Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`கொரோனாவால் தாமதம்; சி.ஏ.ஏ விரைவில் அமல்படுத்தப்படும்!’ - பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, `குடியுரிமைத் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்துவது, கொரோனா வைரஸ் பிரச்னையால் தாமதமானது. விரைவில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும்’’ என்று பேசியிருக்கிறார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. தேர்தல் வேலைகளை அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் வேகப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய ஜெ.பி.நட்டா,``கொரோனா வைரஸ் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில், இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொறுத்தவரை, அது ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் பலன்களை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள்.

ஜெ.பி.நட்டா

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்துதல் தாமதமாகியுள்ளது. ஆனால், நிலைமை மெதுவாக சீரடைந்து வருவதால், சி.ஏ.ஏ. பணிகள் தொடங்கப்பட்டு, அதற்கான விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சி.ஏ.ஏ மிக விரைவில் செயல்படுத்தப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் தகுதியான அனைவருக்கும் நிச்சயமாக இந்திய குடியுரிமை கிடைக்கும்.

மேற்குவங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி அரசாங்கம், தனது கட்சியின் அரசியல் ஆதாயங்களுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது. ஆனால், பாரத பிரதமர் நரேந்திர மோடி, அனைவரின் வளர்ச்சிக்காகவும் வேலை செய்து வருகிறார். மக்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்வதே எங்களின் தத்துவம், ஆனால், திரிணாமுல் காங்கிரஸின் தத்துவம் சமூகத்தை பிளவுபடுத்துவது. அந்தக் கட்சி தேர்தல்களின் போது வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது’’ என்று கூறினார். மேலும்,..

மேலும், அவர் பேசுகையில், `2021 ல் நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வென்று, அடுத்த அரசை அமைக்கும்’ என்றும் ஜெ.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த சட்டம் நடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பிருந்த அதுகுறித்த சர்ச்சை மேற்குவங்க மாநிலத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சி.ஏ.ஏ-வை சர்ச்சைக்குரிய சட்டம் என்று தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/caa-delayed-by-covid-implementation-will-soon-says-nadda

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக