Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

`மக்கள் பக்கம் இருக்கும் அரசு!’ - சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை வடபழனியில் இன்று காலை நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ``’மக்கள் நம் பக்கம் இருக்கிறார்களா என்பதை விட... மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகின்ற மக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் உதவ முடியும் என்பதைப் பற்றியே சதாசர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மக்களாகிய நீங்கள் என் பக்கம் எப்போதும் இருக்கீறீர்கள்’ என்றார் ஜெயலலிதா அவர்கள். அவர் வழியில் செயல்படும் இந்த அரசும், மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நலமான மாநிலமே, வளமான மாநிலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம்வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திய உயர்தர மருத்துவ வசதி அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், அம்மா குழந்தைகள் பரிசுப் பெட்டகம், அம்மா குழந்தைகள் நலத் திட்டம், மகளிருக்கான அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், 108 அவசர கால ஊர்தி சேவை போன்ற பலமுன்னோடித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங் மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தாய்-சேய் நலப் பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நலத்திட்ட உதவித் திட்டத்தின் மூலமாக தகுதிவாய்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு பேறுகாலம் வரையில் ரூ.18,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக 99 சதவிகித பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது இந்தத் திட்டத்தின் வெற்றியைக் காட்டுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில் அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இன்றைக்குத் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாத் தலைமையகமாக விளங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்பது ஜெயலலிதா அவர்களின் கொள்கையாகும்.

Also Read: `அரசியல் ஆதாயம்; மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்!’ - ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

2010-11-ம் ஆண்டில் 1945 ஆக இருந்த மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள், தற்போது 3,400 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடந்து அதிக அளவில் தமிழக கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்கும் விதமாக தமிழக அரசு, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டதுடன், அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுத்த அரசு இந்த அரசு.

மருத்துவப் படிப்பு

அரசுப் பள்ளி மாணவரும் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடாக 7.5 சதவிகிதம் கிடைக்க இந்த அரசு சட்டம் இயற்றியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதயமும், மூளையும் ஒருசேர இணைந்து பணியாற்றும் உன்னத பணியே மருத்துவமாகும். மருத்துவத் துறையில் முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படுகிற மேலைநாடுகளைவிட கொரோனாவைக் குறுகிய காலத்தில் அதிகமாகக் கட்டுப்படுத்தி மக்களைக் காத்த மருத்துவர்கள் நம் நாட்டு மருத்துவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-eps-speech-in-chennai-private-hospital-function

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக