Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

சிசிடிவி கேமரா.. 2 சட்டை! - துப்பாக்கித் திருட்டில் நண்பருடன் கும்பகோணம் போலீஸ் சிக்கிய பின்னணி

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கி காணாமல் போன வழக்கில் போலீஸ் மற்றும் இதற்கு உதவிய அவரது நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி

கும்பகோணம் பகுதிகளில் துப்பாக்கி புழக்கம் அதிகமிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் திருப்பனந்தாள் அருகே உள்ள மகராஜபுரத்தை சேர்ந்த டாக்டர் ராம்குமார் (42)விளந்தகண்டம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (35)முட்டக்குடியை சேர்ந்த அரவிந்தன்(40) ஆகிய மூன்று பேரை கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 ஏர்கன் வகை துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர்,2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகள் மற்றும் 67 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆயுத பாதுகாப்பு அறையில் பாதுகப்பாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அறையைத் திறந்து துப்பாக்கிகளை என்ணிய போது 0.22 பேபி ஷாட் ரிவால்வர், பிபி பெல்லட் ஏர்கன் என இரண்டு துப்பாக்கிகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் வெளியேவும் கசிந்தது.

வாசுதேவன்

இதையடுத்து திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,அசோகன் துப்பாக்கி காணாமல் போனதாக சொல்லப்படுவது புரளி என கூறியது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காணாமல்போன துப்பாக்கியைக் கண்டுபிடிக்க எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

எஸ்.பி,எஸ்.ஐ கண்ணன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ பிரகாஷம்,ஏட்டுகள் மோகன்,உமா சங்கர் உள்ளிட்ட 7 பேர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் துப்பாக்கியைத் திருடியதாக கூறி திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக இருந்த தீபக் (26), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அவருடைய நண்பர் வாசுதேவன் என இருவரையும் கைது செய்து தஞ்சையிலுள்ள சப்ஜெயிலில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட காவலர் தீபக்

கிட்டதட்ட 2 மாதங்களுக்கு மேலாக கும்பகோணத்திலேயே முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகளையும் கைது செய்த எஸ்.பி எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். துப்பாக்கி காணாமல்போன வழக்கில் போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கடலூரைச் சேர்ந்த தீபக் என்பவர் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மே மாதம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகளைத் திருடி கொண்டு கடலூருக்கு எடுத்து சென்றுள்ளார்.

Also Read: ‘கைமாறிய துப்பாக்கி; விரட்டிச்சென்ற போலீஸ்!’ -ஆற்காட்டை அதிரவைத்த ரவுடிகளின் டீலிங்

இதற்கிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.அதற்கான சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் பணிக்கு வந்தார். இந்நிலையில் 18.8.2020 அன்று துப்பாக்கி காணாமல்போன தகவல் தெரிய வருகிறது. இந்தத் தகவல் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயின் கனவத்திற்கு சென்றது.

`ஸ்டேஷனிலிருந்த துப்பாக்கி எப்படி காணாமல் போகும்? இதன் விபரீதத்தை உணராமல் இப்படி அசால்டாக இருந்திருக்காங்களே நிச்சயம் திருப்பனந்தாள் ஸ்டேஷனில் இருந்தவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை’ என உடனடியாக விசாரணைக்காகத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தோட்டா

டி.எஸ்.பி,ஸ்டேஷனிலிருந்த போலீஸார் என பலரிடமும் தனப்படையினர் விசாரணை செய்தததில், காவலர் தீபக் துப்பாக்கியைத் திருடியது தெரிய வந்தது. தன் மீது சந்தேகம் ஏற்பட்டதை உணர்ந்த தீபக் தன் நண்பர் வாசுதேவனிடம் சொல்லி கடலூரிலிருந்து துப்பாக்கியை எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்.

தான் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக வாசுதேவனிடம், `இரண்டு சட்டை எடுத்து கிட்டு வா. சிசிடிவி கேமரா இல்லாத வழியாக வந்து ஸ்டேஷன் முன்பு துப்பாக்கியைப் போட்டு விடு. பின்னர் வேற ஒரு சட்டையை மாற்றி விடு. உடனே இங்கிருந்து சென்று விடாமல் 2 மணி நேரம் கழிச்சு போனால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது’ என தீபக் ஐடியா கொடுத்துள்ளார்.

Also Read: கொரோனா சோதனை; சிறுமிகளுக்குப் பாலியல் சீண்டல்!- போலி சுகாதார ஆய்வாளரை வளைத்த குளச்சல் போலீஸ்

நண்பன் தீபக்கிற்காக வாசுதேவன் அவர் கூறியபடியே செய்துள்ளார். `துப்பாக்கிதான் கிடைத்து விட்டதே, இனி விசாரணை நடக்காது’ என நினைத்த தீபக்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில் தஞ்சையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தீபக் மாற்றப்பட்டார்.சிசிடிவி கேமரா பதிவால் சிக்கிவிடக் கூடாது என சமயோசிதமாக செயல்பட்ட தீபக், அதில் பதிவான காட்சிகள், செல்போன் பதிவுகள் அகிவற்றின் மூலம் சிக்கி கொண்டார். திருப்பனந்தாள் முதல் சிதம்பரம் வரையிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து இதனை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர்’’ தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/kumbakonam-police-arrest-2-including-constable-in-gun-missing-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக