Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

சென்னை: `நீ ஏன் என் மனைவிக்கு உதவி செய்கிறாய்?’ - துப்பாக்கியால் சுட்ட ஹோட்டல் அதிபர்

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் ஷா (57). இவரின் மனைவி பரகத்துண்ணிஷா (47). இவர்கள் இருவரும் ராயபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் குடியிருந்து வருகின்றனர். சென்னை பாரிமுனை அங்கமுத்து தெருவில் சையது இப்ராஹிம் ஷா சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ஓரே வீட்டில் இருவரும் குடியிருந்தாலும் பேசாமல் இருந்துவந்துள்ளனர்.

சையது இப்ராஹிம் ஷா

பரகத்துண்ணிஷாவுக்கு அவரின் சகோதரி மகன் அன்சாருதீன் (27) உதவியாக இருந்து வந்தார். அது, சையது இப்ராஹிம் ஷாவுக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று அன்சாருதீனிடம் செல்போனில் பேசிய சையது இப்ராஹிம் ஷா “நீ ஏன் என் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறாய்?” என்று கேட்டு சண்டைப்போட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அன்சாருதீன், தன்னுடைய நண்பர்களுடன் சையது இப்ராஹிம் ஷா வீட்டுக்கு இரவில் சென்றார். அன்சாருதீனுடன் மணி என்பவர் மட்டும் 4-வது தளத்துக்கு சென்றார். மற்றவர்கள் கீழ்தளத்தில் இருந்தனர். வீட்டுக்குச் சென்ற அன்சாருதீன் மற்றம் மணியை பரக்கதுண்ணிஷா வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.

இதைப்பார்த்த சையது இப்ராஹிம் ஷா, பாத்ரூம்பிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அன்சாருதீன், குளியல் அறை கதவை தட்டி அவரை வெளியே வருமாறு கூறினார். அப்போது சையது இப்ராஹிம் ஷா, தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாதி கதவைத் திறந்த நிலையில் அன்சாரூதீனை நோக்கி சுட்டார். அன்சாருதீன், இடது உள்ளங்கையில் குண்டு துளைத்தது. துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டு பரக்கதுண்ணிஷா மற்றும் மணி ஆகியோர் சத்தம் போட்டனர். பின்னர் அன்சாருதீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சமயத்தில் சையது இப்ராஹிம் ஷாவின் இடது கையிலும் காயம் ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

Also Read: பீகார் எல்லையில் நேபாளப் பாதுகாப்புப் படை `திடீர்’ துப்பாக்கிச் சூடு! - என்ன நடந்தது?

பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள்

துப்பாக்கி சூடு தொடர்பாக ராயபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சையது இப்ராஹிம் ஷா வீட்டில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 8 குண்டுகள், 2 வெடித்த தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

போலீஸாரின் விசாரணையில் சையத் இப்ராஹிம் ஷா, வைத்திருந்த கைத்துப்பாக்கி லைசென்ஸ் பெற்றது எனத் தெரியவந்தது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அன்சாருதீனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அன்சாருதீன், சையது இப்ராஹிம் ஷா ஆகியோரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதன்அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/hotel-businessman-shoots-his-relative-boy-with-gun-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக