Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

``எனக்கு சீட் கிடைக்கக்கூடாதுனு கிளப்பிவிட்டதா இருக்கலாம்!" - வதந்தி குறித்து விஜயதாரணி

குஷ்புவை தொடர்ந்து இன்னும் சில மாற்றுக் கட்சி அரசியல் பிரபலங்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. அதில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பெயரும் அடக்கம். நான் பா.ஜ.க-வில் இணையப் போவதில்லை என விளக்கம் கொடுத்திருக்கும் விஜயதாரணியிடம், ஏன் அவர் பெயர் இதில் அடிபட்டது என்பது குறித்துக் கேட்டோம்.

''நான் எதுக்கு பி.ஜே.பி-க்கு போகணும்? காங்கிரஸில் எனக்கு ரெண்டு தடவ எம்.எல்.ஏ பொறுப்பு கிடைச்சிருக்கு, அடுத்ததா எம்.பி வாய்ப்பை கேட்டுட்டு இருக்கேன். கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொறுப்புல இருக்கேன். எனக்கு பி.ஜே.பி-ல சேர என்ன அவசியம் வந்தது? கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு சீட் கேட்டிருக்கேன். அது இல்லைன்னா சட்டமன்றத்துல கன்டின்யூ பண்ணுவேன். எனக்குக் கட்சி சீட் கொடுக்கக்கூடாதுனே சிலர் இந்த வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம். இது உள்ள இருந்தோ, வெளிய பா.ஜ.க-வில் இருந்தோ கிளம்பிய வதந்தியா இருக்கலாம். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சதி நடக்குது.

குஷ்பு

குஷ்புவுக்கு கட்சி மேலிடத்திலிருந்து பொறுப்பு கொடுத்தாங்க. இருந்தாலும் அவங்க வேற கட்சிக்குப் போகக் காரணங்கள் அவங்களுக்கு இருந்திருக்குது. எனக்கு சினிமா மாதிரி வேற பிசினஸ் எல்லாம் கிடையாது. நான் பாரம்பர்யமா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவ. குழந்தை பருவத்துல இருந்தே இந்தக் கட்சியில இருக்கேன். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ்னு படிப்படியா உயர்ந்தவ நான். கடந்த 30 ஆண்டுகளா காங்கிரஸில் இருக்கேன்.

எங்க கட்சியில இருந்து பிரிஞ்சு போனவங்க ஆரம்பிச்ச கட்சிகளுக்குக்கூட நான் போகல. ப.சிதம்பரத்தோட ஆபீஸ் ஜூனியரா இருந்தும் அவரு ஆரம்பிச்ச கட்சிக்கு நான் போகல. ஆனா, குஷ்பு 10 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில மூணு கட்சிக்கு மாறிட்டாங்க. நான் குழந்தையில இருந்தே காங்கிரஸ், ஆனா குஷ்பு ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் காங்கிரஸுக்கு வந்தாங்க. என் இயல்பு வேற, குஷ்பு இயல்பு வேற. நான் மனதுக்குப் பிடிக்காத மாற்றத்தை விரும்பமாட்டேன், நான் கொள்கைப்பிடிப்போடு இருக்கேன்.

விஜயதாரணி எம்.எல்.ஏ

ஜோதிமணி கட்சியில எம்.பி சீட் கேட்டதுனால, அவங்களையும் இப்படித்தான் கட்சியை விட்டுப் போயிடுவாங்கனு சொன்னாங்க. அவங்களுக்கு சீட் கொடுத்து கட்சி ஜெயிக்கவைக்கலையா? எல்லா இடங்களிலும், பெண்கள் வளர்ந்து வரும்போது இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது. இப்படி கொளுத்திப்போடுறதை கட்சி மேலிடம் நம்பாது. நான் வெற்றி பெற்றிருவேனோனு பயத்துல, எங்க கட்சியில உள்ள போட்டியாளர்களும் பா.ஜ.க-வுல உள்ளவங்களும் இப்படி கிளப்பி விடுறாங்கன்னு நினைக்கிறேன். நான் மக்களுக்காகப் பணிசெய்றேன். காங்கிரஸ் கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/mla-vijayadharani-clarifies-rumours-about-joining-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக