Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

பிணந்தின்னிக் கழுகுகளை காப்பாற்ற நீர்மருது மரங்கள்... முதுமலை வனத்துறையின் நடவடிக்கை!

ஆண்டுதோறும் அக்டோபர் 2‌ முதல் 8 வரை வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படிகிறது. இதை‌ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் மரக்கன்று நடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இது ஒரு வழக்கமான நிகழ்வுதான் என்றாலும், இந்த முறை‌ இவர்கள் தேர்வு செய்துள்ள மர வகைகள் மிக முக்கியமான ஒன்றாக சூழலியல் ஆர்வலர்களால் கருதப்படுகிறது.

முதுமலை

நீர்மருது என நம்மால் அழைக்கப்படக்கூடிய (Terminalia arjuna,Terminalia bellerica, Spondias pinnata, Syzigium cumini) மரங்களைப் பெருக்கும் வகையில் இந்த வகை மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.

முதுமலையில் இந்த வகை மரங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டிய அவசியம் குறித்து நம்மிடம் பேசிய, பாறு கழுகு பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் அருளகம் பாரதிதாசன், "பாறு கழுகுகள் குறித்த தொடர் ஆய்வில் ஈடுபட்டதன் பயனாக, இவை குறிப்பிட்ட ஒரு சில வகை மரங்களில் மட்டுமே கூடுகளை அமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை அறிய முடிந்தது.

நீர்மருது எனப்படும் இந்த மரங்கள் மிகவும் உயரமாக வளர்கின்றன. இதனால் மரங்களின் உச்சியிலிருப்பது இவற்றுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கின்றது. இந்த வகை மரங்கள் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் கரைகளுக்கு அருகில் வளர்ந்து காட்டுத் தீயை எதிர்க்கின்றன. அழிவின் விளிம்பில் உள்ள 4 வகையான பாறு கழுகுகளின் கடைசி புகலிடமாக இந்தப் பகுதிகள் இருப்பதால் இவற்றைப் பாதுகாக்க வனத்துறையினருடன் சேர்ந்து நீர்மருது மரங்களை நடவு செய்துள்ளோம்" என்றார்.

பாறு கழுகு/ Save Vulture

மரக்கன்று நடும் பணிகளைத் துவக்கி வைத்த முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கௌஷல், "பிணந்தின்னிக் கழுகுகள் கூடு அமைக்கும் நீர்மருது மரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. எனவே இந்த வகை மரங்களை நடவு செய்வதன் மூலம் வரும் காலங்களில் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தற்போது மாயாற்றின் கரையில் பல இடங்களில் சுமார் 150 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/mudumalai-tiger-reserve-plants-neer-maruthu-saplings-to-create-vulture-habitats

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக