டிவி நடிகர் சங்கம் இரண்டாகப் பிளவுபட்டு, சங்க அலுவலகம் இழுத்துப் பூட்டப்பட்டுள்ளது. சில செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தன்னைத் தலைவர் என அறிவித்துக் கொண்ட துணைத்தலைவர் மனோபாலா, இன்னொரு சின்னத்திரை சங்கமான சின்னத்திரைக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் அமர்ந்து சங்கப் பணிகளைப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட ரவிவர்மாவோ, பூட்டப்பட்ட சங்க அலுவலகத்தின் எதிரிலேயே சேர் போட்டு அமர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்.
"ஒரு சங்கத்துல பொதுக்குழுவுக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கு. அந்தப் பொதுக்குழுவையே மதிக்காம குறுக்கு வழியில் பதவிக்கு வரத் துடிக்கிறவங்களைத் தடுக்கவும், அவங்களால முடங்கிக் கிடக்கிற சங்கத்தைப் பழையபடி இயங்க வைக்கவும்தான் சங்க அலுவலகத்துக்கு எதிரிலேயே உட்கார்ந்துட்டேன். மழையையும் பொருட்படுத்தாம உறுப்பினர்கள் வந்து எனக்கு ஆதரவு தெரிவிச்சு கையெழுத்துப் போட்டிட்டிருக்காங்க. உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கையை காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்’’ என்கிறார் ரவிவர்மா.
Also Read: "ஜெயிக்காமலேயே பொறுப்புக்கு வந்துடணும்னு மனோபாலா நினைக்கிறார்!" - டிவி சங்க சர்ச்சை
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் மனோபாலா முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்த செய்தியும் புகைப்படங்களும் செய்தித் துறையால் பத்திரிக்கைகளுக்குத் தரப்பட்டிருந்தன.
அதில் ’சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர்’ என மனோபாலாவைக் குறிப்பிட்டிருந்தததைச் சுட்டிக் காட்டும் சில டிவி நடிகர்கள், "அது எப்படிங்க ஒரு சங்கத்தை உடைச்சுக் குறுக்கு வழியில பதவிக்கு வந்தவங்களை முதல்வர் சந்திக்கலாம்? ஒருவேளை முதல்வர் சந்திப்புல சின்னத்திரை சங்கம் குறித்துப் பேசலைன்னாலுமே அது செய்தியா கொடுக்கப்படறப்ப அங்க சங்கத்தின் பெயரை எப்படிப் பயன்படுத்தப்படலாம்? மனோபாலா தலைவரா தேர்வான விதமே சர்ச்சையா இருக்கிறப்ப முதல்வர் அலுவலகம் தனக்குச் சாதகமா இருக்கிற மாதிரிக் காட்டுற வேலை இது. இது அரசுக்கு அவப்பெயரை உண்டாக்காதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராகத் தேர்வான அன்று வாழ்த்துச் சொல்ல வந்த எல்லோருக்குமே அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. மனோபாலா கட்சியில நட்சத்திரப் பேச்சாளரும் கூட. அந்த முறையில முதல்வரைச் சந்திச்சார்" என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
"கூட்டத்தோடு கூட்டமா முதல்வரைச் சந்திச்சுட்டு, இவர் டிவி நடிகர் சங்கத்துக்குத் தலைவரனாதற்கு, முதல்வர் வாழ்த்துச் சொன்ன மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிட்டார். இந்த மாதிரியான வேலைகள்லாம் அவர் நல்லா செய்வார்" என்கிறார்கள் ரவிவர்மா தரப்பினர்.
மனோபாலாவிடம் இதுகுறித்துக் கேட்கலாமென அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
source https://cinema.vikatan.com/television/issues-continue-in-tv-actors-union-as-manobala-meets-cm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக