Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சென்னை: `ஒன் ப்ளஸ் ஒன்' ஃபார்முலா; மயக்க ஜூஸ் - சிக்கிய சினிமா தயாரிப்பாளர்!

சென்னை, புதிய வண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளர் ரவிக்குமார் (51). இவர், சினிமா தயாரிப்பு அலுவலகத்தை சென்னை, திருவான்மியூர் டாக்டர் வாசுதேவன் நகர் பிரிவு பகுதியில் 2016-ம் ஆண்டுவாக்கில் நடத்திவந்தார். அப்போது, அந்த அலுவலகத்தில் `சமையல் வேலைக்கு ஆள் தேவை’ என ரவிக்குமார் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்து சென்னை பாலவாக்கம், செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஷனாஸ் பேகம் (52) என்பவர் சமையல் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு ஷனாஸ் பேகத்திடம் தயாரிப்பாளர் ரவிக்குமார், `நான் இரண்டு படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுப்பவர்களுக்கு `ஒன் ப்ளஸ் ஒன்' ஃபார்முலாவில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தப் பணத்தை இரட்டிப்பாகக் கொடுப்பேன்' என்று ரவிக்குமார் கூறியிருக்கிறார். அதனால், ஷனாஸ் பேகம், அந்தத் திட்டத்தில் சேர ஆசைப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வீட்டின் அருகில் வசிக்கும் பூ வியாபாரி புவனேஸ்வரியிடமும் சொன்னார்.

சினிமா தயாரிப்பு அலுவலகம்

பூ வியாபாரி புவனேஸ்வரி, ஒரு லட்சம் ரூபாயை ரவிக்குமாரிடம் கொடுத்தார். ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாயை புவனேஸ்வரியிடம் ரவிக்குமார் திரும்பக் கொடுத்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த புவனேஸ்வரி, அடுத்து 2 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். புவனேஸ்வரியைத் தொடர்ந்து ஷனாஸ் பேகமும், 7 லட்சம் ரூபாய், 26 சவரன் தங்க நகைகளை ரவிக்குமாரிடம் கொடுத்தார். ரவிக்குமாரின் `ஒன் ப்ளஸ் ஒன்' ஃபார்முலா குறித்து புவனேஸ்வரி தன்னுடைய தோழியான பெசன்ட் நகரைச் சேர்ந்த அனிதாவிடம் கூறினார். அவரும் 6 லட்சம் ரூபாயை ரவிக்குமாரிடம் கொடுத்தார். அடுத்து அனிதாவின் தோழி, பாலவாக்கத்தைச் சேர்ந்த லீனா என்பவர் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் 3 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். இப்படி `ஒன் ப்ளஸ் ஒன்' ஃபார்முலாவில் 15-க்கும் மேற்பட்டவர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

பணத்தை வாங்கிய ரவிக்குமார், யாருக்கும் இரட்டிப்பாகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அதனால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். அதனால், 4.10.2016-ல் ஒன் ப்ளஸ் ஒன் ஃபார்முலாவில் முதலீடு செய்தவர்களுக்கு ரவிக்குமார் ஓர் இன்ப அதிர்ச்சி அறிவிப்பைக் கொடுத்தார். `அலுவலகத்துக்கு வந்து உங்களின் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார். அதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அலுவலகத்தில் தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் அங்கு சென்றவர்கள் பிரியாணி மற்றும் மது விருந்திலும் கலந்துகொண்டனர். அந்தச் சமயத்தில், `எனக்கு ஓரிடத்திலிருந்து நள்ளிரவில் பணம் வருகிறது. அதனால் காத்திருந்து வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், காலையில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

ரவிக்குமார்

அதனால் பலர் `காத்திருக்கிறோம்’ என அவரின் அலுவலகத்திலேயே அன்றைய தினம் இரவு தங்கினர். அப்போது அனைவருக்கும் இரவில் ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைக் குடித்ததும் அனைவரும் மயங்கியிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ரவிக்குமார் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இந்தநிலையில் ரவிக்குமாரின் அலுவலகத்துக்கு டி.வி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களைக் கடனுக்குக் கொடுத்த ஒருவர், அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடப்பதைப் பார்த்த அவர், திருவான்மியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தபோது மயக்கம் தெளிந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து போலீஸாரிடம் நடந்த விவரங்களை அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அப்போதுதான் ரவிக்குமார், தங்களை புத்திச்சாலித்தனமாக ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து ரவிக்குமாரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் திருவான்மியூர் காவல் நிலையத்தில் 5.10.2016-ல் புகாரளித்தனர். ஆனால், போலீஸாரோ புகாரை வாங்கவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், நீலாங்கரை காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரைத் தேடிவந்தனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் குறித்த எந்தத் தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ரவிக்குமார், சென்னையிலுள்ள விடுதியில் தங்கியிருக்கும் ரகசியத் தகவல் நீலாங்கரை போலீஸாருக்குக் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் ரவிக்குமாரைப் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கார் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

சினிமா தயாரிப்பு அலுவலகம்

இது குறித்து நீலாங்கரை போலீஸார் கூறுகையில்,``சினிமா படம் தயாரிப்பதாகக் கூறிய ரவிக்குமார், 15-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், அபிஷேக் நகரைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு நிஜாமுதீன் என்ற பெயரும் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக தேடிவந்த நிலையில் நேற்றுதான் அவரைக் கைதுசெய்ய முடிந்தது. பணத்தை முதலீடு செய்ய எத்தனையோ வழிகள் இருக்கும்போது ரவிக்குமாரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துவருகிறோம். எனவே, இது போன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றனர்.

Also Read: சென்னை: `ரூ.2,000-தான் டார்க்கெட்; `Sale' வாட்ஸ்அப் குரூப்!' - அதிரவைத்த ஆன்லைன் மோசடி

இது குறித்து ஷனாஸ்பேகம் கூறுகையில், ``என்னுடைய மகளின் திருமணத்துக்காக பணத்தையும் நகைகளையும் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்தேன். `ஒன் ப்ளஸ் ஒன்’ ஃபார்முலாவை ரவிக்குமார் என்னிடம் கூறியதும், நான் மட்டுமல்லாமல் எனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி பணத்தை முதலீடு செய்தோம். நாங்கள் பணத்தைக் கொடுத்ததும் 20 ரூபாய் பத்திரத்தில் அக்ரிமென்ட் போட்டு ரவிக்குமார் கொடுத்தார். அதனால் அவரை முழுமையாக நம்பினோம். ஆனால், எங்களை ரவிக்குமார் ஏமாற்றிவிட்டார். எங்களின் பணம் திரும்பக் கிடைக்குமா சார்?'' என்று பரிதாபமாகக் கேட்டார்.

ஷனாஸ்பேகம்

புவனேஸ்வரி கூறுகையில், ``பூ வியாபாரம் செய்து சிறுகச் சிறுக சேர்த்த பணம் சார் இது. ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து ஆசைகாட்டனார் ரவிக்குமார். அதன் பிறகு நான் கொடுத்த 2 லட்சம் ரூபாய்க்கு 4 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனக் காத்திருந்தேன். ஆனால் முதலுக்கே ஆபத்தாகிவிட்டது" என்றார் கண்ணீருடன்.

பொதுமக்களே உஷார்!



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-cinema-producer-for-cheating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக