, ஊரிலிருந்து வந்திருக்கும் பெரியப்பா, வீட்டில் விளையாடும் பிள்ளைகளை அழைத்து... ‘அப்புறம் பசங்களா... என்ன விஷயம்?” என்று விசாரிக்க, ‘பெரியப்பா... ரெண்டு நாள் முன்னாடி... இவன் என்னைக் கிள்ளிட்டான்” என்று கடந்த நாட்களின் சில்லறைச் சண்டைகளை அவர்கள் ஆவலுடன் விவரிக்க “அப்படில்லாம் சண்டை போடக்கூடாது... புரிஞ்சுதா” என்று பெரியப்பா உபதேசம் செய்வார்.
கமல் வரும் தினங்கள் இப்படித்தான் ‘சவசவ’வென்று நகர்கின்றன. கடந்த தினங்களில் நிகழ்ந்த சச்சரவுகளைப் பற்றி மறுபடி உட்கார்ந்து நீளமாக ஆய்வு செய்வது சலிப்பைத் தருகிறது. மாறாக அவற்றைச் சுருக்கமாக முடித்து விட்டு புதிய டாஸ்க்களைத் தருவது நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும்.
கமல் அடிக்கடி அரசியல் பன்ச் சொல்வதைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் சட்டென்று கேமரா முன்பு திரும்பி "எப்படிச் சொன்னேன்... பார்த்தியா?” என்று பெருமையாகப் பார்ப்பது சலிப்பை மட்டுமல்லாமல் சமயங்களில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. "இப்ப என் விஷயத்தைப் பார்த்தீங்கன்னா…” என்று பஞ்சாயத்தின் இடையில் அதிகமாக தன் சுயபுராணத்தை இழுத்துக் கொள்வதையும் கமல் தவிர்க்கலாம். ஆனால், என்ன செய்ய, பிக்பாஸை தனக்கான பரப்புரை மையமாகப் பார்ப்பதால்தானே அவர் இந்த நிகழ்ச்சியையே தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மற்றபடி, ஒரு விஷயத்தில் இருந்து இன்னொரு விஷயத்திற்கு தாவும் போது அதைத் தொடர்புப்படுத்தும்படி கூர்மையான நகைச்சுவை இணைப்பை கமல் உபயோகப்படுத்துவது ரசிக்க வைக்கும்படி இருக்கிறது.
தனது மாஸ்க்கை கழற்றிய கமல், "உள்ளேயும் முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன. வில்லன்-னு நெனச்ச ஆள் ரொம்ப நல்லவரா இருக்காரு. அப்ப நல்லவங்க? பார்ப்போம்... வாங்க” என்ற முன்னுரையுடன் அரங்கத்தில் நுழைந்தவர் “ஆளாளுக்கு குரூப் பிரிச்சுக்கிட்டு இருக்காங்க” என்று பிக்பாஸ் வீ்ட்டைச் சாக்கிட்டுச் சொல்வது போல சமகால தமிழக அரசியல் குடுமிப்பிடி சண்டையை ஜாலியாக சுட்டிக் காட்டினார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் ‘சோகாமா’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலித்தது. ‘நீங்கள்லாம் பேட் பாய்ஸ்... உங்க கூட நான் சேரமாட்டேன்’ என்பது போல் ஷிவானி வழக்கமான தனி ஆவர்த்தன நடனம் ஆட, சோளக்காட்டு பொம்மைக்கு உயிர்வந்தது போல் உடம்பை அசைத்தார் சுரேஷ். ‘லக்ஸரி பாயின்ட்டை பிடுங்கிக் கொள்வேன்’ என்று பிக்பாஸ் மிரட்டியிருப்பதால், மக்கள் தூக்கக் கலக்கத்திலும் எழுந்து வந்து வேண்டாவெறுப்பாக ஆடுகிறார்கள்.
இன்றைய பஞ்சாயத்து மீன்குழம்பு வழியாக வந்தது. ‘மீனுகுட்டி’ ரேகா, பிக்பாஸிடம் மீன் கேட்டிருப்பார் போலிருக்கிறது. அது வந்தது. "அடேய் பிக்பாஸா... ரேகா மேலதான் உனக்கு கண்ணா? இதன் மூலம் உன் வயதை அறிந்து கொண்டேனடா!” என்று பிக்பாஸூடன் சேர்த்து ரேகாவையும் கலாய்த்தார் நிஷா.
“மீனை வறுக்கலாமா, குழம்பு வைக்கலாமா, நாளை சாப்பிடலாமா... இன்றேவா” என்கிற உரையாடலில் சனம் தன் அபிப்ராயத்தைச் சொல்ல “நான் பேசும் போது மூக்கை நுழைக்காதே” என்று பாலா முகத்தைக் காட்ட “மீன் குழம்புல எப்படி மூக்கை நுழைக்க முடியும்?” என்று சனம் பதிலுக்கு மல்லுக்கட்ட, பிறகு “பாருங்க அங்கிள்... இந்தப் பையனை” என்று தாத்தாவிடம் பஞ்சாயத்திற்கு சென்றார் சனம்.
“உன் கிட்ட பேசப் பிடிக்கலைன்னு சொல்லிட்டேன்ல... அப்புறம் என்ன?” என்று பாலா வெறுப்பாகப் பேச“ இனி செத்தாலும் உன்கூட பேச மாட்டேன்.. மத்தபடி எனக்கு உன்னைப் பிடிக்கும்” என சினிமா வசனம் போல சொல்லிச் சென்றார் சனம். 'ஊரு சனம்’ என்ன நெனக்கும்-னு ரெண்டு பேருக்கும் கவலையில்ல போல.
ஆளுக்கொரு உண்டியல் கொடுத்தார்கள். நாணயமாக நடந்து கொள்பவர்களுக்கு வாரா வாரம் ஒரு நாணயம் தருவார்களாம். ‘எந்தப் படம் போட்ட உண்டியல் யாருக்கு... நீங்களே அடிச்சு பிரிச்சுக்கங்க...” என்று அவர்களுக்குள் கோள் மூட்டி விட்டார் பிக்பாஸ்.
“குழம்பு வைக்க இன்னிக்கு மீனு வந்திருக்கு... என் செல்ல பேரும் மீனுகுட்டிதான்.. அதனால நான் மீன் பொம்மை படம் போட்ட உண்டியலை எடுத்துக்கறேன்” என்று தாறுமாறான லாஜிக் பேசினார் முதலில் வந்த ரேகா. (கடல்லயும் மீன் இருக்கும்.. ‘கடலோரக் கவிதைலயும் ரேகா நடிச்சிருக்காங்க..)
‘நான் சிங்கம் மாதிரி தனியா நின்னு சாதிப்பேன்” என்று ‘சிங்கப்பெண்ணே’வாக மாறினார் அனிதா. தான் செய்த பிழைகளை தானே நூறுமுறை சொல்லி மாட்டி ‘அசிங்கப்’படாமல் இருப்பதே இவர் முதலில் செய்ய வேண்டியது.
‘ஆமை’ பொம்மையை தேர்வு செய்து ‘மெதுவாப் போனாலும் கடைசில நான்தான் ஜெயிப்பேன்’ என்றார் சனம். (இந்த வார எவிக்ஷன் ‘மூன்றெழுத்தாமே?!). “தேவைப்படும்போது விஷத்தைக் கக்குவேன்” என்று தனக்குப் பொருத்தமான காரணத்தைச் சொல்லி ‘பாம்பை’ தேர்ந்தெடுத்தார் ரியோ.
“என் வழி தனி வழி... இதை யாருக்கும் பிடிக்காது... அதனால நான் எடுக்கறேன்” என்று ‘கழுதை’ படம் போட்ட உண்டியலை எடுத்தார் பாலா. ‘நீ நல்லா சுமப்பே’ என்று யாரோ கமென்ட் அடித்தார்கள். உண்மைதான் ரியோவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுமந்திருந்தார் பாலா.
ஷிவானி ‘முயல் குட்டியை’ தேர்ந்தெடுத்து அது போலவே ஓட முயன்றது ரிப்பீட் மோடில் பார்க்க வேண்டிய காட்சி. (கிளி பொம்மை வந்திருக்கலாம். அது கூட வாய் திறந்து பேசும்). கடைசியாக வந்த ஆரி, ‘இதான் எனக்கு கிடைச்சது... வாத்து பொம்மை... நான் மடையனா.. இல்லையான்றதை பார்ப்போம்” என்றார். ‘மீனோடு சேர்த்து உன்னையும் குழம்பு வெச்சுடுவோம்’ என்று ஜாலி கமென்ட் அடித்தார் ரியோ.
தலைவருக்கு எதிராகப் புகார் எழுதலாமாம். “எதையாவது எழுதிப் போடுங்கடே... எனக்கென்ன?” என்று படுக்கையில் கட்டையைச் சாத்தி குறட்டை விட்டார் ‘வீட்டின் தலைவர்’ சுரேஷ்.
மறுபடியும் அகம் டிவி. ஸ்மார்ட் டிவியின் வழியாக வந்த கமலை ‘ஸ்மார்ட்டா இருக்கீங்க...” என்று மக்கள் ஐஸ் வைக்க “அந்த தவில்காரன் காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க” என்று பெருமையை கேட்டுப் பெற்றுக் கொண்டார் கமல். ‘மக்களின் பிரதிநிதி’ன்றது என்னோட டைட்டில். அதை எடுத்துக்கிட்டீங்களே..” என்று அர்ச்சனாவிடம் ஜாலியான பஞ்சாயத்தை ஆரம்பித்தார் கமல். (இதைப் பற்றி அந்த நாளின் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தேன்).
“நீங்களும் மத்தவங்க மாதிரி கோவிட் டெஸ்ட் எடுத்தீங்களா?” என்று அர்ச்சனாவிடம் விசாரிக்க ‘ஆமாம் சார்... எனக்கும் அதே குச்சியை மூக்குல விட்டு டெஸ்ட் பண்ணாங்க” என்று பதில் சொன்னார் அர்ச்சனா. (அதே குச்சி போட மாட்டாங்க. வேற குச்சியா இருக்கும்... ஹிஹி).
“ஜாக்கிரதை.. இவங்க unseen வீடியோக்களையும் விளம்பர இடைவேளையோட சேர்த்து பார்த்துட்டு வந்திருக்காங்க. உங்க ப்ளஸ் மைனஸ் தெரிஞ்சவங்க" என்று மற்றவர்களிடம் அர்ச்சனாவை போட்டுக் கொடுத்தார் கமல்.
"‘Argument’-ல ஆரம்பிச்சு. ‘Agreement’ல வந்திட்டீங்க...” (கவித... கவித) என்று பாலா – சனம் பஞ்சாயத்திற்கு அடுத்து வந்து அவர்களைப் பாராட்டினார் கமல். அதற்குப் பிறகு நிகழ்ந்த மீன்குழம்பு சண்டையைப் பார்க்கவில்லை போல.
“நீங்க சொன்னதைத்தான் அவர் வழிமொழிஞ்சாரு... அவரை நீங்க காறி முழிஞ்சுட்டீங்களே” என்று ரியோ – சுரேஷ் பஞ்சாயத்திற்குள் அடுத்து நுழைந்தார் கமல். லேட்டாக வந்த ஸ்கூல் பையன் மாதிரி சங்கடமான முகத்துடன் நின்றார் ரியோ. ‘க்ரூப்பிஸம்-னு அவர் பொதுவாத்தான் சொன்னார். நீங்களா உள்ளே வந்து மாட்டிக்கிட்டீங்க” என்று கமல் சொன்னதும் ரியோவின் முகத்தில் சங்கடம் கூட ஆரம்பித்தது.
“நான் கோபப்பட்டதுக்கு… அதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்கள்தான் காரணம். குரூப்பிஸம்-னு சுரேஷ் என்னை வெச்சுதான் சொன்னாரு” என்று பிறகு ஆரியிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் ரியோ. (எனில் கமல் இதர unseen வீடியோக்களைப் பார்ப்பதில்லையா... அல்லது அதை வைத்து பேசினால் அதைப் பார்க்காதவர்களுக்கு புரியாது என்று விட்டு விடுகிறாரா என்று தெரியவில்லை).
கமல் பேசும் போது மற்றவர்கள் குழைவாகவும் பணிவாகவும் சிரித்துக் கொண்டிருக்க, கமலுக்கு ஈடுகொடுக்கும் படி கவுன்ட்டர் அடிப்பவர் சுரேஷ் மட்டுமே. “நான் கொளுத்திப் போட்டது உண்மைதான். ஆனா அது எந்த பட்டாசுன்னு தெரியல” என்று சலனமில்லாத முகத்துடன் சுரேஷ் சொல்ல கமலே சிரித்து விட்டார். “நேர்மையான மனுஷங்க இவரு.”
‘'முகமூடி கழலலாம். ஆனால் வேட்டி அப்படியல்ல” என்று கமல் ஆரம்பித்ததும் ‘என்னடா.. இது வண்டியை நம்ம பக்கம் திருப்பறாரு’ என்று ஜெர்க் ஆன வேல்முருகன் அப்போதே உளற ஆரம்பித்து விட்டார். வேல்முருகனுக்கு ஒரு விஷயத்தை கச்சிதமாக விளக்கும் திறமையில்லை அல்லது ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று விஷயங்களை மென்று விழுங்குகிறார்.
“ஏங்க. பளிச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே? ரியோ சொல்லித்தான் நீங்க வேட்டியைக் கட்ட முதலில் தயங்கினீங்க -ன்னு சுரேஷ் தப்பா நெனச்சிட்டு இருக்காரு. அது சுரேஷோட கற்பனை’ இதை அண்டர்லைன் பண்ணி சொல்லி இருக்கலாமே?” என்று பிற்பாடு ஆரி விளக்கியும் 'ஆளை விடுங்கடா சாமி’ மோடிலேயே இருந்தார் வேல்முருகன்.
பிக்பாஸ் வீட்டில் ஆங்கிலம் பேசினால் பாயின்ட்ஸ் பிடுங்கி விடுகிறார்கள் போல. (எப்படியெல்லாம் தமிழ் வளர்கிறது... பாருங்கள்!). தான் பேசும் போது, ‘Conversation’ என்கிற வார்த்தையை பிற்பாடு ‘உரையாடல்’ என்று மாற்றிக் கொண்டார் வேல்ஸ். “நான் இங்கிலீஷ் கலந்து பேசுவேன். ஏனென்றால் நான் பேசும் தமிழ் சில தமிழர்களுக்குப் புரியவில்லையாம்” என்று கேமராவைப் பார்த்து நையாண்டி செய்தார் கமல். (அதற்காக ‘இனான்ய’ மொழியில் ‘ட்வீட்’ எழுதினால்... எப்படி பாஸ்?!. அரசியலில் இருக்கிற நீங்கள் வெகுசன மக்களிடம் சென்று சேர வேண்டாமா?!).
அடுத்ததாக, போட்டியாளர்களுக்கு அர்ச்சனா வழங்கிய பட்டங்கள் பற்றிய விமர்சனம். ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்கிற வேலுநாயக்கர் பஞ்சாயத்து போலவே ‘இவர் நம்மைப் பாராட்டுறாரா... இல்லை கவிழ்க்கிறாரா’ என்று பெரும்பாலான போட்டியாளர்கள் குழம்பினார்கள். ‘அதுதான் எனக்கும் வேணும்” என்று சாமி படங்களில் வரும் மகாவிஷ்ணு போல மந்தகாசமாக சிரித்தார் கமல்.
ஆனால், ஒவ்வொரு விஷயத்திற்கும் புதுப்புது வியாக்கியானங்களைக் கண்டுபிடித்து நீளமாக கமல் விளக்கும் போது கொட்டாவி வருவதைத் தடுக்க முடியவில்லை.
“வேஸ்ட்டுல, ரெண்டு வேஸ்ட்டு... நல்ல வேஸ்ட்டுல விவசாயம் பண்ணலாம். நியூக்ளியர் வேஸ்ட் ஆபத்தானது’ என்று கமல் சொல்ல ‘ஹைய்யா, ஜாலி... விவசாயம் செய்ய கமல் சாரே பர்மிஷன் கொடுத்துட்டாரு” என்று பாலா, ஷிவானியின் பக்கம் அதிகம் சென்று விடுவாரோ என்னமோ!
‘சவாலான போட்டியாளர்’ என்பதற்கு கமல் சொன்ன விளக்கத்தைப் பார்த்து குழம்பிய ரம்யா, ‘இதற்கு நான் மொட்டை மாடிலேயே செட்டில் ஆகியிருக்கலாம்’ போல என்று மையமாக சிரித்து சமாளித்தார்.
சோம் மற்றும் சம்யுக்தா பெற்ற விருதையொட்டி ‘நாட்டின் தலைவர்களே ஷோகேஸ் பொம்மையா இருந்திருக்காங்க... 'யாருய்யா அது இப்பவும் இருக்காங்க’ன்னு சொல்றது’ என்று செய்த டிராமா சற்று மிகையானது என்றாலும் சற்று சிரித்து வைக்கக்கூடிய நகைச்சுவைதான்.
‘திருவிழாவில் காணாமல் போன குழந்தைக்கெல்லாம்’ கமல் கொடுத்த வியாக்கியானத்தைப் பார்த்தபோது நமக்கே எங்காவது தொலைந்து போகலாம் என்றாகி விட்டது. முடியல.
‘அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்கிற துணை நடிகர் சமூகம் சினிமாவிற்கு எத்தனை முக்கியம்.. ‘எக்ஸ்ட்ராஸ்’ என்கிற பெயர் எப்படி பிற்பாடு ‘ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்’ என்று மாறியது என்பதையெல்லாம் ‘அதோ அந்தப் பறவை’ கோரஸ், 'நாயகன்' படக்காட்சி போன்ற உதாரணங்களையெல்லாம் பாடி கமல் விளக்கிக் கொண்டிருக்க, “என்னவே சொல்றீரு. ஒண்ணும் வெளங்கலையே” என்கிற தன் வழக்கமான முகபாவத்தோடு பின் பென்ச் மாணவன் மாதிரி வெறித்துக் கொண்டிருந்தார் ஷிவானி. (டைம் வேஸ்ட்!).
‘Choose your opponent. Choose your battle’ என்று சனத்திற்கு கமல் சொன்ன உபதேசம் ‘நச்’. இது சனத்திற்கு மட்டுமல்ல நம்மில் பெரும்பாலோனோருக்கும் பொருந்தும்.
''Trending என்கிற விஷயம் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்’' என்று கமல் சொன்ன விளக்கத்தைப் பார்த்து ஏற்கெனவே மண்டையைப் பிறாண்டிக் கொண்டிருந்த அனிதா, கூடுதலாக குழம்பியது தெளிவாகத் தெரிந்தது. ''நான் 27 முறை கோபத்தை அடக்கியிருக்கேன். மூணு முறைதான் சண்டை போட்டேன்” என்று அனிதா புள்ளிவிவரங்களை அடுக்க "கணக்கு வெச்சுக்கிட்டு கோபப்படறீங்களா?” என்று கமல் வாரியது நல்ல கவுன்ட்டர்.
கடந்த சீசன் சக்திக்குப் பிறகு ‘டிரிக்கர்’ என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவது அனிதாதான். இவரிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் மற்றவர்கள் இவரைப் பற்றி செய்தி வாசிக்கிறார்களோ இல்லையோ... இவரே அதைப் பற்றி 24x7 செய்தி வாசித்து தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்கிறார். ரியோ இதைச் சுட்டிக்காட்டியும் இவருக்கு அது உறைக்கவில்லை.
லெஃப்ட்டில் கை காண்பித்து ரைட் இண்டிகேட்டர் போட்டு நேராகச் செல்வது போன்ற கமலின் விமர்சனங்களைக் கேட்டு பிக்பாஸ் வீட்டு மக்கள் குழம்பி ஆளாளுக்குக் குழுவாக நின்று அனத்திக் கொண்டிருந்தார்கள். ''இந்தப் பொம்மைக்கு உயிர் வந்துடுச்சு... இனிமே பாருங்க” என்று பெருமையடித்துக் கொண்டிருந்தார் சோம். (அனிதாவுடனான கடலையை நிறுத்தினாலே பாதி உருப்படுவீங்க).
சனத்தை தனியாக தள்ளிச் சென்ற அனிதா, படபடவென்று அரை மணி நேரத்திற்கு செய்தி வாசிக்க, 'என்ன இவ... விளம்பர பிரேக் கூட விட மாட்டேன்கிறா’ என்று சனத்தின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.
“கமல் சார் சொல்றதே புரியலே. குழப்பமா இருக்கு" என்று வெள்ளந்தியாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஜித். (அப்ப கமல் ட்வீட்களையெல்லாம் படிச்சா பயபுள்ளைக்கு குளிர்சுரமே வந்துடும் போல). ‘அதாவதுடா.. தம்பி’ என்று பாலா ஒரு மணி நேரம் சொன்ன விளக்கத்தைப் பார்த்த ஆஜித்திற்கு ‘போய்யா யோவ்... இதுக்கு கமல் சொன்னதே எனக்குப் புரிஞ்சுடும்’ என்று நினைத்திருக்கலாம்.
மறுபடியும் அகம் டிவி வழியாக வந்த கமல் “முதல் வாரம் எவிக்ஷன் இல்லைன்னு ஜாலியா இருந்துட்டீங்க. இந்த வாரம் இருக்கு” என்று மக்களிடம் பீதி ஏற்படுத்துவதின் முதல் அஸ்திவாரத்தைப் போட்டார்.
“சின்னப் பையன்னு விட்டுக் கொடுத்திட்டீங்களா அல்லது அதுவும் உங்க உத்திகள்ல ஒண்ணா?” என்று ரம்யாவைப் பார்த்து கமல் கேட்க... ‘அதெல்லாம் தெரியாது சார். அந்த மொட்டை பாஸ் ஜெயிக்கக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன்” என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் சொன்னார் ரம்யா.
“இன்னாடா தம்பி... ரொம்ப ஈஸியா கிடைச்சுதுன்றதுக்காக.. ரொம்ப அசட்டையா இருக்கே போலிருக்கே” என்று ஃப்ரீ பாஸைப் பற்றி ஆஜித்திடம் கேட்க... சங்கடப்பட்டு மென்று முழுங்கிய அவர் ‘பத்திரமாத்தான் ஒளிச்சு வெச்சேன்... ஆனா அதுக்கு யாரும் ஆசைப்பட மாட்டாங்க போலிருக்கு” என்று மற்றவர்களுக்கு சான்றிதழும் அளித்தார். எனில் அதை ஒளித்து வைப்பதற்குப் பதிலாக வரவேற்பையில் ஷீல்டு மாதிரி வைத்து விடலாம்.
“பார்த்துக்க தம்பி... பத்தாவது வாரம் வரை அது உன்னைக் காப்பாத்தும்... ஜாக்கிரதையா வெச்சுக்க” என்று சூசகமான குறிப்பொன்றை சொல்லி ஆஜித்தை எச்சரித்தார் கமல்.
“எனக்கு கேட்க பிடிக்காது, இருந்தாலும் ஒரு அறிவுரை உங்களுக்கு சொல்லட்டுமா... இனிமே கேக்குற இடத்துல மட்டும் அறிவுரை சொல்லுங்க” என்று பிக்பாஸ் வீட்டின் சமுத்திரக்கனியான ஆரிக்கே கமல் அறிவுரை சொல்ல “கரெக்ட்டு சார்... அதேதான் நானும் உங்களுக்கு சொல்ல நினைச்சேன்" என்று பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டார் ஆரி.
ஆஜித்தின் பாஸ் தொலைக்கப்பட்டும் அதை மக்கள் உபயோகிக்காமல் திருப்பித் தரும் நல்லெண்ணம் ஒருவகையில் சரிதான் என்றாலும் இன்னொரு பக்கம் மக்கள் இந்த விளையாட்டை சீரியஸாக விளையாடாமல் தன் இமேஜ் பற்றியே கவலைப்படுகிறார்களோ என்று தோன்றுகிறது. கறாரான நோக்கில் பார்த்தால் ஆஜித்தும் ஒரு சக போட்டியாளர்தான். வயது என்பது அவருக்கு ஒரு சலுகையாக இருக்கக்கூடாது.
இதையே கமலும் குறிப்பிட்டார். "ரொம்ப ஜாக்கிரதையா விளையாடறீங்களோ... கடந்த சீஸன்லாம் பார்த்து” என்று ஆரம்பிக்க, “அப்படியெல்லாம் இல்லை சார்... சின்னப் பையன் கிட்ட திருடித்தான் ஜெயிக்கணும்னு எங்களுக்கு அவசியம் இல்லை. எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கு... வெற்றி நிச்சயம், அது வேத சத்தியம்" என்று மறுபடியும் self improvement கிளாஸ் வாத்தியார் மோடிற்கு சென்றார் ஆரி.
''யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என்பதற்கு முன்னால் யார் காப்பாற்றப்படவிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்’' என்கிற விளையாட்டை பச்சை மற்றும் சிவப்பு பெட்டிகளின் மூலம் ஆரம்பித்த கமல், வழக்கமான சேட்டைகளுக்குப் பிறகு அறிவித்த பெயர்கள்... ஆஜித், ஷிவானி மற்றும் ரம்யா.
‘பாவம் சின்னப்பையன்...’ என்று போட்டியாளர்கள் கருதுவதைப் போலவே மக்களும் நினைக்கிறார்கள் போல. ஃப்ரீ பாஸ் வைத்திருந்தும் மக்களின் வாக்கு மூலம் ஆஜித் காப்பாற்றப்பட்டிருப்பது சிறப்பு.
இந்த வரிசையில் ‘ஷிவானி’யும் காப்பாற்றப்பட்டது ஆச்சர்யம். ஆர்மிக்காரர்கள் தீயாக வேலை செய்கிறார்கள் போலிருக்கிறது. ‘நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா?” என்று ரம்யா ஆர்மியும் நெருப்பாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். முதலில் சுணக்கமாக இருந்தாலும் மொட்டை பாஸூக்கு ரம்யா அளித்த செக்மேட் அவருக்கான இமேஜை பிறகு உயர்த்தியிருக்கக்கூடும்.
"நாலு செவப்புப் பெட்டி இருக்கே. அப்ப நாலு பேரை வெளியே அனுப்பிடுவாங்களா?” என்று சுரேஷிடம் பிறகு கேட்டார் ரேகா. "நான்கு பேரை இப்போதே அனுப்பி விட்டால் பிக்பாஸின் பிஸினஸ் என்னாவது? ஒரே ஆள்தான் வெளியே போவார்... அது நான்தான்’' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் சுரேஷ். சுரேஷின் வெளிப்படைத்தன்மை, அவசியமான நேரங்களில் பாசம் காட்டுவது போன்றவற்றால் அவருக்கு மக்கள் ஆதரவு கூடியிருக்கும் என்றே தோன்றுகிறது.
''என்னை வாழ வைக்கும் தமிழ்மக்களே.. ஆதரிக்க மறந்துடாதீங்க'’ என்று கேமராவின் முன் உருக்கமாக வேண்டிக் கொண்டார் சனம். மூன்றெழுத்து பீதி மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
''எனக்கு பீங்கான் தட்டுல சாப்பிட்டு பழக்கமில்ல. கழுவவும் கஷ்டமா இருக்கு. சில்வர் தட்டு கேட்டிருக்கேன்'’ என்பதை வேண்டுகோள் போல அர்ச்சனாவிடம் நிஷா சொல்ல “இனிமே நான் கழுவிக்கறேன்” என்று சிரிப்பும் சீரியஸமுமாக பதில் சொன்னார் அர்ச்சனா. நிஷா இதற்காக சிரித்து மழுப்ப வேண்டியிருந்தது. அர்ச்சனாவும் ஒரு சக போட்டியாளர்தான். நிஷா அடித்து ஆடலாம். “ஆமா சாமி’ போடத் தேவையில்லை.
Also Read: `சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர்! - பிக்பாஸ் நாள் 12
இதுவரை ரியோ மட்டுமே அந்த வீட்டின் உரிமையாளர் என்பது போன்ற ‘ரோலில்’ இருந்தார். அர்ச்சனா வந்த பிறகு அந்த நிலைமை மாறி விட்டது. இதை கேபியும் உணர்ந்து கொண்டாரோ, என்னமோ... அவரிடம் வலியச் சென்று பேசி நட்பைப் வளர்த்துக் கொள்ள முயன்றார்.
இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கிறவர் என்பது நாளை தெரியும் என்றாலும் ‘அது யார்?’ என்பதை யூகித்து கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.
என் தரப்பில் இருந்து நான் ஒரு ‘க்ளூ’ தருகிறேன். ‘இரண்டெழுத்து’...
source https://cinema.vikatan.com/television/weekend-panchayat-with-kamal-bigg-boss-tamil-season-4-day-13-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக