Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

`ராகுகாலம், எமகண்டம் கிடையாது; அண்ணன் - தம்பி பேச்சுவார்த்தை!' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். `மக்களின் நலத்தையும் அ.தி.மு.க தொண்டர்களின் நலத்தையும் வைத்தே எனது முடிவு இருக்கும் என ஓ.பி.எஸ் கருத்துத் தெரிவித்துள்ளாரே' என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``இது அவருடைய கருத்து.. இதில் என்ன தப்பு இருக்கு?... ஒரு தப்பும் கிடையாது. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

Also Read: அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்: சென்னை திரும்பும் ஓ.பி.எஸ்... அமைச்சர்களுடன் ஆலோசனையில் பழனிசாமி!

நீங்க இன்னொரு விஷயத்தைப் பார்க்கணும். ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டரும் சரி, தலைமைக்கழக நிர்வாகி முதல் கிளைக்கழக நிர்வாகியும் சரி, மக்களும் சரி தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதுதான் எல்லோருடைய ஒருமித்த கருத்து. வரும் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கருத்து எட்டப்படும்'' என்றார்.

எப்போதும் சென்டிமென்டாகவே அ.தி.மு.க முடிவெடுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், நாளை தேய்பிறையில் முதல்வர் வேட்பாளர் முடிவு அறிவிக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், ``நாங்க எப்பவுமே ராகு காலம், எமகண்டமெல்லாம் பார்ப்பதில்லை. உங்களுக்கு இருக்கலாம். `All days are golden days'. கடவுளுடைய படைப்பில் எல்லா நாளும் இனிய நாளே'' என்றார்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் `அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்கிறீர்களா?' என்று கேட்டனர். அதற்கு, ``அது நான் ஒருவன் மட்டும் எடுக்க வேண்டிய முடிவு இல்லை. ஒருமித்த கருத்து எட்டப்படும். எல்லோருடைய ஒருமித்த கருத்தும், தமிழகத்தில் அம்மாவுடைய ஆட்சியை மீண்டும் மலரவைக்க வேண்டும் என்பதுதான்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

Also Read: `ஓ.கே சொன்ன பன்னீர்... இறங்கிவந்த பழனிசாமி' - முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!

அப்போது, `இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்கிறார்களே? முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றனவே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், ``அண்ணன் - தம்பிக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டுதான் இருக்கும்'' என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்

வழிகாட்டுதல் குழு தொடர்பான இறுதி முடிவு எடப்பட்டதா என்ற கேள்விக்கு, ``கட்சியின் உள்விவகாரங்களை வெளியில் பேசக்கூடாது. பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை சில எதிக்ஸ் (Ethics) இருக்கும். அரசியல்வாதிகள், அமைச்சர்களுக்கென ஒரு எதிக்ஸ் இருக்கிறது. அதை யாரும் மீறக் கூடாது. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எட்டப்படும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.



source https://www.vikatan.com/news/politics/minister-jayakumar-speaks-about-admk-cm-candidate-issue-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக