Ad

புதன், 14 அக்டோபர், 2020

நாகை: கடத்தல் சாராயம்; கண்டுகொள்ளாத போலீஸ் - ஆக்‌ஷனில் இறங்கிய பொதுமக்கள்!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே ஓர்குடியில் மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்திவந்தவர்களை பொதுமக்கள் மடக்கி, சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தல் சாராயம்

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து, சாராய பாக்கெட்டுகளாக விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ள ஆனைமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஓர்குடி பகுதியில் அதிகமாக வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறைக்கு பல முறை புகார் அளித்தும் மாமூல் காரணமாக போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள்.

Also Read: `கரைபுரண்டோடிய 1,640 லிட்டர் சாராயம்!' -திருவண்ணாமலையில் இரண்டே நாளில் சிக்கிய 46 பேர்

இந்தநிலையில், ஓர்குடி வெட்டாறு பாலத்தில் இரண்டு மோட்டார் வாகனங்களில் அதிவேகமாக சாராய மூட்டைகளைக் கடத்திவந்த நான்கு பேரைப் பொதுமக்களே மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெட்டாறு பாலம் அருகே அந்தப் பகுதிப் பெண்கள் சாராய பாக்கெட்டுகளுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இது குறித்து கீழ்வேளூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் வருவதற்கு தாமதம் ஆனதால், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சாராயம் கடத்திவந்த நான்கு பேரும் கூட்டத்தில் புகுந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

கடத்தல் சாராயம்

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கீழ்வேளூர் போலீஸார், பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இங்கு சாராயம் விற்காமல் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு பாலீதீன் பைகளில் கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீஸார் அங்கிருந்து கீழ்வேளூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்திவந்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/nagapattinam-village-people-seized-arrack-and-staged-protest-over-inaction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக