Ad

சனி, 17 அக்டோபர், 2020

`தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும்!’- பிரசாரத்தில் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடைபெற்ற பிரசாரப் பேரணியில் கலந்துகொண்ட அதிபர் டொனால்டு ட்ரம்ப், ``ஜோ பைடனைச் சிறையிலிடுங்கள்", ``ஹிலாரியைச் சிறையிலிடுங்கள்’’ என்ற முழக்கங்களை எழுப்பினார். அங்கு கூடியிருந்த பொதுமக்களும் ``சிறையிலிடுங்கள்’’ என்ற கோஷத்தை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக எழுப்பினர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டிருக்கிறார். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதிகமாக இருந்தாலும், அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

இந்தநிலையில், ஜார்ஜியா மாகாணத்தின் மாகானில் (Macon) நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மீதான தாக்குதல்களை அதிகரித்தார். ஜோ பைடனு அவருடைய குடும்பத்தினரும் கைதுசெய்யப்பட வேண்டும் என்றும் பேசினார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ``கடந்த இரண்டு மாதங்களில் ஜோ பைடன் ஓர் ஊழல் அரசியல்வாதி என்பதையும், அவரின் குடும்பம் ஒரு குற்றவியல் நிறுவனம் என்பதையும் கண்டறிந்திருக்கிறோம்’’ என்று பைடனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

ட்ரம்ப் பிரசாரக் கூட்டம்

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், தனியார் நிறுவனம் ஒன்றின் சேவையைப் பயன்படுத்தி ரகசிய மின்னஞ்சல்கள் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை விசாரித்த எஃப்.பி.ஐ., `அதில் உண்மையில்லை’ என்று அறிவித்தது.

Also Read: `எனக்கு கொரோனா வந்தது கடவுளின் ஆசீர்வாதம்!' - விளக்கும் ட்ரம்ப்

அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ட்ரம்ப், `வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியதற்காக ஹிலாரி கிளின்டன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்' என்று சாடினார்.

மேலும், அதிபர் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவாக நாள்களே இருக்கும் நிலையில், உக்ரைன் மற்றும் சீனாவில் ஜோ பைடனின் மகன் ஹன்டரின் வணிக நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களைச் சுட்டிக்காட்டியும் பேசினார் அதிபர் ட்ரம்ப்.

ஜோ பைடன்

டெலாவேர், கணினி பழுதுபார்க்கும் கடையில் கிடைக்கப்பெற்ற கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கிலிருந்த தகவல்கள் தொடர்பாக `நியூயார்க் போஸ்ட்’ கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதை மேற்கோள்காட்டிப் பேசிய ட்ரம்ப், பைடன், தன்னுடைய மகனுடன் சர்வதேச வணிக நடவடிக்கைகள் குறித்து ஒருபோதும் பேசவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், ஹன்டர் பைடன் ஓர் உக்ரேனியத் தொழிலதிபரைத் தனது தந்தைக்கு அறிமுகப்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். மின்னஞ்சல்களில் அந்தச் சந்திப்புக்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றாலும், ஹன்டர் பைடனுக்கு, `உங்கள் தந்தையைச் சந்திக்கும் வாய்ப்புக்கு நன்றி’ எனத் தொழிலதிபர் கூறியதாக நியூயார்க் போஸ்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப்

இது தொடர்பாக ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ``என்னிடம் தற்போது பதில் இல்லை. இது எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பும் நோக்கில் நடத்தப்படும் பொய்ப் பிரசாரம்’’ என்றார்.

மேலும் பேசிய ட்ரம்ப்,``அதிபர் தேர்தல் அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடுவது எனக்கு அழுத்தம் கொடுக்கிறது. நான் தோற்றுவிட்டால், உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா... எனது வாழ்நாள் முழுவதும், `அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரிடம் தோற்றுவிட்டேன்’ என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு என் வாழ்க்கையை நான் நன்றாக உணரப்போவதில்லை. எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை நான் நாட்டைவிட்டுக்கூட வெளியேற வேண்டியிருக்கும்” என்று பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/may-be-ill-have-to-leave-the-country-if-biden-wins-says-trump

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக