/social-affairs/protest/protest-erupts-in-delhi-over-hatharas-incident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக