Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி குளறுபடிகள்... தீர்வு என்ன?

சொத்து வரி விதிமுறைகளின்படி, ஒவ்வோர் ஐந்து ஆண்டும் சொத்துவரி மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மாற்றி அமைக்கப்படவே இல்லை.

``சொத்து வரி உயர்ந்ததால், சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,840 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு விரைந்து சென்னை மாநகராட்சியின் சொத்துவரி சீராய்வு குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court

இதன் அடிப்படையில் 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட அடுத்த ஆண்டே, உயர்த்தப்பட்ட வரி நிறுத்தப்பட்டு மீண்டும் பழைய வரி வசூலித்தது தமிழக அரசு.

மாற்றியமைக்கப்பட்ட சொத்து வரி:

தமிழகத்தில் கடந்த 1998-ம் ஆண்டுக்குப்பிறகு சென்னை மாநகராட்சியிலும், 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.

உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பின்னர் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்திலுள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்டச் சொத்துவரி குறித்த அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

tax

அதன்படி, வாடகை அல்லாத சொந்தக் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவிகிதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதத்துக்கு மிகாமலும், பிற வகை கட்டடங்களுக்கு 100 சதவிகிதத்துக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்புக் கட்டடங்கள் அனைத்துக்குமே சொத்து வரி 50% மிகாமல் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சொத்து வரி அதிகமாக விதிக்கப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

இதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரி மறுபரிசீலனை செய்ய அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்பு செலுத்திய வரியைச் செலுத்தினால் போதும் என்று அரசு சார்பில் கூறப்பட்டது. அதோடு, அதிக தொகை கட்டியிருந்தாலும் அந்தத் தொகை அடுத்த அரையாண்டு வரித்தொகையில் வரவு வைக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட சொத்துவரி நிறுத்தப்பட்டு. மீண்டும் பழைய சொத்துவரி வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு, உள்ளாட்சித் தேர்தல் வந்தது ஒரு முக்கிய காரணம்.

மீண்டும் நீதிமன்ற தலையீடு:

இந்நிலையில் 2018-ம் ஆண்டு உத்தரவின்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்திவைத்து ஏன் என்று உயர்நீதிமன்றம் அரசுக்குக் கேள்வியெழுப்பியது. ``20 ஆண்டுகளில் நான்கு முறை சொத்து வரியை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், இப்படி வரியை உயர்த்தாது அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது" என்று அரசுக்குக் கண்டனமும் தெரிவித்தது.

Chennai High Court

அப்போது, ``சொத்து வரி சீராய்வு செய்வதற்காகத் தமிழக அரசு, அரசு அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கியது. அந்தக் குழு ஆலோசனை செய்து, சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்" என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ``அதுவரை தமிழகத்தில் 2018-ம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையிலிருந்த வரி கட்டணம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சொத்து வரி உயர்த்தியதற்குப் பிறகு கட்டணம் கட்டியவர்களின் தொகை அடுத்த அரையாண்டில் வரவு வைக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொத்து வரியில் ஊக்கத்தொகை மற்றும் தண்டத்தொகை:

இன்னொருபுறம், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ல் தமிழக அரசு சமீபத்தில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. அதில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தும் சொத்தின் உரிமையாளர், முதலாம் அரையாண்டு ஏப்ரல் மாதமும், இரண்டாம் அரையாண்டு அக்டோபர் மாதமும் முதல் 15 தேதிகளுக்குள் வரியைச் செலுத்தவேண்டும். அப்படிச் சரியாகச் செலுத்தும் உரிமையாளருக்கு, அவர்கள் செலுத்தும் நிகர சொத்து வரியில் 5% அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அப்படிச் செலுத்தத் தவறியவர்களுக்குச் செலுத்தவேண்டிய தொகைக்கு ஆண்டுக்கு 2% தண்டத் தொகையுடன் சேர்த்துச் செலுத்த நேரிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி

சொத்து வரி குறைத்து மதிப்பீடு:

சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில், மாநகராட்சிக்கு உட்பட்ட 1.5 லட்சம் கட்டடங்களின் சொத்து வரி கணக்கீடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. சென்னை மாநகராட்சியின் சொத்துகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு புவிசார் தகவல் தொழில்நுட்ப வரைபடம் தயாரிக்க மாநகராட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை அடுத்து வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம்தான் சென்னை மாநகராட்சியில் உள்ள 1.5 லட்சம் கட்டடங்களின் சொத்துவரி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மறு ஆய்வு செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். கொரோனா காரணமாகத் தாமதமான ஆய்வுப் பணி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் சென்னை மாநகரம் முழுவதும் மறு ஆய்வு செய்து வரி நிர்ணயிக்கப்படும்.

இனி காலி மனைக்கும் சொத்துவரி:

பல காலி மனைகளின் உரிமையாளர்கள் விவரம் தெரியாததால் கட்டடம் கட்ட ஒப்புதல் பெற வரும்போது நிலுவைத் தொகை அனைத்தும் அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வருடந்தோறும் வரி வசூல் செய்ய இருப்பதால். சென்னையில் உள்ள காலி மனைகளின் விவரங்களைக் கண்டறியும் பணியை மேற்கொண்டுவருகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

வீடு (மாதிரி படம்)

தற்போதைய நிலையில் சென்னையில் 20,000-க்கும் அதிகமான காலி மனைகள் உள்ளன. ஆனால், மாநகராட்சி தரப்பிடம் கிட்டத்தட்ட 17,000-ம் காலி மனைகளின் ஆவணங்கள் மட்டுமே இருக்கிறது. மீதமிருக்கும் இடங்களின் விவரங்களைக் கண்டறியும் பணியில் இருக்கிறார்கள்.

சென்னையில் சொத்து வரி குறித்துத் தொடர் குழப்பம் நீடிப்பதால், என்ன நடக்கிறது என்பதை அறிய, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கடந்த 2018-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சொத்து வரியில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நீடித்தது. உதாரணத்துக்கு, அடையாற்றில் உள்ள ஒரு வீட்டின் சொத்து வரி 2,500 ரூபாயாக இருக்கும். அம்பத்தூரில் இருக்கும் அதே அளவுள்ள வீட்டின் சொத்துவரி 10,000 ரூபாயாக இருக்கும். சென்னையில் உள்ள 39,000 தெருக்களுக்கு ஒவ்வொரு வித்தியாசமான வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து சிக்கல்களையும் நீக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து ஆய்வுகளும் முடிந்தால், கண்டிப்பாக அனைத்து குழப்பங்களும் நீங்கி. ஒரு தெளிவான வரி வசூல் முறை நடைமுறைக்கு வந்துவிடும்" என்று கூறினார்.

சென்னை மாநகராட்சியானது சொத்து வரி தொடர்பான பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வை அறிவித்தால், சென்னை மக்கள் எல்லோருமே மிகுந்த நிம்மதி அடைவார்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/news/confusions-around-chennai-corporations-implementation-of-revised-property-tax

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக