Ad

புதன், 14 அக்டோபர், 2020

``இந்த மாவட்டத்தைப் பசுமையா மாத்தணும்!" - பனைவிதைகள் நடும் ஆயுதப்படை காவலர்கள்

"கரூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம். பல பகுதிகளில் மரங்கள் மிகக் குறைவாக இருக்கு. அதனால், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இயற்கை விரும்பிகளோடு சேர்ந்து பனை விதைகளை நடுகிறோம். மரக்கன்றுகளை நடுகிறோம். இப்போது, செல்லாண்டிப்பட்டி குளத்தில் 600 பனைவிதைகளை நட்டிருக்கிறோம்" என்று உற்சாகமாகப் பேசுகிறார்கள், கரூர் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவலர்கள்.

பனை விதைகள் விதைக்கும் காவலர்கள்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள செல்லாண்டிப்பட்டியில் இருக்கிறது, செல்லாண்டிபட்டி குளம். கடும் வறட்சி காரணமாகத் தொடர்ச்சியாகக் கடந்த 10 வருடங்களாக இந்தக் குளம் நிரம்பவில்லை. இந்த வருடம், மழை நன்றாகப் பெய்துவருகிறது. அதனால், 'இந்த வருடம் குளம் நிரம்ப வாய்ப்புள்ளது' என்று கிராம விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், இந்தக் குளத்தை பசுமையாக்க, குளத்தைச் சுற்றி 600 பனைவிதைகளை நட்டிருக்கிறார்கள்.

Also Read: சுற்றியும் வறட்சி; ஆனால், இவர் தோட்டம் மட்டும் சோலைவனம்... கரூர் ஆய்வாளரின் `பலே' பராமரிப்பு!

'புதிய சமூக விழிப்புணர்வு அறக்கட்டளை' என்ற அமைப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவர் இந்தப் பனை விதைகள் நடும் வைபோகத்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த விழாவில், கரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவின் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றிவரும் அய்யர்சாமி, 20 காவலர்களோடு வந்து, 600 பனைவிதைகளையும் குளக்கரையில் நட்டு அசத்தியிருக்கிறார்.

பனை விதைகள் விதைக்கும் காவலர்கள்

இதுகுறித்து, ஆயுதப்படை பிரிவு காவலர்களிடம் பேசினோம்.

"வெறுமனே காவல் பணிகளை மட்டும் செய்யாமல், அய்யர்சாமி சார் எங்களை இயற்கை காதலர்களாக மாற்றிக்கிட்டு இருக்கிறார். அதனால், லத்தி பிடிக்க வேண்டிய கைகளில் மண்வெட்டி, கடப்பாறை தூக்குகிறோம். கடவூர் மலையடிவாரத்தில் 1,000 பனைவிதைகளை விதைத்திருக்கிறோம்.

அதேபோல், செல்லாண்டிப்பட்டி குளத்தில் இப்போது ராமசாமி அய்யா உதவியோடு, 600 பனைவிதைகளை விதைத்துள்ளோம். தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், கம்மாய் கரைகளில் பனை விதைகளை விதைக்க இருக்கிறோம். கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யல், அமராவதி என்று மூன்று ஆறுகள் ஓடினாலும், மாவட்டத்தின் 70 சதவிகிதம் பகுதி, வறட்சி மிகுந்த பகுதியாகவே இருக்கு.

பனை விதைகள் விதைக்கும் காவலர்கள்

அதுக்குக் காரணம், மழையை ஈர்க்காத மண்ணான சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதியாக பெரும்பாலான பகுதிகள் இருப்பதுதான். அதைவிட, காடுகளின் அளவு மற்ற மாவட்டங்களைவிட, மிகவும் குறைந்த அளவில்தான் இங்கு உள்ளது. அதனால், தொடர்ந்து தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாகக் கரூர் மாறிகிட்டு இருக்கு. அதனால், கரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகளை வளர்ப்பது, பனை விதைகளை விதைப்பது என்று அய்யர்சாமி சார் தலைமையில் தொடர்ந்து ஈடுப்பட்டுக்கிட்டு இருக்கிறோம். வறட்சியான இந்த மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றிக் காட்டியே தீருவோம்" என்றார்கள் உறுதியான வார்த்தைகளில்!



source https://www.vikatan.com/news/environment/karur-armed-reserve-police-plant-palm-seeds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக